வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..அலகு குத்தி..அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
தேனி: வீரபாண்டி கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப் பெரியாற்றில் இருந்து கௌமாரியம்மன் கோயிலுக்கு முக்கொம்பு வடிவிலான கம்பம் கொண்டு வரப்பட்டு கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தென் மாவட்ட மக்களிடையே பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் கத்திரி வெயிலின் துவக்கத்தில் 8 நாள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருடம் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கம்பம் நடப்பட்டு மே 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 8 நாள் திருவிழாவாக நடைபெற உள்ளது.

மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார்.
அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கௌமாரி பூஜித்து வ்ந்த சிவலிங்கமான கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான் என்று இக்கோயிலின் தல வரலாறு குறித்து சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்தக் கோயிலின் தீர்த்தமாகக் கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை முதல் நாள் திருவிழாவில் கெளமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. மஞ்சள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடினார்கள் பின்னர் ஆற்றங்கரையில் அக்னி சட்டி, பால்குடம் காவடி ஆயிரம் கண் பானை மண்கலயத்தில் தீர்த்தம், மற்றும் உடலில் சேறு பூசி கெளமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். துவக்க முதல் நாளே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த திருவிழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை உதவி மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சித்திரை திருவிழா தேரோட்டத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் காவல்துறையினர் மூன்று சுற்றுக்களாக பணியில் ஈடுபட உள்ளனர். இந்த சித்திரை திருவிழாவிற்காக முல்லைப் பெரியாற்றிலிருந்து 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications