அஜித்தை வைத்து அந்த ஹிட் படத்தின் 2வது, 3வது பாகம் எடுக்க போறேன்! கதை இதுதான்! அறிவித்த ராஜகுமாரன்
சென்னை: இயக்குநர் ராஜகுமாரன் நடிகர் அஜித்தை வைத்து தான் இயக்கிய ஹிட் படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகத்தை எடுக்கப் போவதாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அஜித் இப்போது முன்னணி நடிகராக இருந்தாலும் தன்னுடைய கதையில் நடிப்பதாக சொல்லி இருப்பதாகவும் ராஜகுமாரன் கூறி இருக்கிறார்.
இயக்குனர் ராஜகுமாரன் ஆரம்பத்தில் விக்ரமனிடம் தான் உதவியாளராக இருந்தார். பிறகு அஜித் குமார், பார்த்திபன், நடிகை தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தின் மூலமாக இயக்குனர் ஆனார். அந்த படத்திற்கு பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய நான்கு படங்களிலும் தேவயானி தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.

திருமதி தமிழ் படம் இவருக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தையும் நஷ்டத்தையும் கொடுத்தது. அதற்குப் பிறகு எந்த படத்திலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் இருந்த ராஜகுமாரன் சமீபகாலமாக சில பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதுபோல ஒரு பேட்டியில் தான் நடிகர் அஜித் பற்றி பேசி இருந்தார். அஜித் நீ வருவாய் என படத்தில் நடித்த பிறகு இன்னொரு படத்தில் நாம சேர்ந்து வேலை பார்க்கலாம் என்று சொல்லி இருந்தாராம்.
ஆனால் அதற்காக ராஜகுமாரன் சில மாதங்கள் காத்திருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அஜித் பிஸியாக இருந்ததால் காதலுடன் படத்தை நடிகர் முரளியை வைத்து எடுக்க தொடங்கி விட்டாராம். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அஜித் கோபமாக காத்திருந்தாராம். பிறகு ராஜகுமாரிடம் நீங்க என்கிட்ட சொன்னது போல நடக்கல, நான் உங்க டைரக்ஷனில் இன்னொரு படத்தில் நடிக்கணும் என்று சொன்னேன் ஆனால் நீங்கள் இப்படி பண்ணிட்டீங்க என்று கோபப்பட்டாடாம்.
பிறகு ராஜகுமாரனும் தன்னுடைய சூழ்நிலையை சொன்னதால் அஜித் அதை புரிந்து கொண்டார் என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார். சூழல் இப்படி இருக்க, இப்போது அஜித்குமாரை வைத்து நீ வருவாய் என படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகத்தை இயக்குநர் ராஜகுமாரன் இயக்கப் போகிறாராம். ஏற்கனவே நீ வருவாய் என படத்தில் அஜித் இறந்து போனது போல காட்சி வைத்திருப்பார்கள். ஆனால் அவருடைய உடலை காட்டி இருக்க மாட்டார்கள்.
அஜித் போட்டிருந்த டிரஸை மட்டும்தான் தேவயானியிடம் காட்டுவார்கள். ஆனால் அவர் இறக்கவே இல்லை என்று இரண்டாவது பாகத்திலும், மூன்றாவது பாசத்திலும் காட்டப் போகிறார்களாம். அதிலும் இரண்டாவது பாகத்தில் கொஞ்சம் நேரம் தான் அஜித் வருவாராம். ஆனால் மூன்றாவது பாகம் தான் அஜித்தை வைத்து முழுமையாக உருவாக்கப்படுமாம். இரண்டு பாகத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடத்தப் போகிறாராம்.
அஜித் அந்தப் படத்தில் ராணுவ அதிகாரியாக கச்சிதமாக பொருந்தி இருப்பார். அவருக்கு சில காட்சிகள் தான் இருக்கும் ஆனாலும் அவர் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார், அவரை எந்த இடத்திலும் இறந்து போனதாக காட்டக்கூடாது என்று நினைத்து தான் நான் அப்படி ஒரு கதையே வைத்தேன். காரணம் ஒரு ஹீரோவை பிணமா காட்டக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
ஒரு ஹீரோ நம்மகிட்ட நடிக்க வராங்க என்றால் அவர்களை எந்த அளவிற்கு அழகாகவும், உயர்வாகவும் காட்டுகிறோமோ அப்போதுதான் அந்த படமும் வெற்றி அடையும். அதுதான் என்னுடைய குறிக்கோள். இப்போ நீ வருவாய் என படத்தை தயாரித்த ஆர்பி சவுத்ரியிடம் பேசலாம் என்று இருக்கிறேன்.
ஆனால் அஜித் இப்போ இருக்கிற உயரத்திற்கு தகுந்த சம்பளத்தை அவங்களால் கொடுக்க முடியுமா? இல்லையா? என்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதோடு இந்த கதையைப் பற்றியும் அஜித்திடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications