Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதுதான் தமிழர் சமயம் அல்லது மதம்? மறைமலையடிகளார், பாவாணர் முதலான தமிழறிஞர்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

- ஆழ்வார்க்கடியான்

தமிழர் சமயம் என்பது சைவமும் மாலியமும் (வைணவமும்) என்கிறார் சீமான். இந்துக்கள் என்பது சட்டத்தின் அடிப்படையிலானது மட்டும். ஆகையால் இந்துக்கள் என்பவர்கள் அனைவரும் சைவத்துக்கும் வைணவத்துக்கும் திரும்ப வேண்டும் என்பது சீமான் பேச்சு.

சீமானின் இந்த பேச்சு கடும் விவாதங்களை உருவாக்கி உள்ளது. இந்த பின்புலத்தில் தமிழர் சமயம், வழிபாடு தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் கூறியிருக்கிற கருத்துகளின் தொகுப்பு இது:

தமிழர் மதம் தொடர்பான பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பு:

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல்காப்பியம் பொருளதிகாரம்)

'தமிழர் மதம்' என்னும் நூலில் பாவாணர் எழுதி இருப்பதாவ்து:

குறிஞ்சி நில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு. முல்லை நிலத்தில் ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருணவிற்கு வானவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டியதாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் எனப் பெயரிட்டனர். மால்-மா-மாயோன்.

மருதநில மக்கள் வேளாண் மாந்தர். இல்லறத்தைச் சிறப்பாய் நடத்தும் பண்பால் அவர்கள் மறுமை யில் தேவர் ஆவர். தேவருக்கெல்லாம் கோன் தேவர் வேந்தன். இது கருதியே 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்றது தொல்காப்பியம்.

நெய்தல் நில மக்கள் கடலோடு வாழ்ந்ததால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர். வள்-வர்-வார், வார்தல் வளைதல். வார் + அணம் = வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால் கடல் வாரணம். வாரணன்-கடலோன். தொல்காப்பி யர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தவரா தலின், வருணன் என்று வடசொல் வடிவில் குறித்தார்.

பாலைத் தெய்வம் கொற்றவை. நீர்நிலைகளெல் லாம் வற்றி வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக் கற்றுது பாலை நிலம். கொற்றம் - வெற்றி, அம்மை-அவ்வை=தாய். கொற்றம் + அவ்வை=கொற்றவ்வை-கொற்றவை.

(பாவணர் : தமிழர்மதம் - ஐந்திணைத் தெய்வம், பக்.23).

முன்னாளிலிருந்த தமிழர் அனைவரும் இறைவனை ஒளியுருவில் வைத்து வழிபாடு செய்யும் ஒரே கொள்கையினராக இருந்தமையின், அவருள் எவ்வகையான மதப் பிரிவும் இருந்திலது. அதனால் மதம் என்னும் சொல்லே அவர்க்குள் வழங்கப்படவில்லை.

Tamil Scholars research on Ancient Tamil Religion

(மறைமலையடிகள் - தமிழர் மதம், பக்.151, பூம்புகார் வெளியீடு).

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகட்கும் ஐந்து கடவுளர் வழிபாட்டுக்குரியவர்களாய் இருந்தனர். சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகிய இக்கடவுளரைப் பற்றிய எண்ணற்ற புராணக் கதைகள், சிலப்பதிகாரக் காலத்துக்குள் தமிழகத்தில் நுழைந்துவிட்டன. தமிழகத்தில் குடியேறிய ஆரியர் சமயக் கதைகள் பலவற்றைப் புனைந்து பரப்பி விட்டனர். அவர்கள் வேள்விகள் வளர்க்கத் தொடங்கி னர். அதற்குத் தமிழ் மன்னரின் துணையை நாடிப் பெற்றனர்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மாமன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்த வன். அவன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலை களை அமைத்துக் கொடுத்தும் பல வேள்விகளை வேட்பித்தும் தன் பெயருக்கு முன்னால் 'பல்யாக சாலை' என்ற விருது ஒன்றைப் பெற்றுக் கொண்டான். இராசசூய வேள்வி வேட்டுச்-சோழ மன்னன் ஒருவன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பட்டம் பெற்றான். பல்யானை செல்கெழுகுட்டுவன் என்ற சேரமன்னன் பாலைக் கவுதமனார் என்ற புலவர் ஒருவரின் உதவியுடன் ஒன்பது வேள்விகள் வேட்பித்தான்.

(டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு).

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.ப. அறவாணன்::

திராவிடர் சிறுதெய்வ வழிபாட்டினராக இருந்ததுடன் வடக்கே, மகாவீர வர்த்தமானரும், புத்தரும் தோன்றிய பிறகு தழைத்த சைன சமயத்தையும், புத்த சமயத்தையும் பின்பற்றத் தொடங்கி இருந்தனர். இவ்விரண்டு சமயங்களும் பகுத்தறிவு சமயங்கள்; தனிக்கடவுள் மறுப்புச் சமயங்கள்; புரோகித எதிர்ப்புச் சமயங்கள், வேத எரிப்புச் சமயங்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக இங்கே உள்நுழைந்த ஆரியர்கள், திராவிடர் தம் நாட்டுப்புற (Native Worship) வழிபாடுகளையும் அவரிடம் பரவியிருந்த பகுத்தறிவுச் சமயங்களையும் மெல்ல மெல்ல வீழ்த்தித் தம் வேத சமயத்தைப் பரப்பினர்.

வியப்பு என்னவெனில், வேத சமயமே தம் சமயம் என்று திராவிடரே கருதுமளவிற்கு, வேத ஆரியக் கடவுளரைத் திராவிட நாட்டுப்புறத் தெய்வங்களுடன் இணைத்தனர்; பிணைத்தனர். திராவிடமுருகன் 'கார்த்திகேயன்' ஆனான். வடபுலத்துக் கயிலைமலை சிவபெருமானின் 'சேய்' ஆனான். திராவிடத்து அம்மன் 'அம்பாள்' ஆகி, வடபுலத்து இமயமலை சிவபெரு மானின் மனைக்கிழத்தி ஆனாள். கொற்றவை துர்க்கை ஆனாள். வள்ளி மணவாளன், தெய்வானை என்ற ஆரியப் பெண்ணை இரண்டாந்தாரமாக்கிக் கொண்டான். விநாயகன் என்ற புதுக்கடவுள் தோன்றி முருகனுக்கு மூத்தோன் ஆனான். கண்ணகியைப் பெற்றெடுத்த நாட்டார் திரௌபதி கதையைக் கண் விழித்து நாட்கணக்கில் கேட்கலாயினர். இப்படி இன் னும் பல. பற்பல!

Tamil Scholars research on Ancient Tamil Religion

மதவழி மாபெரும் அரசையே அமைக்க இயலும்; கவிழ்க்க இயலும் என்பதில் கரைகண்டவர் ஆரியர். பிற்காலத்து ஐரோப்பிய ஆரியர், ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் மதத்துறவியர் வழியேதான், தம் ஆதிக்க அரசை அமைத்தனர். பண்டைத் திராவிடத்திலும் ஆரியர் தம் மதவழியே, திராவிடத்தைத் தம் காலடிக்கீழ் கொணர்ந்தனர்.

(க.ப. அறவாணன் - தமிழ்ச் சமுதாய வரலாறு - கலப்பியக் காலம், பக்.104 - தமிழ்க்கோட்டம் முதற்பதிப்பு, டிசம்பர் 1994).

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சு. வித்தியானந்தன்:

தென்னாட்டில் நிலவிய சமய வாழ்க்கை பழங்காலத்தில் ஒரு தனிமையான பண்போடு இருந்ததாகத் தெரிகிறது. பிற்காலத்தில் ஆரியர் சமயக் கொள்கைகளும், வழிபாட்டு முறைகளும் அவர் சமய வாழ்விற் புகத் தொடங்கின. எனினும் பல காலமாகத் தமிழர் சமயம் தனக்குரிய சிறப்பியல்புகளை உடையதாகவே இருந்து வந்தது.

வரலாற்றுக்கு எட்டாத பழைய காலத்தில் வெறியாட்டு முதலிய விழாக்களினால் தெய்வங்களை வழுத்தி மகிழ்விக்கும் அளவிலேயே தமிழர் சமயம் அமைந்திருத்தல் கூடும்...

சங்க நூல்களில் விட்டுணு, இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள்ளது உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களையே சிறப்புடன் வழிபட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிகாட்டு முறைகளையும் அந்நூல்களிற் காண்கின்றோம். காலப் போக்கில் ஆரியத் தெய்வங்களுடன் தமிழ்த் தெய் வங்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டன. இப்போது அவற்றைப் பிரித்து வெவ்வேறாகக் காணுதல் அரிதாகி விட்டது.

சில தெய்வங்களை மட்டும் அவ்வாறு பிரித்துக் காண முடியும். காலஞ்செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும் ஆரியருக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன.

(பேராசிரியர் வித்தியானந்தன் - தமிழர் சால்பு, பக்.118, பாரி புத்தகப் பண்ணை, சென்னை-5).

சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களின் காலத்திற்குப் பின்னர் வருணனும், இந்திரனும் அறவே மறைந்துவிடுகின்றனர். சிவன் ஒரு நிலத்துக்கேனும் உரிய தெய்வமாகக் கருதப்படாதது கவனிக்கத்தக்கது. சங்க நூல்களில் மிகச் சில இடங்களிலேயே சிவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் ஓரிடத்திலேனும் ஒரு நிலத்திற்குரிய தெய்வமாகக் கூறப்படவில்லை. ஏழாம் எட்டாம் நூற்றாண்டிற் சைவ நாயன்மாரும் வைணவ ஆழ்வாரும் தொடக்கிய சமய மறுமலர்ச் சியின் பயனாகவே சிவன் சிறப்புற்ற தெய்வமாகத் திகழ்ந்தான். பத்துப்பாட்டில் நான்கு இடங்களிற் சிவனைப் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம்.

இந்த நான்கு இடங்களிற்கூட 'சிவன்' என்ற பெயர் வழங்கப்படவில்லை. எட்டுத்தொகை நூல்களிலேயும் சிவனைப் பற்றிய செய்தியை இடையிடையே காண்கின்றோம். நற்றிணையிலே நானூறு பாக்களைப் பாடிய நூற்றைம்பது புலவரும் சிவனைப் பற்றித் தாம் அறிந்திருந்தமைக்குச் சான்றாக ஒரு செய்தியையும் தரவில்லை.

இவ்வேதுக்களாற்சங்க காலத்திலே சிவ வழிபாடு அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை எனக் கொள்ளலாம்.

(பேராசிரியர் வித்தியானந்தன் - தமிழர் சால்பு, பக்.40, பாரி புத்தகப் பண்ணை, சென்னை-5).

வடமொழியாளர் தமிழகம் புகுந்த காலம் ஏறத்தாழ கி.மு. எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் அறைகின்றனர். அவர்கள் தமிழகத் தில் தங்கள் வேதங்களின் கருத்துக்களைப் பரப்பினர். வேத வேள்விகளைச் செய்தனர். அவர்களது தெய்வ பக்தியைக் கண்டு பாராட்டிய தமிழரசர்கள் அவர்களுக் கென்று புதிய ஊர்களை அமைத்தனர். அவர்கள் குறைவின்றி வாழ வசதி செய்தனர். அவருட் சிலரைத் தம் புரோகிதராகவும் பிற உயர் அலுவலராகவும் அமர்த்தினர்.

இங்ஙனம் தமிழர் சமுதாயத்தில் வேதியர் செல் வாக்குப் பெற்றமையால், தமிழ்நாட்டுச் சமயத் துறை யில் புதிய வழிபாடுகள் நுழைந்தன. வடநாட்டுத் தெய்வங்கள் சில இந்நாட்டில் வழிபாடு பெறலாயின. முல்லைநிலக் கடவுளாகிய மாயோனுக்கு விஷ்ணு வின் அம்சங்களாக ஏற்றப்பட்டன. சிவன் உருத்திரன் ஆக்கப்பட்டான். இந்திர வணக்கம் தோன்றியது. பாலை நிலத் தேவதையான கொற்றவை துர்க்கையாக மாற்றப்பட்டாள். குறிஞ்சி நிலக் கடவுளான முருகப் பெருமான் ஆறு தலைகளைக் கொண்ட கடவுளாக மாற்றப்பட்டான். இங்ஙனம் சமயத் துறை யில் உண்டான மாறுதல்கள் பலவாகும்.

(டாக்டர் பா. இராசமாணிக்கம், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், பக்.235, தமிழ்க் குடியரசுப் பதிப்பகம், சென்னை-5).

தகவல் தொகுப்பு: சிந்தனையாளன், 2013.

ஆக தமிழர்களுக்கு என தனித்த சமயம் ஆதியில் இல்லை. சைவமும் வைணவமும் பின்னால் பக்தி மார்க்க காலத்தில் தமிழருடன் இணைந்தது. அதுவரை இருந்த சமணம், பவுத்தம் உள்ளிட்ட சமயங்கள் வீழ்த்தப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் இவை அனைத்தும் இந்து மதமாக உருமாறின என்பதுதான் வரலாறு. இதனைத்தான் ஆய்வறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மொழியையும், இந்து மதத்தையும் இணைத்து எச்.ராஜா சில நாட்களுக்கு முன் பேசி சர்ச்சையானது. தற்போது சீமான் அதே குரலில் பேசுகிறார். சீமான் உளறல் இந்துத்துவாவினர் திராவிடத்திற்கு எதிரான அரசியலாக, தமிழர்களை இந்துக்கள் என திசைதிருப்புவதற்கு மறைமுகமாக உதவும் வகையில் உள்ளது என்பதுதான் விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+