அண்ணன்னு சொல்லிட்டு, ரோட்டில் விட்டுருவாங்க! மேடையில் சிவகார்த்திகேயனை அட்டாக் செய்த தயாரிப்பாளர்?
சென்னை: பல வருடங்களாக "இப்படம் வருமா... வராதா?" என்ற கேள்விக்குறியோடு இருந்த 'வா வாத்தியார்' படம், ஒருவழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரைக்கு வந்திருக்கிறது. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு கல்ட் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி, கார்த்தியை வைத்து இயக்கிய படம்தான் 'வா வாத்தியார்'.
உண்மையில் இந்தப் படம் புதிதல்ல. பல வருடங்களுக்கு முன்பே படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. ஆனாலும், ரிலீஸ் தேதியை அறிவிப்பதும்... பிறகு திடீரென பின் வாங்குவதுமாக இப்படத்தின் பயணம் நீண்ட நாட்கள் இழுபறியாகவே இருந்தது. அதனால் ரசிகர்கள் மத்தியில் "இந்த படம் வெளிவரவே வராதா?" என்ற சந்தேகமே உருவாகி விட்டது.

நலன் குமாரசாமியைப் பற்றி சொல்வதானால், அவர் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கின்றன. வெவ்வேறு ஜானர், வித்தியாசமான மேக்கிங் - அதுதான் நலனின் அடையாளம். அதனால்தான் கார்த்தியுடன் அவர் கூட்டணி சேர்ந்த செய்தியே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
'வா வாத்தியார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாகிறார். அதோடு சத்யராஜ், ராஜ்கிரண் போன்ற அனுபவம் மிக்க நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, எம்ஜிஆர் ரசிகனாக வரும் கார்த்தியின் கேரக்டர் படத்துக்கு கூடுதல் ஹைலைட் என சொல்லப்படுகிறது.
இவ்வளவு காலம் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்ததற்கு பல காரணங்கள் பேசப்பட்டன. குறிப்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடன் நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அதனால்தான் படத்தை வெளியிட முடியவில்லை என்றும் வதந்திகள் பரவின. இந்தச் சூழலில்தான், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு படம் ரிலீஸ் என அறிவிப்பு வந்தது.
இதனை முன்னிட்டு நேற்று படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய ஞானவேல் ராஜா, "எனக்கு கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான். எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்னை வரும். அந்த நேரத்தில் யார் உடன் நிற்கிறார்கள் என்பதுதான் முக்கியம்" என்று பேசியவர், நடிகர் சூர்யாவை குறிப்பிட்டு உருக்கமாக பேசினார்.
"பிரச்னை வந்தால் மேடையில் அண்ணன், தம்பி என்று அழுது விட்டு, பிறகு நடுரோட்டில் விட்டுவிடுவார்கள். ஆனால் சூர்யா அப்படி இல்லை. என் கஷ்ட காலத்தில் உண்மையிலேயே துணையாக நின்றவர் அவர்" என்ற அவரது வார்த்தைகள், ரசிகர்கள் மத்தியில் வேறு விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்கு பிறகு ஞானவேல் ராஜாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்த அனுபவத்தைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டாரா? இன்னும் அந்த விரிசல் சரியாகவில்லையா? என்ற கேள்விகள் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications