CWC: டி.ஆர்.பி-க்காகவா இந்த ஆட்டம்? அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! குக் வித் கோமாளி ரசிகர்களின் அதிருப்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியின் ஆறாவது சீசன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், இந்த வார எபிசோடில் நடந்த சில நிகழ்வுகள் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன. வைல்ட் கார்ட் மற்றும் செமி ஃபைனல் ஒரே வாரத்தில் வைக்கப்பட்டது ஒருபுறம் ஆச்சரியப்படுத்த, தகுதியான போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைல்ட் கார்ட்
குக் வித் கோமாளியின் ஆறாவது சீசனின் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ராஜி, கடந்த சில வாரங்களாகத் தனது காமெடி திறமையால் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கி வருகிறார். சமையலில் தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற அவர், வெளியேற்றப்பட்டு வைல்ட் கார்ட் சுற்றுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், இந்த வார செமி ஃபைனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ராஜி இருவரும் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மறுபுறம், சமையலில் சிறந்த போட்டியாளர்களாக பல வாரங்கள் செஃப் ஆஃப் தி வீக் பட்டம் பெற்ற பிரியா ராமன் மற்றும் நந்தகுமார் இருவரும் வைல்ட் கார்ட் சுற்றுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமையலில் பெரிய அங்கீகாரம் பெற்ற இவர்களை வெளியேற்றியது சரியில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். டி.ஆர்.பி-க்காக ராஜியை இறுதிப் போட்டிக்கு அனுப்ப விஜய் டிவி இப்படி ஒரு ஆட்டத்தை ஆடுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய் டிவியின் பழைய கதைகள்
இதுபோன்ற நிகழ்வுகள் விஜய் டிவிக்கு புதிதல்ல. பல ஆண்டுகளாகவே, ரசிகர்கள் எதிர்பார்க்காத எலிமினேஷன் மற்றும் சர்ச்சைகளை உருவாக்குவது விஜய் டிவியின் வழக்கமாகவே இருந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் தகுதியான போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு, டி.ஆர்.பி-க்காக சிலரை இறுதிவரை கொண்டு செல்வதாக பலமுறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. உதாரணமாக, மிகவும் பிரபலமான போட்டியாளர்கள் திடீரென வெளியேற்றப்பட்டதும், ரசிகர்கள் ஆதரவைப் பெறாதவர்கள் இறுதிவரை சென்றதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தின.
விஜய் டிவியோடு பிரச்சனை! குக் வித் கோமாளி போக காரணம் இதுதான்! லட்சுமி ராமகிருஷ்ணன் ஓபன்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த சீசனில் ராஜிக்குக் கிடைத்த முக்கியத்துவம், டி.ஆர்.பி-க்கான உத்தியாக பார்க்கப்படுகிறது. என்னதான் ராஜி சமையல் செய்தாலும் அவர் நந்தகுமார் மற்றும் பிரியா ராமன் அளவிற்கு சமையல் செய்யவில்லை என்பதை பல இடங்களில் ராஜியே சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போது அவரை காப்பாற்றி திறமையானவர்களை வெளியேற்றி விட்டார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களின் புலம்பலாக இருக்கிறது. "தகுதியான போட்டியாளர்களை வெளியேற்றி, டி.ஆர்.பி-க்காக ஒரு ஆட்டம் போடுகிறார்கள்" என்ற ரசிகர்களின் கருத்துக்கு இந்த சம்பவம் மேலும் வலுசேர்க்கிறது.
இந்த நிகழ்வுகள், நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையைக் குறைப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த விமர்சனங்களையும் தாண்டி, குக் வித் கோமாளியின் இறுதிப் போட்டியில் யார் வெற்றியாளர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே கடந்த சீசனிலும் பைனல் நிகழ்ச்சிக்கு முந்தைய வாரம்தான் பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அப்போது கூட இந்த நிகழ்ச்சியை பலர் விமர்சித்து வந்தாலும் ஆறாவது சீசன் ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் மீண்டும் அதே சொதப்பலை செய்திருப்பதாக பலர் தங்களுடைய வருத்தங்களை கமெண்டுகளில் கொட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications