சத்தியம் செஞ்சாங்க.. ஆனால் மாறிட்டாங்க.. நளினியை விவாகரத்து செய்ய காரணம் இதுதான்! ராமராஜன் ஓபன்
சென்னை: நடிகர் ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு அருண் மற்றும் அருணா என்ற இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதுகுறித்து பல வருடம் கழித்து ராமராஜன் தான் எதற்காக நளினியை பிரிந்தேன் என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது இணையத்தில் பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.
ஒரே துறையில் இருக்கும் பலர் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமானது தான். அதிலும் பலர் நம்முடைய துறையை பற்றி நம்முடைய துணை ஏற்கனவே புரிந்து வைத்திருப்பார் அதனால் நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று திருமணம் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இவர்களுக்குள் புரிதல் சரியாக இல்லாததால் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து போய் இருக்கிறார்கள்.

அந்த வகையில் திரை துறையில் நடிகை நளினி மற்றும் ராமராஜன் பலரையும் வியக்க வைக்கும் அளவில் திருமணம் செய்து கொண்டனர். அதிலும் நடிகை நளினி அந்த நேரத்தில் முன்னணி நடிகையாக பல கதாநாயகனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சில திரைப்படங்களில் ராமராஜன் அறிமுகம் ஆகி அவரும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் நளினி மற்றும் ராமராஜன் இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது.
இவருடைய காதலுக்கு நளினியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி நளினி மற்றும் ராமராஜன் திருமணம் செய்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக ஆரம்பத்தில் போய்க் கொண்டிருந்தாலும் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் மனம் ஒத்து பிரிந்து விட்டனர்.
ஆனால் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியதே கிடையாது. அதிலும் நளினி இப்போதும் ராமராஜன் மீது எனக்கு காதல் இருக்கிறது. அவர் கொடுத்த காதல் கடிதத்தை இப்போதும் நான் வைத்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லி இருக்கிறார். அதுபோல நளினி மற்றும் ராமராஜனின் மகள் கொடுத்த பேட்டியில் கூட இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் இன்னமும் அதை அன்பும் மரியாதையும் இருக்கிறது ஆனால் சில சூழ்நிலைகளால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ராமராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளிக்கையில் தான் எதற்காக நளினியை பிரிந்தேன் என்று பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நளினி திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து சொல்லியிருந்தார். அதனால் தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க போறேன் என்று சொன்னார்... அது எனக்கு திருப்தியாக இல்லை.
என்னுடைய பெற்றோரும் நளினி நடிப்பதை விரும்பவில்லை. திருமணத்திற்கு முன்பே நான் நடிப்பேன் என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகு நான் நடிக்கப் போகிறேன் என்று அவர் சொல்லியது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் சினிமாவில் எப்படி எனக்கு பிடிக்கவில்லை என்றால் செய்ய மாட்டேனோ அதுபோலத்தான் திருமண வாழ்க்கையிலும் எனக்கு அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் தான் நாங்கள் விவாகரத்து செய்து விட்டோம். எங்களுக்கு விவாகரத்தாகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவர் ஏதாவது கேட்டால் நான் பதில் சொல்வேன் அவ்வளவுதான்... எங்களுக்குள் இப்போது வேறு எதுவும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications