500 ஏக்கர் சொத்துக்கு சொந்தக்காரர்.. அனைத்தையும் இழந்த காமெடி நடிகர் சத்தியன்.. நெகிழ வைத்த காரணம்
சென்னை: தமிழ் சினிமாவில் நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள் மூலம் பிரபலமடைந்த நடிகர் சத்தியனின் குடும்ப பின்னணி பற்றிய தகவல் தான் இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதம்பட்டியில் 500 ஏக்கர் சொத்துக்களை வைத்திருந்த சத்தியன் இப்போது அனைத்தையும் இழந்து சென்னையில் சாதாரணமாக வாழ்ந்து வருகிறாராம்.
சினிமாவால் வாழ்ந்தவர்களும் உண்டு சினிமாவால் வீழ்ந்தவர்களும் உண்டு, சினிமாவும் ஒரு சூதாட்டம் தான் என்று சிலர் பழமொழி சொல்வார்கள். அதுபோலத்தான் சீரியல் நடிகர் சத்யன் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. சத்தியன் பலருக்கும் "நண்பன்" திரைப்படத்தில் "சைலன்ஸர்" கேரக்டராக தான் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன்பே அவர் "இளையவன்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுபோல "கண்ணே உன்னை தேடுகிறேன்" என்ற படத்திலும் நடித்திருந்தார்.

சத்தியன் நடித்த திரைப்படங்கள்
இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்காததால் அதற்குப் பிறகு நண்பன், துப்பாக்கி, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதுவரைக்கும் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சத்தியனுக்கு நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள்தான் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
ஆனால் நடிகர் சத்தியன் கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசு என்பதுதான் அவருடைய சோகமான இன்னொரு பின்னணி. சத்தியம் இன்று முன்னணியான நகைச்சுவை நடிகராக இருந்தாலும் அவருடைய வெளியே தெரியாத கதை பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதாவது சத்தியன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதம்பட்டி என்ற ஊரை சேர்ந்த பெரிய வீட்டு உரிமையாளரின் மகன் தான். கோடிக்கணக்கான சொத்து மதிப்புள்ள சொத்துகளை சொந்தமாக வைத்து இருந்த தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமாரின் ஒரே மகன்தான் சத்தியன்.
500 ஏக்கர் சொத்து
நடிகர் சத்தியன் குடும்பம் ஒரு காலத்தில் சின்ன ராஜ்ஜியம் போன்று இருந்திருக்கிறது. மாதம்பட்டியில் உள்ள அவர்களது பங்களா மட்டும் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. ஒரு காலத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளப்பில் தோப்புகளையும், பல்வேறு சொத்துக்களையும் அவர்கள் குடும்பத்தினர் வைத்திருந்தார்களாம். ஆனால் சத்தியனின் அப்பா சிவக்குமாருக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரிய ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் ஒரு காலத்தில் செல்வ செழிப்புக்கு பெயர் பெற்ற மாதம்பட்டி சிவக்குமார் குடும்பம் இப்போது எல்லாசொத்துகளையும் விற்று விட்டார்களாம்.
அதுபோல தமிழ் சினிமா நடிகர்களான மார்க்கண்டேயன் சிவகுமார் மற்றும் சத்தியராஜ் ஆகியோர் நடிகர் சத்தியனின் உறவினர்கள் தான். சத்யராஜின் அத்தை மகன் தான் சத்தியனாம். சத்யராஜ் சினிமாவுக்கு வருவதற்கு ஆரம்பத்தில் அவருடைய குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அப்போது சத்யராஜுக்கு சப்போர்ட்டாக இருந்தது மாதம்பட்டி சிவக்குமார்தான்.

சத்யராஜின் உறவினர்
சத்யராஜ் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்டபோது மாதம்பட்டி சிவக்குமார் தான் மாத செலவுகளுக்கு பணம் அனுப்பி கொண்டு இருந்தாராம். பிறகு தான் மாதம்பட்டி சிவகுமார் திரைப்பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அதுதான் அவருடைய பணம் அழிவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. தன்னுடைய சொத்துக்கள் ஒவ்வொன்றாக அவர் விற்கத் தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மாதம்பட்டி சிவகுமார் தன்னுடைய மகன் சத்தியனை இளையவன் என்ற திரைப்படத்தை தயாரித்து சினிமாவில் அறிமுகப்படுத்துகின்றார்.
தந்தையின் இறப்பு
இளையவன் படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை. இது அவருக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. மாதம்பட்டி சிவகுமார் இறந்த பிறகு நடிகர் சத்தியன் சில ஆண்டுகளுக்கு முன்புதான் மாதம்பட்டியில் உள்ள தங்களுடைய பழைய பங்களா அனைத்தையும் விற்றுவிட்டு சென்னைக்கு குடி பெயர்ந்து இருக்கிறார். ஒரு காலத்தில் மாதம்பட்டியில் குட்டி ராஜா என்று அங்குள்ள மக்களால் கூப்பிடப்பட்ட சத்தியன் இன்று தன்னுடைய முன்னோர் சொத்துகளை இழந்து இப்போது சென்னையில் குடி பெயர்ந்து இருக்கிறார். இது அவருடைய உறவினர்களையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications