என் நண்பன் ரொம்ப நல்லவன்.. ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க.. சந்தானத்துக்காக பவன் கல்யாண் காலில் விழுந்த கூல் சுரேஷ்
சென்னை: நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் தீபிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் 16ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சீனிவாசா கோவிந்தா என்னும் பாடல் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருக்கிறது என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருக்கிறார்.

சந்தானத்தின் கோவிந்தா பாடலை உடனடியாக நீக்கி ஏழுமலையான் பக்தர்களிடம் பயங்கர மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா என்டர்டைன்மென்ட், சந்தானம், நடிகர் ஆரியா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பயங்கர மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று எச்சரித்து இருக்கின்றனர்.
டிடி நெக்ஸ்ட் லெவல் சர்ச்சை
அதோடு இந்த திரைப்படம் வெளியானால் தமிழர்கள் யாரும் திருப்பதி கோவிலுக்குள் வர விடக்கூடாது என்றும் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானத்துக்காக கூல் சுரேஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். அப்போது அவர் பேசும்போது என்னுடைய நண்பர் சந்தானம் அவர்கள் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. அந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி கொண்டிருக்கிறது.
நண்பனுக்கு சப்போர்ட்
இந்த நேரத்தில் பவன் கல்யாண் சார் உங்ககிட்ட ஒரு கோரிக்கை வைக்கிறேன், என் நண்பன் சந்தானம் அவர்கள் சந்தனம் வாசனை எப்படி இருக்குமோ அதுபோலத்தான் என்னுடைய நண்பன் சந்தானம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அவ்வளவு நல்லவன் இதை நான் கண்டிப்பா சொல்லுவேன். ஏன்னா நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்லாமல் சந்தானம் மிகப்பெரிய ஆன்மீகவாதி.
சந்தானம் பற்றி கூல் சுரேஷ்
சந்தானம் கூட இருக்கிறவங்களுக்கு தெரியும், சந்தானத்தின் காரில் எத்தனை சாமி போட்டோ இருக்கிறது என்று. இதை எல்லாம் நான் உட்பட பலர் கண்கூடாக பார்ததிருக்கிறோம். அதனால் அவர் சாமியை இழிவுபடுத்துபவர் கிடையாது. ஒருவேளை சாமியை பற்றி ஏதாவது இழிவு நடந்தால் கூட குரல் கொடுப்பவர் சந்தானம் தான். அப்படிப்பட்ட ஆன்மீகவாதி சந்தானம்.
கூல் சுரேஷ் வேண்டுகோள்
இப்போ சந்தானம் நடிச்சிருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் ஒரு பாடல் வந்திருக்கிறது அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று பவன் கல்யாண் சார் உங்க கட்சியை சேர்ந்தவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பவன் கல்யாண் சார் உங்களுக்கு தெரியும் நீங்க ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வரும்போது சொல்லி இருக்கீங்க நான் தமிழ்நாட்டில் தான் வளர்ந்தேன், தமிழ் பேசி தான் படிச்சேன் என்று பல தடவை சொல்லி இருக்கீங்க.
கடவுள் பற்றி பேச்சு
அது மட்டும் அல்ல நீங்க சினிமாவில் இருக்கிறதால உங்களுக்கு ஒரு படத்தை எடுக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். ஒருவேளை நீங்க அந்த படத்தை பார்க்கணும்னு விரும்புனா கூட என் நண்பன் சந்தானத்திடம் சொல்லி உங்களுக்காக ஸ்பெஷல் ஷோ போட சொல்லுறேன். நீங்க அந்த படத்தை பார்த்துட்டு ரிலீஸ் பண்ண சொல்லலாம். காரணம் நீங்க ஒரு நடிகர் அதனால் உங்களுக்கு ஒரு படத்தை ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் என்ற தெரியும். அதனால் அந்த கஷ்டத்தை என்னுடைய நண்பருக்கு கொடுக்க வேண்டாம்.
காலில் விழுந்த கூல் சுரேஷ்
அதுபோல அந்த உங்க கட்சியில் உள்ளவர்கள் சொல்லி இருக்காங்க தமிழ்நாட்டுல உள்ளவங்க யாரும் திருப்பதி கோவிலுக்கு வரக்கூடாதுன்னு. சாமி என்கிறவர் எல்லாருக்கும் பொதுவானவங்க. அந்த சாமியையும் பூமியையும் யாராலும் தடுக்க முடியாது. நீங்க வேண்டாம்னு சொன்னாலும் வீட்டில் பெருமாள் சாமி போட்டோ வச்சு கும்பிடுவோம். வசதி இருக்கிறவங்க திருப்பதிக்கு போய் கும்பிடுவாங்க என்ன மாதிரி வசதி இல்லாதவங்க வீட்டில் போட்டோ வச்சு கும்பிடுவோம். அதனால் பெருமாள் என்பவர் எல்லாருக்கும் பொது சொத்து. ஒருவேளை நீங்க இந்த வீடியோவை பார்த்தா நான் இப்போ உங்க காலில் விழுந்ததற்கு சமம் என்று அந்த மேடையிலேயே கூல் சுரேஷ் கீழே விழுந்து கும்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications