தேவயானி மகளா இது! ஆளே மாறிட்டாங்களே! மார்டன் உடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை தேவயானியின் மகள் இனியா தனது 20-வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, இசை ரசிகர்களும் இனியாவுக்கு வாழ்த்துகளை குவித்து வரும் சூழலில், "தேவயானியின் மகள்" என்ற அடையாளத்தைத் தாண்டி, தனக்கென ஒரு பாதையை இனியா உருவாக்கிக் கொண்டு வருகிறார் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியரின் மகள் தான் இனியா. தேவயானி 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் குடும்ப ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து ஓரளவு விலகி, குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த தேவயானி, தற்போது மீண்டும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படியான சினிமா பின்னணி சூழலில் வளர்ந்த இனியாவுக்கு சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கலை மீது ஆர்வம் இருந்திருக்கிறது.
அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக, இனியா ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ச ரி க ம பா" இசை நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது இனிமையான குரலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் அரை இறுதி சுற்று வரை தேர்வாகி, தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

போட்டி நிகழ்ச்சி என்ற அழுத்தமான சூழலிலும், இனியாவின் குரலில் இருந்த மென்மையும் தெளிவும், இசை ரசிகர்களிடையே அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. நிகழ்ச்சிக்கு பிறகும் அவர் பாடல் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் அவ்வப்போது பாடல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தேவயானி முன்பே பல பேட்டிகளில், "என் பிள்ளைகள் என்ன ஆக வேண்டும் என்று நான் முடிவு செய்ய மாட்டேன். அவர்களுக்கு பிடித்த துறையில், முழு மனதுடன் உழைக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று கூறியிருக்கிறார். அந்த வகையில், இனியாவும் சினிமாவா, இசையா என்ற இரு துறைகளுக்கும் இடையே தற்போது பயணித்து வருகிறார் என்று சொல்லலாம்.
"அம்மாவைப் போல நடிகையாக வருவாரா?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்தாலும், அதற்கு இன்னும் இனியா நேரடியாக பதில் சொல்லவில்லை. இந்நிலையில், தனது 20-வது பிறந்தநாளை முன்னிட்டு இனியா பகிர்ந்துள்ள புகைப்படங்களில், ஸ்லீவ்லெஸ் மார்டன் உடை, இயல்பான புன்னகையுடன் மார்டனாக நிற்பது பலரையும் கவர்ந்துள்ளன.

"அம்மாவை மிஞ்சும் அழகு", "சினிமாவுக்கு ரெடி" போன்ற கமெண்ட்களும், "உங்கள் இசைப் பயணம் தொடர வாழ்த்துகள்" என்று மோட்டிவேஷன் கொடுக்கும் கருத்துகளும் பதிவுகளுக்கு கீழே குவிந்து வருகின்றன.
மொத்தத்தில், இனியா தற்போது ஒரு பிரபல நடிகையின் மகள் என்ற அடையாளத்திலிருந்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கும் பாதையில் ஸ்ட்ராங்கான அடிகளுடன் பயணித்து வருகிறார். வரும் காலங்களில் அவர் இசையில் முழுமையாக கவனம் செலுத்துவாரா, அல்லது சினிமாவில் நடித்து புதிய இன்னிங்ஸை தொடங்குவாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications