Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல்
சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமான செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுவதும் அஜித்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் பதிவுகள் குவிந்து வரும் நிலையில், பலரும் தற்போது ஒரு விஷயத்தை தேடி வருகின்றனர். "அஜித்தின் தாயார் மோகினி மணி யார்?" என்பதுதான் அந்த கேள்வி.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், தனது குடும்பத்தை எப்போதும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில்லை. அதனால் அவரது பெற்றோர்கள் பற்றிய தகவல்களும் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால் அஜித்தின் வாழ்க்கைப் பயணத்தை திரும்பிப் பார்த்தால், அவரது வெற்றிக்கு பின்னால் அமைதியாக இருந்த மிகப்பெரிய சக்திகளில் ஒருவர் அவரது தாயார் மோகினி மணி.

மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை வரை
அஜித்தின் அம்மா மோகினி மணி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர். அவரது குடும்பம் இந்தியப் பிரிவினை காலத்தில் கராச்சியில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கொல்கத்தாவில் குடியேறியதாம்.
மோகினி மணிக்கும், கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த பி. சுப்ரமணியத்திற்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் என மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் இரண்டாவது மகன்தான் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் அஜித் குமார்.
கவலைப்பட்ட குடும்பம்
சிறுவயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டாத அஜித், பத்தாம் வகுப்புக்கு பிறகு பள்ளிப் படிப்பை தொடரவில்லை. இயல்பாகவே இது எந்த பெற்றோருக்கும் கவலையை ஏற்படுத்தும் விஷயம்.
அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மகனின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டாலும், குடும்பம் அவரை கட்டாயப்படுத்தாமல் அவரது விருப்பத்திற்கு ஏற்ற பாதையை தேர்வு செய்ய அனுமதித்ததாக கூறப்படுகிறது.
மெக்கானிக் வேலை, ஆடை ஏற்றுமதி நிறுவனம், வியாபாரம், மாடலிங் என வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து சென்ற அஜித்தின் ஒவ்வொரு முயற்சியையும் அவரது குடும்பம் அமைதியாக ஆதரித்தது.
நடிகராக மாறிய தருணம்
மாடலிங் துறையில் இருந்தபோது ஒரு விளம்பரத்தில் நடித்த அஜித்தை ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கவனித்தது அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகுதான் சினிமா உலகிற்குள் நுழைந்தார்.
இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் வளர்ந்திருந்தாலும், அவரது ஆரம்ப கால போராட்டங்களில் குடும்பத்தின் ஆதரவு மிகப்பெரிய பங்கு வகித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

பெற்றோர்கள் மீது தனி பாசம்
அஜித் தனது பெற்றோர்கள் பற்றி பொதுவாக அதிகம் பேசியதில்லை. ஆனால் அவர் பேசிய சில அரிய தருணங்களில் பெற்றோர் மீது வைத்திருந்த பாசம் வெளிப்பட்டது. 'வலிமை' திரைப்படம் வெளியானபோது, அந்த படத்தை முதலில் தனது பெற்றோருக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சம்பவம் அப்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
பெற்றோர் இருவரையும் இழந்த அஜித்
கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை பி. சுப்ரமணியம் காலமானார். தற்போது தாயார் மோகினி மணியும் மறைந்துள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்குள் பெற்றோர்களை இழந்துள்ள அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
திரையில் ஆக்ஷன் ஹீரோவாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழும் அஜித்தின் வெற்றிப் பயணத்திற்கு பின்னால், வெளிச்சத்திற்கு வராமல் இருந்த அமைதியான சக்திகளில் முக்கியமானவர் மோகினி மணி. இன்று அவர் இல்லை என்றாலும், அவரது வளர்ப்பும் ஆதரவும் அஜித்தின் வாழ்க்கை வரலாற்றில் என்றும் மறக்க முடியாத அத்தியாயமாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications