கொஞ்சம் டைம் கொடுங்க! இப்போதைக்கு வேண்டாம்.. CM விஜய் மீதான விமர்சனத்திற்கு இயக்குனர் சேரன் விளக்கம்
சென்னை: தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த விஜய், பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளார். இந்த நிலையில் விஜய் குறித்து இயக்குனர் சேரன் வெளியிட்ட பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

விஜய் முதல் கையெழுத்து
பதவியேற்பு விழாவில் மேடையிலேயே கையெழுத்திட்ட முதல் நடவடிக்கைகளில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது முக்கியமாக பார்க்கப்பட்டது. அதோடு பெண்கள் பாதுகாப்பு படை அமைத்தல், போதைப்பொருள் ஒழிப்பு படை உருவாக்குதல் போன்ற முக்கிய கோப்புகளிலும் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கைகள், அவரது ஆட்சியின் முன்னுரிமைகளை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
ஆனால், 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அறிவிப்பில் குழப்பம் இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் சில சமூக வலைதள பயனர்கள் விமர்சனம் செய்ய தொடங்கினர். மாதத்திற்கு 200 யூனிட் என கூறியதாகவும், தற்போது இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் என மாற்றி கூறப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியது.
இயக்குனர் சேரன் பதிவு
இந்நிலையில், இயக்குநர் சேரன் தனது சமூக வலைதள பதிவின் மூலம் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் உடனடியாக விமர்சிக்காமல், புதிய முதலமைச்சருக்கு ஆட்சி நடத்த சில கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் அனுபவம் இல்லாத புதிய தலைவராக இருப்பதால், சட்ட நடைமுறைகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை புரிந்து கொள்வதற்கு காலம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார். அதே சமயம், இது எந்த வகையிலும் தனிப்பட்ட ஆதரவு அல்ல, சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக தான் இந்த கருத்து எனவும் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, தேர்தலுக்கு முன்பு விஜயை விமர்சித்திருந்த சேரன், தற்போது அவருக்கு ஆதரவாக பேசியது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் அவரது நிலைப்பாட்டை வரவேற்றாலும், சிலர் அதை விமர்சித்து வருகின்றனர்.
சட்டமன்ற கூட்டம்
இதற்கிடையில், விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் சட்டமன்ற கூட்டத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலவச மின்சாரம் திட்டம், பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், புதிய அமைச்சரவையின் பங்கு, ஒவ்வொரு துறைக்கும் வழங்கப்படும் பொறுப்புகள், முதல் பட்ஜெட் தொடர்பான முன்னோட்டங்கள் போன்றவை குறித்து தெளிவான சிக்னல்கள் இந்த முதல் சட்டமன்ற கூட்டத்தில் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
மக்கள் எதிர்பார்ப்பு
மொத்தத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதலமைச்சராக பதவியேற்ற விஜய், ஆரம்பத்திலேயே சவால்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில், மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை செயல்பாடுகளால் நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது. வரும் நாட்களில் அவரது ஆட்சியின் திசை எப்படி அமையும் என்பது தான் அனைவரின் கவனமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications