ஊட்டி சர்ச்சில் ஸ்பெஷல் பிரார்த்தனை.. இயேசு கிறிஸ்து அணிந்திருந்த கடைசி வெள்ளை ஆடை: உருகிய நீலகிரி
ஊட்டி: தமிழகத்தில் முதன் முதலாக இயேசு கிறிஸ்து இறந்தபிறகு, அவர் மீது போர்த்திய துணியின் நகல், ஊட்டி சர்ச்சுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு துணியைத் தொட்டு வணங்கி பிரார்த்தனை செய்தார்கள். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம், கல் பங்களா, புனித மரியன்னை ஆலயம், ஸ்டீபன் ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பல்வேறு கட்டிடங்களை கட்டினார்கள்.. இந்த கட்டிடங்கள் இன்னமும் பழமை மாறாமல், வலிமையுடனும், பொலிவுடனும், கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

ஊட்டி தேவாலயம்
இதில், 180 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த புனித மரியன்னை ஆலயம் ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ளது. ஊட்டிக்கு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்வார்கள். அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதன் முதலாக இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட துணியில் ஒரு நகல் சூசையப்பர் தேவாலயத்தில் வைக்கப்பட்டு பிரார்த்திக்கப்பட்டது.
வெள்ளை நிற துணி
இயேசு கிறிஸ்து தனது 33 வது வயதில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட பின்பு கல்லறையில் அடக்கம் செய்தனர். அப்போது அவரை ஒரு வெள்ளை நிற துணியில் சுத்தி அடக்கம் செய்தனர்.
இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு, அந்த வெண்ணிற ஆடை மட்டும் கல்லறையில் இருந்தது. அப்போது அந்த வெள்ளைத் துணியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அவருக்கு இருந்த தழும்புகள் மற்றும் சாட்டை அடி தழும்புகள் பதிந்திருந்தது.
தொட்டு பிரார்த்தித்த மக்கள்
இப்போது வரை அந்த துணி இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துணியின் உண்மை தன்மையை அறிய ஆறு நகல்கள் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு அது உலகம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு நகல் ஊட்டியிலுள்ள உள்ள சூசையப்பர் தேவாலயத்தில் வைக்கப்பட்டது. தமிழகத்தில் முதன் முறையாக உதகை சூசையப்பர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்ட அந்த துணியின் நகலை வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது..
ஊட்டி மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் அந்த துணியை தொட்டு வணங்கி பிரார்த்தித்தார்கள். இதையடுத்து, குன்னூரில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, பின்பு கேரளா எடுத்துச் செல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications