Bison box office: இறங்கி அடித்த 'பைசன்’- 10 நாட்களில் இத்தனை கோடி வசூல்! மாரி செல்வராஜ்க்கு டாஸ்க்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய 'பைசன் காளமாடன்' திரைப்படம், அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படம் வெளியாகி 10 நாட்களாகியுள்ள நிலையில், பாக்ஸ் ஆஃபிஸில் குறிப்பிடத்தக்க வசூலைப் பதிவு செய்து, 50 கோடி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பைசன்- சர்ச்சைகளை கடந்த கதை
'வாழை' படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் வாழ்ந்துள்ளார். இந்தப் படம், தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய முரண்கள் மற்றும் கபடி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற அழுத்தமானச் சமூகப் பிரச்சனைகளைப் பேசியதால், வெளியாவதற்கு முன்பே சில சர்ச்சைகளைச் சந்தித்தது. எனினும், படத்தைப் பார்த்த பலரும் மாரி செல்வராஜின் துணிச்சலான கதை சொல்லும் பாங்கு, மற்றும் சமூகத்திற்குத் தேவையான விஷயங்களை அவர் நேர்த்தியாகப் பதிவு செய்த விதத்திற்காகப் பாராட்டினர்.
நடிகர்கள்
இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், நடராஜன் சுப்பிரமணியம், அர்ஜுன் தாஸ், பசுபதி, லால், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு மற்றும் செல்வா ஆர்.கே. படத்தொகுப்பைக் கையாண்டுள்ளனர்.
துருவ் விக்ரமின் உழைப்புக்கு கிடைத்த பாராட்டு
'பைசன்' திரைப்படத்தின் வெற்றி விழா சனிக்கிழமை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், மாரி செல்வராஜ், அமீர், பா. ரஞ்சித், பசுபதி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய நடிகர் துருவ் விக்ரம், "இந்த படத்துக்காக அனைவரும் பெரிய உழைப்பை போட்டிருக்கிறார்கள். நிறைய ஃபைட்டர்ஸ் உண்மையாகவே அடி வாங்கினார்கள். இந்த படத்தில் பசுபதி எனக்கு அப்பாவாக நடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் என்னை ரொம்பவே கம்ஃபோர்ட்டாக பார்த்துக் கொண்டார்."
"சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு இந்த நேரத்தில் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். சினிமாவுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். என்னுடைய 27 வயது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டதைவிடவும், இந்தப் படத்துக்காகச் செலவழித்த காலத்தில் பல விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்" என்று உருக்கமாகப் பேசி இருந்தார்.
பைசன் 10 நாள் வசூல்
'பைசன் காளமாடன்' வெளியாகி இன்றுடன் 10 நாட்களாகியுள்ள நிலையில், படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பதிவு செய்துள்ளது. இப்படம் இதுவரை 32 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் இப்படம் 3 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்குக் தொடர்ந்து மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால், 'பைசன்' திரைப்படம் நிச்சயம் 50 கோடி வசூலை எட்டும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.












Click it and Unblock the Notifications