அக்.24 மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்- ட்விட்டரில் #1801திருப்பத்தூர் படுகொலை டிரெண்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்திய மாவீரர்கள் மருது சகோதரர்கள் கி.பி.1801-ம் ஆண்டு இதே அக்டோபர் 24-ந் தேதி தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதை நினைவு கூறும் வகையில் #1801திருப்பத்தூர் படுகொலை டிரெண்டிங் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும் என்பதுதான் பலரது கருத்து. ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூல் உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் பெற்ற முதலே தீரமுடன் யுத்தம் நடத்திய நிலம் தமிழ்நாடு.

Tamil Rebells Maruthu Pandiyar brothers hanged in 1801 Oct.24 at Tirupputhur Fort

வீரன் அழகுமுத்துகோன், நெற்கட்டும்சேவல் புலித்தேவர், கான்சாகிப் மருதநாயகம், சிவகங்கை சீமை முத்துவடுக நாதர், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் இடம்பெறுகிறவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாகனேரி வாளுக்கு வேலி அம்பலம், விருப்பாச்சி கோபால் நாயக்கர் உள்ளிட்டோர். இந்திய வரலாறுகளில் சொல்லப்படுகிற கி.பி.1857 முதலாவது சிப்பாய் கலகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயருக்கு எதிராக தீரமுடன் போரிட்டவர்கள் தமிழர்கள். தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வரலாறு 1700களின் மத்தியில் தொடங்குகிறது. கி.பி. 1755-ல் கட்டாலங்குளம் யுத்தத்தில் வீரன் அழகுமுத்துகோன் வீழ்த்தப்படுகிறார். வீரன் அழகுமுத்துகோனை வீழ்த்திவிட்டு புலித்தேவரிடம் தோற்றுவிட்டு திரும்பிய ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி படையை நத்தம் கணவாய் பகுதியில் துவம்சம் செய்தது தன்னரசு நாட்டு மறவர் படை. தங்களது குலதெய்வ சிலைகளை கொள்ளையடித்துப் போன ஆங்கிலேய படையினரின் தலைகளை சீவி நத்தம் கணவாயில் ரத்த ஆறு ஓடவிட்டனர் தன்னரசு நாட்டு மறவர்கள். இந்த வீரம் செறிந்த யுத்தத்தையும் ஆங்கிலேயர்களே தங்களது நூல்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

Tamil Rebells Maruthu Pandiyar brothers hanged in 1801 Oct.24 at Tirupputhur Fort

நெற்கட்டும்சேவல் புலித்தேவருக்குப் பின்னர் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவை சிவகங்கை சீமையும் பாஞ்சாலங்குறிச்சியும். சிவகங்கை சீமையை ஆண்ட முத்துவடுக நாதர் 1772-ல் காளையார் கோவில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து முத்துவடுகநாதரின் மனைவியான அரசியால் வேலுநாச்சியார், அவர்தம் படைத் தளபதிகளான மருது சகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாச்சி பாளையக்கரரான கோபால் நாயக்கரிடம் அடைக்கலம் புகுந்தனர். யார் இந்த மருது சகோதரர்கள்? விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் என்ற கிராமத்தில் உடையார் சேர்வை- ஆனந்தாயி ஆகியோரின் மகன்கள்தான் மருது சகோதரர்கள். இருவரது போர்த்திறமைகளைப் பார்த்த சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் தமது படைத்தளபதிகளாக நியமித்தார். முத்துவடுகநாதர் படுகொலைக்குப் பின்னர் வேலுநாச்சியாரின் தளபதிகளாக திகழ்ந்தனர் மருது சகோதரர்கள். விருப்பாச்சி காடுகளில் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்த போது திண்டுக்கல் நகரமும் மலைக்கோட்டையும், ஹைதர் அலியின் வசம் இருந்தது. விருப்பாச்சி கோபால் நாயக்கர், ஹைதர் அலி உதவியுடன் 1799-ல் ஆங்கிலேயருக்கு எதிராக யுத்தம் நடத்தி சிவகங்கை சீமையை மீட்டனர் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும்.

Tamil Rebells Maruthu Pandiyar brothers hanged in 1801 Oct.24 at Tirupputhur Fort

இதே கால கட்டத்தில்தான் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தார். 1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். அவரது தம்பி ஊமைத்துரைக்கு மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்தனர். இதனையடுத்து மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான யுத்தம் மூண்டது.

Tamil Rebells Maruthu Pandiyar brothers hanged in 1801 Oct.24 at Tirupputhur Fort

கி.பி.1801 மே 28-ந் தேதி மருது சகோதரர்களின் சிவகங்கை சீமை மீதான தாக்குதலை ஆங்கிலேயர் படை தொடங்கியது. இதனை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் சார்பாக 1801-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி நாவலந்தீவு பிரகடனம் அல்லது ஜம்பு தீவு பிரகடனம் ஒன்றை மருது சகோதரர்கள் வெளியிட்டனர். இன்றளவும் இந்த பிரகடனம் படிப்பவர்கள் மனதில் வீர எழுச்சியை தூண்டிவிடும் வகையில் இருக்கிறது. அந்த பிரகடனத்தில், இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும். ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.

Tamil Rebells Maruthu Pandiyar brothers hanged in 1801 Oct.24 at Tirupputhur Fort

உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

Tamil Rebells Maruthu Pandiyar brothers hanged in 1801 Oct.24 at Tirupputhur Fort

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்... ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்...

இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்...

இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!.... இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்... எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்... இப்படிக்கு, மருது பாண்டியன், பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி. இவ்வாறு நாவலந்தீவு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்குப் பின்னரே மருது சகோதரர்களுக்கு எதிரான யுத்தத்தை ஆங்கிலேயர்கள் தீவிரமாக்கினர். ஆங்கிலேயர்களுடனான மருது சகோதரர்களின் யுத்தம் 150 நாட்கள் நீடித்தது. மருது சகோதரர்களின் படைதளபதிகளில் ஒருவரான பாகனேரி வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தை தங்களது வரலாற்று பக்கங்களில் ஆங்கிலேயர்களும் விவரித்திருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் வாளுக்கு வேலியின் வீரலாற்றை பதிவு செய்திருக்கிறார்.

இறுதியாக கி.பி.1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களுடன் அவர்களது குடும்பத்தினர், உறவினர் என 500க்கும் மேற்பட்டோர் தூக்கில் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். மருது சகோதரர்களின் மகன் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உறவினர்கள் நாடு கடத்தப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.

1801-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் மருது சகோதரர்களின் தலையை துண்டித்து காளையார்கோவிலில் ஆங்கிலேயர்கள் புதைத்தனர் எனவும் கூறப்படுகிறது.

மருது சகோதரர்களுடன் 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் திருப்பத்தூரில் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி படையினரால் படுகொலை செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் #1801திருப்பத்தூர் படுகொலை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

மருது சகோதரர்களின் வீரம், பாகனேரியார் வாளுக்கு வேலி அம்பலத்தாரின் வீரம் தொடர்பான பல்வேறு பதிவுகளும் இந்த டிரெண்டிங் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+