எலி, பாம்பு கறி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறோம்.. ஓபன் ஆக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் சிறுவயதில் பாம்பு, எலி, முயல், ஓணான் என பலவிதமான கறிகளை சாப்பிட்டதாக பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் தன்னுடைய சொந்த கிராமத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய சிறுவயது நினைவுகள் பலவற்றையும் பகிர்ந்திருக்கிறார்.

அப்போது நான் சென்னைக்கு வேலை தேடி வந்த புதியதில் ஒரு நாள் முழுக்க ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு இருக்கிறேன், காலையில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பிறகு வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன். இரவு நேரத்தில் சிக்கன் ரைஸ் கடையில் லேட்டாகி போனால் அவர்கள் எங்களுக்கு பாவம் பார்த்து அதிகமான ரைஸ் வைத்து தருவார்கள். அதை வைத்து நாங்க மூன்று நண்பர்கள் பிரித்து சாப்பிட்டு இருக்கிறோம்.
அதுபோல எனக்கு கொரோனா காலகட்டத்திற்கு முன்பே நாக்கில் சுவை போய்விட்டது. ஆரம்பத்தில் வீட்டில் சாப்பாடு இருக்காது, அதனால் என்ன இருக்கிறதோ அதை நாங்கள் சாப்பிட்டு இருக்கிறோம். நான் சிறுவனாக இருக்கும்போது வீட்டில் வெறும் சோறு மட்டும் இருக்கும் அதில் வெறும் மிளகாய்த்தூளை தண்ணீரில் கரைத்து அதை சோற்றில் ஊற்றி சாப்பிட்டு இருக்கிறேன்.
அது போல நான் சிறுவனாக இருந்த காலகட்டத்தில் எல்லாம் சனி, ஞாயிறு வீட்டில் சாப்பாடு இருக்காது என்பதால் நாங்க எல்லோரும் சேர்ந்து காட்டுக்கு போய் விடுவோம் எதையாவது பிடித்து அதை சமைத்து சாப்பிடுவது தான் பலருடைய வேலையாக இருக்கும். நான் பாம்பு, எலி, முயல், ஓணான், பறவைகள், முள்எலி என பலவற்றையும் சாப்பிட்டு இருக்கிறேன். அதில் எனக்கு ரொம்பவும் பிடித்தது முயல் கறி தான்.

ஆரம்பத்தில் நாங்கள் வயிற்று பசிக்காக கஷ்டத்தில் எலியை பிடித்து சாப்பிட்டோம். பிறகு அந்த டேஸ்ட் பிடித்து போய்விட்டதால் இப்ப கூட வயல் வரப்புகளில் இருக்கும் எலி பிடித்து பலர் சாப்பிடுகிறார்கள். அதுபோல நான் சிறுவனாக இருக்கும்போது ஆற்றில் கிடந்த வாத்து முட்டைகளை எடுத்து வந்து நண்பர்களோடு சேர்ந்து கிண்டி கொண்டிருந்தோம்.
அப்போது என்னுடைய அண்ணன் அதில் வேப்ப எண்ணையை ஊற்றி விட்டார். நாங்கள் முட்டையை கிண்டி சாப்பிடும் போது அது கசப்பாக இருந்தது. முதலில் எல்லோரும் இது பாம்பு முட்டையாக இருக்குமோ என்று பயந்தோம். பிறகு தான் அது வேப்ப எண்ணையில் ஊற்றப்பட்டது என்று தெரிந்தது. ஆனாலும் அதையும் நாங்கள் விடவில்லை சோற்றோடு வைத்து சாப்பிட்டு விட்டோம் என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

அதுபோல ஒரு காலத்தில் பசி அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் வீட்டில் சாப்பாடு இருக்காது, அதனால் ஏதோ கிடைப்பதை சாப்பிட்டு விடுவோம். அதற்குப் பிறகு வாய்ப்புகள் வந்ததாலும் அந்த நேரத்தில் நேரமில்லாமல் கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு எனக்கு நாக்கில் சுவையே இல்லை.
எதை கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன் இது பற்றி என்னுடைய மனைவி கூட அடிக்கடி கோபப்படுவார். நான் கொடுத்ததை சாப்பிட்டு ருசி பார்த்து நல்லா இருக்கு இல்லை என்று சொன்னால் என்ன என்று கேட்பார். எனக்கு இருக்கிற அவசரத்தில் நான் எதை தந்தாலும் தின்றுவிட்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்கி விடுவேன் இப்ப கூட எனக்கு அப்படித்தான் பழக்கம் வருகிறது.
எதையும் ருசித்து என்னால் சாப்பிட முடியவில்லை என்று அந்த பேட்டியில் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளிப்படையாக பேசியிருக்கும் நிலையில் ஒரு சிலர் இவரை போலவே தாங்களும் சிறு வயதில் காட்டில் கிடைப்பதை பிடித்து கறியாக சமைத்து சாப்பிட்டதாக கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் சீ.. இதையெல்லாம் சாப்பிடுவாங்களா? என்று விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications