Black Pandi: நான் சர்வதேச கைக்கூலியா? எனக்கு உதவி செய்றவங்களே இவங்கதான்! ஓபனா உடைத்த ப்ளாக் பாண்டி
சென்னை: சினிமா நடிகர்கள் என்றாலே, தங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒரு பொதுவான எண்ணம் இருக்கிறது. ஆனால், அதை உடைத்து, மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று நினைக்கும் சில நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அப்படி, நடிகர் பிளாக் பாண்டி, இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து நான்கு ஏழை மாணவர்களைக் கல்வி கற்பதற்காகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும், அவர் நிறுவிய உதவும் மனிதம் அறக்கட்டளை ஏற்றுக்கொள்கிறது.

இந்த உணர்வுபூர்வமான செயல் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்க, யார் இந்த பாண்டி? இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? என்று சில சர்ச்சைகளும் பரவி வருகின்றன. இதைப் பற்றி பிளாக் பாண்டி பிரபல செய்தி சேனலில் பேசியிருக்கிறார்.
உதவும் மனிதம்
பிளாக் பாண்டி தனது அறக்கட்டளை தொடங்கியது எப்படி என்று விவரித்தார். "கனா காணும் காலங்கள் சீரியல் முடிஞ்ச சமயத்துலதான், நான்கு பேருக்கு நம்மால் முடிஞ்சதைச் செய்யலாம்னு நான் நினைச்சேன். அப்போ லண்டன்ல இருந்து ஒரு ரசிகர் பேசினார். அவர் ஒரு இலங்கைத் தமிழர். அந்த சீரியல் பத்திப் பேசி எனக்கு அறிமுகமாகி, அப்புறம் நல்ல நண்பராகிட்டார். சினிமா தாண்டி எங்க பேச்சு வளர்ந்தப்போதான், உங்களுக்கு இருக்கிற பிரபல்யத்தை வச்சு ஏதாவது செய்யலாமேனு அவர் சொன்னது என்னை ரொம்பவே யோசிக்க வச்சது" என்று கூறினார்.
அந்த லண்டன் ரசிகர் மூலமாக இலங்கையில் இருந்து மேலும் சில நண்பர்கள் கிடைத்ததாகவும், இங்கேயும் தன்னுடைய நட்பு வட்டத்தில் உள்ளவர்களுடன் இணைந்து, உதவும் மனிதம் என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கியதாகவும் பாண்டி தெரிவித்தார். அவர் இரண்டு விஷயங்களில் ரொம்பத் தெளிவாக இருந்தாராம். ஒன்று, ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு இருக்கணும் என்பது. "என் சொந்தப் பணத்தைக் கொடுத்த வரைக்கும் நான் யாருக்கும் கணக்கு சொல்லத் தேவையில்லை. ஆனா உதவி தேவைப்படுறவங்களுக்கும், உதவி செய்யத் தயாரா இருக்கிறவங்களுக்கும் நடுவுல ஒரு பாலமா நான் இருக்க முடிவு செய்ததால, ஒரு ரூபாய்னாலும் ஒளிவு மறைவில்லாம இருக்கணும்கிறதுதான் என் முதல் நோக்கம்" என்று கூறினார். இரண்டாவதாக, உதவி பெறுபவர்களின் தகவல்களைப் பொதுவெளியில் தெரியப்படுத்தக் கூடாது என்பது.
நல்ல காரியங்களுக்கு அவதூறுகள்
அவருடைய சமூக சேவைக்கு எதிராக வரும் விமர்சனங்கள் பற்றி பாண்டி வருத்தத்துடன் பேசினார். யாராவது ஒருத்தன் நல்லா சம்பாதிச்சா, அடுத்தவனுக்கு ஒண்ணும் செய்ய மாட்டான்னு திட்டுவாங்க. ஏதாவது செஞ்சாலும், செய்ய மனசு இல்லாதவங்களை அது உறுத்தும். எதையாவது சொல்லி அதைத் தடுத்து நிறுத்தாம ஓய மாட்டாங்க என்று அவர் ஆதங்கப்பட்டார்.
"என் விஷயத்துலயே சின்ன வயசுல இவன் எப்படி இவ்வளவு உதவி செய்யறான்னு கேக்கறாங்க. யாரோ பெரிய ஆள் ஒருத்தருடைய பினாமியா இருப்பான்கிறாங்க. இவனுக்கு வருமானம் என்னனு அலசறாங்க. என்னென்னமோ பேசறாங்க" என்றார்.
கைக்கூலி சர்ச்சை
இந்த இடத்தில்தான், சமீபத்தில் கே.பி.ஒய் பாலா பற்றி எழுந்த வதந்திகளைப் பற்றிப் பேசினார் பாண்டி. "பாலா விஷயம் உங்களுக்குத் தெரியுமே, சர்வதேச கைக்கூலிங்கிற லெவலுக்கு அது போயிட்டிருக்கு" என்று கூறினார். ஒரு நல்ல காரியம் செய்பவர்களைக் குறிவைத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இது போன்ற வதந்திகள், கலைஞர்களுக்கு ஒரு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பாண்டியின் இந்த செயல், அவருக்கு மட்டும் அல்லாமல், நல்ல காரியங்களைச் செய்யும் அனைவருக்குமான ஒரு குரலாக உள்ளது.
இலங்கை மாணவர்களுக்குக் கல்வி உதவி செய்த விஷயம் பற்றிக் கேட்டபோது, "ரெண்டு மூணு தடவை இலங்கை போயிட்டு வந்ததுல அங்கயும் கஷ்டப்படுற தமிழர்கள் பத்தித் தெரிய வந்தது. ரெண்டு நாட்டுச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, இங்க உதவ முன்வந்த சில கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமாச்சு. உதவும் மனிதம் கிளையை இலங்கையிலும் சீக்கிரமே தொடங்க இருக்கிறோம்" என்று கூறி, நல்ல காரியங்கள் செய்யும் அவரது எண்ணம் உறுதியானது என்பதை நிரூபித்துள்ளார்.












Click it and Unblock the Notifications