பண்ணாரி மாரியம்மன்.. உள்துறை செயலர் அமுதா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் (தீ மிதித்தல்) இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் குண்டம் இறங்கி ஓடி வரும் போது அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் ஒன்று. பெரும் வனப்பகுதியாக இருந்த பண்ணாரி பகுதியில் காணாம்புற்கள் நடுவே மாரியம்மன் சுயம்புவாக தோன்றினார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஈரோடு மாவட்ட மாரியம்மன் கோவில்களில் பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் களைகட்டும். மாரியம்மன் கோவில் குண்டம் விழாக்கள் ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், குண்டம் இறங்குதல், மஞ்சள் நீராடல் ஆகிய நிகழ்வுகள் இத்திருவிழாவில் இடம் பெறும்.

ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில பக்தர்கள் ஒன்று திரள்வர். இந்த கோவிலில் கம்பம் நடப்படுகிற வழக்கம் இல்லை. பொதுவாக நடைபெறும் தேரோட்டம் கோவில் வளாகத்தில் மட்டுமே நடக்கும்.

குண்டம் எனப்படும் தீ மிதித்தலில் பக்தர்கள் மட்டுமல்ல கால்நடைகளும் கூட இறக்கிவிடப்படும். 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருவீதி உலா செல்லும் பண்ணாரி மாரியம்மன், பண்ணாரி ஆற்றில் பரிசலிலும் பயணிக்கும்.

குண்டம் திருவிழாவில் பழங்குடி மக்கள் பங்கேற்று தங்களுக்கே உரித்தான இசைக்கருவிகளை இசைப்பது வழக்கம். பண்ணாரி குண்டம் இறங்குதல் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

இதன் பின்னர் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உரிய வழிகாட்டுதல்களை வெளியிட தீ மிதித்தல் எனும் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அம்மா! தாயே! மாரியம்மா என்கிற சரணகோஷங்கள் அதிர்ந்தன.
#WATCH | Erode, Tamil Nadu: Devotees take part in a ritual of walking on embers at Bannari Amman Temple, near Sathyamangalam, Erode District. pic.twitter.com/dAgRPnXx7T
— ANI (@ANI) March 26, 2024

ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் இறங்குதல் ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் அமுதா பார்வையிட்டார். பின்னர் அவரும் குண்டம் இறங்கி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டார்.












Click it and Unblock the Notifications