தான் நடித்த திரைப்படத்தால் நிறைவேறிய வித்தியாசமான ஆசை..ஆனாலும் நொந்து கொள்ளும் அனந்த் வைத்தியநாதன்
சென்னை: ஏர்டெல் சூப்பர் சிங்கர் வாய்ஸ் எக்ஸ்பர்ட் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் அனந்த் வைத்தியநாதன் தான் நடித்த அவன் இவன் படம் மூலம் தான் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்களை சமீபத்தில் புன்னகையுடன் பகிர்ந்திருக்கிறார்.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக மியூசிக் ரியாலிட்டி ஷோவிற்கு வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்ற புது போஸ்டிங் உருவாக்கி, கலர் கலராக ஆடைகளையும், நகைகளையும் அணிவித்து அனந்த் வைத்தியநாதனை அழகு பார்த்தது விஜய் டிவி.
யார் கண் பட்டதோ..அனந்துவிற்கும் சினிமா ஆசை வந்து இயக்குனர் பாலா கைகளில் சிக்கி விட்டார்.
பரதேசி பட இயக்குனர் பாலா தான் இயக்கிய அத்தனை படத்திற்கும் பரதேசி 1, பரதேசி 2, பரதேசி 3, என்று பெயர் வைக்கும் அளவிற்கு தனது படத்தின் கதாபாத்திரங்களை பரதேசிகளாகவும், அழகில்லாதவர்களாக காட்டுவதில் தனித்திறமை பெற்றவர்.அவரிடம் ஃபுல் மேக்கப்புடன் சென்ற அனந்த் வைத்தியநாதனை மேலும் கீழும் பார்த்த பாலா முதலில் முடியை கோரமாகவும், தாடியை வலிக்காமலும் உருவத்தை சற்று கொடூரமாக மாற்றி வர சொல்லி இருக்கிறார்.
அப்பொழுதாவது அனந்த் வைத்தியநாதன் சுதாகரிக்க வேண்டும். அவரது கிரகம்... தான் அவன் இவன் படத்தில் பெரியதாக சாதிக்கப் போவதாக நினைத்து பாலாவை நம்பி அவர் சொன்னது போல் உருவத்தை மாற்றி உள்ளார்.சூட்டிங்கின் போது தனக்கு அந்தப் படத்தில் வேலை ஒன்றும் இல்லை என்பதை லேட்டாக உணர்ந்து இருக்கிறார் அனந்த் வைத்தியநாதன்.
நேரடியாக பாலாவிடமே சென்று என்னை கொஞ்சம் கர்வமான மனிதன், முரடான மனிதன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை ஏன் அப்பாவியை போல் காட்டுவதாகவே சில காட்சிகள் எடுத்திருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு இயக்குனர் பாலாவும் கொஞ்சம் கூட சலிக்காமல் நீங்கள் பார்ப்பதற்கு முரடாக தெரிந்தாலும் உங்களுக்குள் ஒரு அப்பாவி மனிதன் இருக்கிறான். அந்த அப்பாவி மனிதனையே நான் வெளியே கொண்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று ஒரு உருட்டு உருட்டி உள்ளார்.

ஆஹா...நமக்கு தேசிய விருது கன்பார்ம் என்று படத்தை முடித்து விட்டு வந்த அனந்த் வைத்தியநாதன் படம் ரிலீஸ் ஆன அன்று படம் பார்த்ததோடு சரி... இதுவரை திரும்ப அவர் நடித்த படத்தையே அவர் பார்க்கவில்லையாம். தன்னுடைய அபிமான விஜய் டிவியில் அந்த படத்தை வேறு அடிக்கடி போடுகிறார்கள். நான் நடித்த காட்சி வருகிற பொழுதெல்லாம் எழுந்து நானே ஓட வேண்டியதா இருக்கிறது என்று இப்பொழுது புலம்புகிறார்.
ஆனால் அவன் இவன் படத்தால் தான் நினைத்தது ஒன்று நிறைவேறி விட்டதாகவும் கூறியுள்ளார்.தன்னிடம் ட்ரைனிங் எடுத்த பல மாணவர்கள் தன்னை கடவுள் என்றும் அவர்களை வாழ வைத்தவர் என்றும் தன்னை புகழ்ந்து வந்த அந்த இமேஜ் தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதனை மாற்ற வேண்டும் என நினைத்தது அவன் இவன் படத்தின் மூலம் நடந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications