டேனியல் பாலாஜி இப்போ இல்ல.. ஆனால் 2 லட்சம்! 120 பேருக்கு உதவி.. இயக்குனர் நந்தா பெரியசாமி எமோஷனல்
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 29, 2024) அன்று காலமானார். இவர் நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர். ஆனாலும் அதை எந்த இடத்திலும் வெளியே சொல்லி வாய்ப்பு கேட்காமல் தன்னுடைய திறமையின் காரணமாகவே சித்தி சீரியல் மூலமாக நடிகராக நடிக்க தொடங்கி அதற்கு பிறகு வெள்ளி திரையிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சித்தி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் இவர் நடித்து பிரபலம் அடைந்ததாலேயே "பாலாஜி" என்ற இவருடைய பெயரை இவருடைய இரண்டாவது சீரியலான "அலைகள்" சீரியலில் தான் "டேனியல் பாலாஜி" என்று இயக்குனர் மாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு திரைப்படங்களிலும் இவர் டேனியல் பாலாஜி என்று பெயர் மூலமாக பிரபலமாகி இருந்தார். அதிலும் இவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் மிரட்டலாக அமைந்திருக்கும்.

சீரியலில் நடித்துக் கொண்டிருந்த டேனியல் பாலாஜி "ஏப்ரல் மாதத்தில்" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா போன்ற திரைப்படங்களில் வில்லனாகவே நடித்து இருந்தார். 48 வயதான இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் இவருடைய இறப்பிற்கு பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் "நந்தா பெரியசாமி" தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேனியல் பாலாஜி பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டு அதற்கு ஒரு உருக்கமான கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் டேனியல் பாலாஜி, "எப்பவாவது துரோகம் பண்றவன் நண்பன்... எப்பவுமே துரோகம் பண்றவன் சொந்தக்காரன். அதனால தான் எனக்கு நண்பனும் இல்ல, சொந்தக்காரனும் இல்ல.." என்று பேசிய டயலாக் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதற்கு நந்தா பெரியசாமி கொடுத்த கேப்ஷனில், " எனக்கு டேனியல் பாலாஜியின் மறைவு பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் 2 லட்சம் ரூபாயை 500 ரூபாயாக மாற்றி அங்கு நடித்த துணை நடிகர்கள் கடைநிலை ஊழியர்கள் என 120 பேருக்கு டேனியல் பாலாஜி உதவி செய்து மகிழ்ந்த போது அவரது கண்களில் கசிந்த கண்ணீர் இப்போது எனக்கு அவருக்காக துளிர்கிறது. மிஸ் யூ ப்ரோ" என்று அதில் பகிர்ந்து இருக்கிறார்.

திரைப்படங்களிலும் சீரியலிலும் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி நிஜத்தில் ஹீரோவாகத்தான் இருந்திருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கும் உதவி செய்து இருக்கிறார். அதோடு அவருடைய அம்மாவின் ஆசைக்காக ஒரு கோவிலும் கட்டி அதற்கு குடமுழுக்கு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். இந்த நிலையில் உயிரிழந்த டேனியல் பாலாஜியின் உடல் அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications