Rajakumaran: விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது! காரணம் இதுதான்- ராஜகுமாரன் பேட்டி! ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
சென்னை: பிரபல நடிகை தேவயானியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன், சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பற்றி அளித்துவரும் பேட்டிகள் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன. ஏற்கனவே இயக்குநர் மகேந்திரன், கமல்ஹாசன் போன்றோர் பற்றி பேசி பலரின் கோபத்திற்கு ஆளானவர், இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி விமர்சித்ததன் மூலம் புதிய சச்சரவில் மாட்டியுள்ளார். இதனால், சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ராஜகுமாரனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராஜகுமாரன் கருத்து
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜகுமாரன், நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி மற்றும் தேர்தல் வாய்ப்புகள் பற்றி பேசும்போது, "விஜயை நாங்கள் சினிமாவில் பொத்திப் பொத்தி பூங்கொத்து போல் 30 வருடம் பாதுகாத்தோம். இப்போ வெயிலில் மக்களோடு எப்படி நிற்பார்? முதல்வர் ஸ்டாலின் போல் அவரால் தெருவில் நடக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வாய்ப்புகள்
வரும் சட்டமன்ற தேர்தலில், "விஜய் யாரோடும் கூட்டணி வைக்கவில்லை என்றால் டெபாசிட் கூட வாங்க முடியாது" என்று கூறினார். நடிகை தேவயானி பிறந்ததும் விஜய் பிறந்ததும் ஜூன் 22 தான். அந்த நாள் ரொம்பவும் லக்கியான நாள் அதனால்தான் இப்போது வரை இருவரும் உச்சத்தில் இருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். ஒருவேளை விஜய் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்தால் அவருக்கு ஒரு எம்எல்ஏவோ அல்லது மினிஸ்டர் போஸ்ட் கூட கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன் என ராஜகுமாரன் பேசி இருக்கிறார்.
ரசிகர்களின் கமெண்ட்ஸ்
ராஜகுமாரனின் இந்த கருத்துகள் விஜய் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளன. விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ராஜகுமாரனைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "இதுவரை தேவயானி கணவர்" என்ற ஒரு மதிப்பும், மரியாதையும் அவர்மேல் இருந்து வந்தது. ஆனால் அவரது சமீபகால நடவடிக்கையும், பேச்சும் திரைப்பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த 'பொத்தி பாதுகாத்தோம்' பேச்சு விஜய் ரசிகர்களால் நகைச்சுவைக்குள்ளாகி வருகிறது.
விஜய் பற்றி பேசியது மட்டுமல்லாமல், முன்னதாகவே ராஜகுமாரன் பேசிய கருத்துகள் சினிமாவில் கடுமையான விவாதத்தை உருவாக்கின: கலைக்கும், இயக்கத்திற்கும் ஒரு சிம்மாசனமாக பார்க்கப்படும் மகேந்திரன், பாலுமகேந்திரா, கே. பாலச்சந்தர் போன்றோரின் படைப்புகளின் தரம் பற்றி பேசி இருக்கிறார், "மகேந்திரன் எடுத்த படங்கள்லாம் ஒரு படமா? குறிப்பாக 'உதிரிப்பூக்கள்' படம் அவ்வளவு நல்லாவே இல்லை" என்று கூறியிருந்தார்.
ராஜகுமாரன் இப்படி பேசியது இயக்குநர் அமீர் உட்படப பல திரைப் பிரபலங்களின் கோபத்திற்கு ஆளானது. விமர்சனங்கள் அதிகரித்ததால், ராஜகுமாரன் ஒரு விளக்கம் கொடுத்தார். அதில், தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார்.
ராஜகுமாரன் கமல் பற்றியும் விமர்சித்திருந்தார். அதனால் "இவர் எடுத்ததெல்லாம் சாதாரணப் படங்கள், இவர் கமலை பற்றியும், மகேந்திரன் பற்றியும் பேசுகிறாரா?" என்று ரசிகர்கள் அவரைத் தொடர்ந்து கேலிப் பொருள் ஆக்கி வருகின்றனர்.
மொத்தத்தில், இயக்குநர் ராஜகுமாரன் சமீபத்திய பேட்டிகளின் மூலம் பெற்றுள்ள 'தேவயானி கணவர்' என்ற அந்தஸ்தை இழந்து, தற்போது பெரும் விமர்சகர் மற்றும் சச்சரவுக்குரிய பிரபலமாக மாறியுள்ளார் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications