“பெரிய ஸ்டார்ங்கிறது வெறும் மாயை” ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விஷயம், ரஜினி பட இயக்குநருக்கா? குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தனது முதல் படமான தீனா மூலம் நடிகர் அஜித்திற்கு 'தல' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்ததில் இருந்து, தமிழ் சினிமாவில் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார். கஜினி, துப்பாக்கி, கத்தி எனப் பல பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுத்து, பொழுதுபோக்கு படங்களிலும் சமூகக் கருத்துக்களைச் சொல்லும் இயக்குநராகத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால், ரஜினியின் தர்பார் படம் அடைந்த தோல்வி, அவரது சினிமா பயணத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

வெற்றிகள், விமர்சனங்கள், வலிகள்
தர்பார் படத்துக்குப் பிறகு, இந்தியில் இவர் இயக்கிய சிக்கந்தர் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், "முருகதாஸ் அவுட்டேட்டட் ஆகிவிட்டார்," "இவரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது" என்று இளம் தலைமுறை ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு தோல்விக்குப் பிறகு, அடுத்த படத்திற்கான வாய்ப்பு தேடுவது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி முருகதாஸ் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். "பெரிய ஸ்டார்களைப் போய்ச் சந்தித்து, 'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க' என்று கேட்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்" என்று தனது மனக்குமுறலை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
பதிலடி கொடுத்த மதராஸி
அந்த வலிகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். மதராஸி திரைப்படம், கஜினி மற்றும் துப்பாக்கி படங்களின் சாயலில் இருப்பதாகப் பல நேர்காணல்களில் முருகதாஸே கூறியிருந்தார். அதுபோலவே, படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன. இந்த படம், சிவகார்த்திகேயனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்னிலைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய ஸ்டார் சர்ச்சை
மதராஸி படத்துக்குப் பிறகு, ஒரு நேர்காணலில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசிய வார்த்தைகள், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அவர், "சிலர் தாங்கள் மிகத் திறமைசாலிகள் என நம்புவார்கள். அதுவே மிகப்பெரிய மாயை. சிலர், 10 டேக் எடுக்கும் ஒரு காட்சியை நான் ஒரே டேக்கில் முடிக்கிறேன், அதனால் நான் ஒரு பெரிய ஸ்டார் என நினைப்பார்கள். அது உண்மை அல்ல, வெறும் மாயை" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
முருகதாஸின் இந்தப் பேச்சு, இளம் தலைமுறை இயக்குநரான லோகேஷ் கனகராஜைக் குறிப்பதாக நெட்டிசன்கள் மத்தியில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, லோகேஷ் ஒரு நேர்காணலில், "நான் குறைந்த வருடங்களில் அதிகமான பெரிய நடிகர்களை வைத்துப் படம் இயக்கியிருக்கிறேன். இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. எனக்குத் திறமை இருப்பதால் தான் இது சாத்தியமானது" என்று பெருமையாகப் பேசியிருந்தார். முருகதாஸின் இந்தக் கருத்து, லோகேஷின் இந்தப் பேச்சுக்கு ஒரு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு கலைஞனின் திறமைக்கு எப்போதும் ஒரு அங்கீகாரம் உண்டு. வெற்றி, தோல்வி என இரண்டையும் சந்தித்து, தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ள முருகதாஸின் இந்த பேச்சுகள், திரையுலகில் புகழ் என்பது ஒரு மாயை என்பதை உணர்த்துகின்றன.












Click it and Unblock the Notifications