ஹரியும் சிவனும் ஒண்ணு.. சங்கரன் கோவில் ஆடித்தபசு திருவிழா கோலாகல கொடியேற்றம்.. குவிந்த பக்தர்கள்
சங்கரன்கோவில்: ஹரியும் சிவனும் ஒண்ணு.. இதை அறியாதவர் வாயில் மண்ணு என்ற தத்துவத்தை உணர்த்தும் ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் 29ஆம் தேதியும் ஆடித்தபசு காட்சி 31ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் காலசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது . இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் ஆகும். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். சங்கன் பதுமன் என்ற இரண்டு நாகங்கள் கோமதி அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் பயம் போகும்.

இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலமாகையால் அன்னை இங்கே மஹா யோகிநியாக , தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள் .
அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது . இதில் அமர்ந்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மனநிலை சரியில்லாதவர்கள் , பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்கின்றனர்.
இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, காமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன. அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும் , யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.
சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின. அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும் .
இங்கு நடைபெறும் ஆடித்தபசு விழா சிறப்பு வாய்ந்தது. அதற்கான புராண கதையும் உள்ளது. சங்கன் பதுமன் என்ற நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சிவன்தான் பெரியவர் என்று சங்கன் சொல்ல, இல்லை இல்லை நாராயணர்தான் பெரியவர் என்று பதுமன் சொல்ல இருவருக்குமே சண்டை வந்தது. நாமாக ஏன் சண்டை போட வேண்டும் அந்த பார்வதியிடமே கேட்டு விடுவோம் என்று இருவரும் அன்னை பார்வதியிடமே சென்று கேட்டு விடுவோம் என்று சென்று பஞ்சாயத்து வைத்தனர். அன்னை என்ன சொல்லுவாள் யாருக்கு ஆதரவாக கருத்து கூறுவாள். அன்னைக்கு தெரியாதா இருவருமே ஒருவர்தான் என்று. நேராக கணவனிடம் போய் சொன்னாள் அன்னை. ஹரியாகிய அண்ணனும், ஹரனாகிய நீங்களும் ஒருவர்தான் என்று மக்களுக்கு உணர்த்துங்கள் என்று சொல்லவே அதற்கு சிவனோ அவ்வளவு சீக்கிரம் நான் காட்சி அளித்து விடுவேனா நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார் சிவன்.
தவம் இருந்தால்தான் வரம் கிடைக்கும் என்று சிவன் சொல்லவே அதைக்கேட்ட அன்னை நான் தவம் இருக்க எங்கு செல்வது என்று கேட்டார். அதற்கு சிவனோ புன்னை வனங்கள் நிரம்பிய வனத்தில் முனிவர்கள் புன்னை மரங்கள் வடிவில் என்னை நோக்கி தவம் இருக்கிறார்கள் அங்கு சென்று நீ தவம் இரு ஆடி மாத பௌர்ணமி நாளில் நான் வந்து காட்சி தருகிறேன் என்று சொன்னார் சிவபெருமான். அதைக் கேட்ட அம்பிகை, குழந்தைகளுக்கு தெளிவு வர நான் தவமிருப்பதுதானே நியாயம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அன்னை. அன்னை கிளம்பிய உடன் கூடவே தோழியர்களும் கிளம்பினார்கள். அவர்கள் பசுக்கூட்டங்களாக அன்னையுடன் தவம் இருக்க அன்னை ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். இன்றைய சங்கரன்கோவிலில் அன்னை இருந்த தவம் நீடித்தது. பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் கோமதி என்று அழைக்கப்பட்டார்.
கோ என்றால் பசுக்கள் மதி என்றால் மதிபோன்ற முகம் கொண்டவர் என்று பொருள். அன்னையின் தீவிர தவத்திற்கு வரம் கிடைக்கும் நாளும் வந்தது. ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தில் வானத்தில் நிலவு ஒளி வீச ஊசிமுனையில் தவமிருந்த அன்னையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் சங்கரநாராயணராக பார்வதி உள்ளிட்ட சகலருக்கும் காட்சிகொடுத்தார்.
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கோமதியம்மனையும் சங்கரநாராயணரையும் காண குவிந்தனர். தினசரியும் கோமதியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் 9ஆம் திருநாளான தேரோட்டம் இம்மாதம் 29ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 11ஆம் திருநாளான ஆடித்தபசு காட்சி 31ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆடித்தபசு காட்சியை காண சங்கரன்கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications