இயக்குநர் வெற்றிமாறனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்! இந்த இடத்தில் கூட எனக்கு ராகிங்! வன்முறை பற்றி கொடுத்த விளக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தனது யதார்த்தமான கதை சொல்லும் பாணியாலும், அழுத்தமான திரைக்கதைகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். வெற்றிமாறன் என்ற பெயரே, நல்ல சினிமாவுக்கான அடையாளமாக மாறியுள்ள நிலையில், அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்தச் செய்தி, சினிமா உலகில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற வெற்றிமாறன்
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில், 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், கலை, விளையாட்டு, தொழில் ஆகிய பிரிவுகளின் கீழ் சிறந்த சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு, சினிமாத் துறை சார்பில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவரைத் தவிர, கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், தொழிலதிபர் ஏ.எம்.கோபாலனுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்தப் பட்டங்களை வழங்கினார்.
வன்முறை குறித்து வெற்றிமாறன் கொடுத்த பதில்
பட்டமளிப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன், "நான் படிக்கும்போது கான்வகேஷன் உடையை அணிந்தது இல்லை. இப்போதுதான் அணிந்துள்ளேன். பட்டம் அளித்த வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும், ஐசரி கணேஷ் சாருக்கும் நன்றி" என்று கூறினார்.
அப்போது, இனிமேல் டாக்டர் வெற்றிமாறன் எனப் பெயர் போடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "எதுவுமே வேண்டாம். என்னுடைய பெயர் மட்டும் போதும்" என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
பின்னர், "டாக்டர் பட்டம் வாங்கிவிட்டதால், இனி உங்கள் படங்களில் வன்முறை காட்சிகள் குறையுமா?" என்று ஒரு நிருபர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்த வெற்றிமாறன், "பள்ளி, கல்லூரியில் ராகிங் பண்ணியதில்லை. ஆனால், என்னை இங்கு வைத்து ராகிங் செய்கிறீர்கள்" என்று நகைச்சுவையாகச் சொன்னார். தொடர்ந்து, "அதெல்லாம் கதையைப் பொறுத்தது" என்று பதிலளித்து, தனது உறுதியான முடிவைத் தெளிவுபடுத்தினார்.
வெற்றிமாறனின் சினிமாப் பயணம்
பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், தனது முதல் படத்திலேயே பெரும் வெற்றியைப் பெற்றார். ஆடுகளம் திரைப்படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றார். பின்னர், விசாரணை, வட சென்னை, அசுரன் எனப் பல சமூகப் பிரச்னைகளைப் பேசிய படங்கள் மூலம், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். இவரது விசாரணை திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.
தற்போது, நடிகர் சிம்புவை வைத்து, வட சென்னை உலகின் பின்னணியில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் படத்தின் அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், வட சென்னை 2 மற்றும் சூர்யா நடிக்கும் வாடிவாசல் போன்ற படங்களையும் அவர் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில், தான் நிறுவிய தயாரிப்பு நிறுவனத்தை மூடியது குறித்துப் பேசிய அவர், "நிறைய வேலைகள் மற்றும் வேறு சில அழுத்தங்கள் இருந்ததால்தான் நிறுவனத்தை மூடினேன். அது தோல்வி அல்ல" என்று விளக்கமளித்தார். சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் அதிகம் பேசாமல், தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வரும் வெற்றிமாறன், இந்திய சினிமாவிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications