சபரிமலை எங்கும் ஒலிக்கும் சரண கோஷம்.. மண்டல பூஜைக்கு ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
சென்னை: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ... சாமியே ஐயப்பா என்று சரண கோஷம் ஒலிக்க ஐயப்பனை காண கார்த்திகை முதல் நாளான நாளை முதல் சபரிமலைக்கு வருகை தருவார்கள். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை. பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் தரிசனம் தரும் ஐயப்பனை தரிசனம் செய்த பல நாட்கள் கடுமையான விரதம் இருந்து வந்து காடு மேடு கடந்து மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் கேட்கும் போதே மெய் சிலிர்க்கும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். முன்பதிவு செய்த பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை 17 ஆம் தேதி அதிகாலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 17 தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். 27 ஆம் தேதி மாலை நடை அடைக்கப்படும்.
டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.












Click it and Unblock the Notifications