Bigg Boss Tamil 9: இந்த சீசன் போட்டியாளர்கள் இவர்களா? மாமியாரோடு மருமகளும்! அந்த இயக்குநரும் சர்ச்சை பிரபலமும்!
சென்னை: விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 9, வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. கடந்த சீசனைத் தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சீசனில் கலந்துகொள்ள வாய்ப்புள்ள போட்டியாளர்கள் குறித்த உத்தேசப் பட்டியல் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

பிக்பாஸ் ஆரம்பம் முதல் இன்று வரை
பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கியபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு சீசனிலும், சமூகத்தின் பல்வேறு தளங்களில் பிரபலமானவர்கள், சர்ச்சைகளில் சிக்கியவர்கள், மற்றும் புதிய முகங்கள் எனப் பலரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். ஓவியா ஆர்மி, ஆரி ஆர்மி போன்ற ரசிகர் குழுக்கள் உருவாகி, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. ஒரு சாதாரண பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத் தொடங்கிய பிக்பாஸ், இன்று மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒரு களமாக மாறியுள்ளது.
இந்த சீசனில் உத்தேச பட்டியல்
பிக்பாஸ் குழு, இந்த முறை டிஜிட்டல் தளங்களில் பிரபலமான பலரை நிகழ்ச்சிக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப, சில பெயர்கள் அடிபடுகின்றன.
வாட்டர்மெலன் திவாகர்
மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் திவாகர், கஜினி திரைப்படத்தில் சூர்யா நடித்த காட்சியை வாட்டர்மெலன் சாப்பிட்டபடியே இமிடேட் செய்து வெளியிட்ட வீடியோ மூலம் பிரபலமானார். தன்னைத்தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்று அழைத்துக்கொள்ளும் இவர், தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார். ஜி.பி.முத்து போன்ற சமூக வலைத்தளப் பிரபலங்கள் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பதால், இவருக்கும் வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது.

பிரியா ராமன்
கடந்த சீசனில் கலந்துகொண்ட நடிகர் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன், இந்த முறை ஒரு போட்டியாளராகக் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளரின் உறவினர்கள் அடுத்த சீசனில் பங்கேற்பது என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த வரிசையில் பிரியா ராமன் பெயர் அடிபடுகிறது.

ஷபானா
சின்னத்திரை பிரியாராமனின் மருமகள் என்று அறியப்படும் நடிகை ஷபானாவும் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள். குக் வித் கோமாளியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குச் செல்வது ஒரு டிரெண்டாக இருப்பதால், இந்த வாய்ப்பு இவருக்கு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பிரவீன் காந்தி
முன்னாள் கதாநாயகன் மற்றும் இயக்குநர் என்ற பிரிவில், இயக்குநர் பிரவீன் காந்தியின் பெயர் அடிபடுகிறது. ரேகா, சேரன் போன்றோர் ஏற்கனவே இந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தவிர, அமரன் படத்தில் நடித்த நடிகர் உமர், இன்ஸ்டாகிராம் பிரபலமான ஆரோரா சின்க்ளெர், நடன இயக்குநர் சாண்டியின் உறவினரான சிந்தியா ஆகியோருடன் ஒரு திருநங்கையும் இந்த முறை போட்டியாளராகச் செல்ல வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி, இந்த முறை சமூக ஊடகங்களின் தாக்கத்தை அதிகம் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்டர்மெலன் திவாகர் போன்ற டிஜிட்டல் பிரபலங்கள் உள்ளே செல்வது, நிகழ்ச்சியின் வடிவத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும். சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மேலும் பரபரப்பை ஏற்படுத்துவார். கடந்த சீசனிலே இவர் பேர் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள இந்த சீசன், ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications