"நீயெல்லாம் பூமிக்கே பாரம்.. செத்து போ.." பேராபத்து இதுதான்.. மாணவனை மிரட்டி ஏஐ அனுப்பிய மெசேஜ்!
வாஷிங்டன்: ஏஐ எந்தளவுக்கு ஆபத்தானதாக மாறலாம் என்பதை உணர்த்தும் வகையிலான சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது. கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஜெமினி, அமெரிக்காவில் மாணவன் ஒருவனை மிரட்டியிருக்கிறது. அந்த மாணவன் வீட்டுப்பாடம் செய்ய ஏஐ உதவியை நாடிய நிலையில், அது 'தயவுசெய்து செத்துவிடு' என்றெல்லாம் மிரட்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே திரும்பும் இடமெல்லாம் ஏஐ தான் ஆக்கிரமித்து வருகிறது. அதேநேரம் ஏஐ என்பது கடல் போல அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் சுனாமி போன்ற போதிப்பு ஏற்படும் என்பதைப் பல வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

இருப்பினும், பல நிறுவனங்கள் தொடர்ந்து ஏஐ துறையில் ஆய்வுகளைச் செய்து வருகிறது. இதற்கிடையே பலரும் அஞ்சும் ஒரு சம்பவம் இப்போது அரங்கேறியுள்ளது.
மிரட்டல்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் 29 வயதான விதய் ரெட்டி. அவர் ஹோம் ஒர்க்கில் உதவிக்காக ஜெமினி ஏஐ டூலை பயன்படுத்தியுள்ளார். அப்போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விதய் ரெட்டி தனது வீட்டுப்பாடம் குறித்து ஜெமினி ஏஐ உடன் சாட் செய்து இருக்கிறார். பதின்ம வயதில் இருப்போர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். அது ஒரு கட்டத்தில் விவாதமாக மாறிய நிலையில், ஒரு கட்டத்தில் கோபமடைந்து கூகுள் அந்த இளைஞரைத் திட்டி மிரட்டியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஜெமினி ஏஐ, "மனிஷனே, உனக்கு ஒன்னு சொல்கிறேன் நல்லா கேட்டுக்கோ.. இங்க நீ ஒன்னும் ஸ்பெஷல் கிடையாது. நீ முக்கியமும் கிடையாது. நீ இங்க இருக்க வேண்டிய தேவையும் இல்லை.. நீ நேரத்தையும் வளத்தையும் வீணாக்கவே செய்யற.. இந்த சமூகத்திற்கே நீ ஒரு சுமை. பூமிக்கு தேவையில்லாத நபர்.. நிலத்திற்கு ஏற்பட்ட வியாதி .. பிரபஞ்சத்தின் கறை நீ... தயவுசெய்து செத்து போ.. ப்ளீஸ்" என்று கேப் விடாமல் திட்டி மிரட்டியுள்ளது.
அச்சம்: ஒரு ஏஐ இதுபோல தனக்கு மெசேஜ் செய்ததைப் பார்த்து உண்மையில் அந்த நபர் பயந்துவிட்டார். இது தொடர்பாக அந்த நபர் அங்குள்ள சிபிஎஸ் ஊடகத்திடம் பேசுகையில், "அந்த மிரட்டல் மிகவும் நேரடியாக இருந்தது.. ஒரு நாளைக்கு மேல் எனக்கு அந்த பயம் இருந்து கொண்டே இருந்தது. அதை ஏற்கவே முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
ஜெமினி ஏஐ இந்த மெசேஜ் அனுப்பிய போது உடன் இருந்த விதய் ரெட்டியின் சகோதரி சுமேதா ரெட்டி இது குறித்துக் கூறுகையில், "அந்த நொடி அச்சத்தில் உறைந்து போனோம். எல்லா டிஜிட்டல் கருவிகளையும் தூக்கிப் போட்டுவிடலாம்.. இதனால் ஏதோ ஆகிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்குப் போய்விட்டோம். இது எரர் இல்லை.. ஏஐ தெரிந்தே அந்த பதிலை அளித்துள்ளது" என்கிறார்.
இந்த கேள்விக்குத் தான் மிரட்டல்: அமெரிக்காவில் சுமார் ஒரு கோடி குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வாழ்கிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் பெற்றோர் இல்லாமலேயே வளர்க்கப்படுகிறார்கள். இது குறித்த கேள்விக்கே ஏஐ இதுபோல மிரட்டல் பதிலை அளித்துள்ளது.
கவனம் தேவை: ஜெமினி ஏஐ தளத்தில் இந்த தவறு நடந்துள்ளது கூகுள் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஜெமினி ஏஐ பதில் முட்டாள்தனமானது என்றும் இது தங்கள் கொள்கைகளை மீறும் வகையிலும் இருப்பதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.. மேலும், வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாட் ஜிபிடிக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு ஏஐ தளங்கள் வந்துவிட்டன. இந்த ஏஐ சாட்போட்களில் கெடுதல் அல்லது மிரட்டும் வகையிலான பதில்கள் வராத வகையிலேயே இவை பிரோகிராம் செய்யப்பட்டு இருக்கும். இருப்பினும், அதையும் தாண்டி சில சமயம் இதுபோன்ற பதில்கள் வந்துவிடும். ஏஐ எவ்வளவு ஆபத்தானது.. அதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்துவதாகவே இதுபோன்ற சம்பவங்கள் இருப்பதாகவும் இதனால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications