போராடி வாழ்க்கையில் முன்னேறிய மணிமேகலை - ஹுசைன்.. கோவை அருகே கட்டிய “பண்ணை வீடு” தெரியுமா?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் தொகுப்பாளினி மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 'குக்' ஒருவர் தனது பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டி இந்த முடிவை எடுத்திருக்கிறார் மணிமேகலை. மணிமேகலை, ஹுசைனை காதல் திருமணம் செய்த பிறகு ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்த ஆண்டு தான் கோவை அருகே கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டைக் கட்டி முடித்தார்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதனுடைய 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் விஜே பிரியங்கா, விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, சுஜிதா, ஷாலின் சோயா உள்ளிட்ட 10 நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாக இருக்கின்றனர்.

வெளியேறுவதாக அறிவித்த மணிமேகலை: இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் தொகுப்பாளினி மணிமேகலை. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் "இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும் அதில் என்னுடைய நூறு சதவிகித உழைப்பை கொடுக்கும் திறன் என்னிடம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பயணித்து வருகிறேன். இருப்பினும் எதை விடவும் எனக்கு சுயமரியாதை முக்கியம். அதை இழந்து எந்த ஒரு இடத்திலும் இருக்க நான் விரும்பவில்லை.
நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு அதுவே முதல் காரணம். CWC நிகழ்ச்சியின் இந்த சீசனில், குறிப்பிட்ட பிரபலமான ஒரு பெண் தொகுப்பாளினி, அதுவும் குக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்னுடைய பணியில் அடிக்கடி குறுக்கிட்டு என்னுடைய வேலையை நான் சரியாக செய்யாத வண்ணம் பார்த்துக் கொண்டார். அவருடைய ஆதிக்கமே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.
குக் வித் கோமாளி ரசிகர்கள் ஷாக்: கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்த துறையில் நான் பயணித்து வருகிறேன். இந்த 15 ஆண்டுகளில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அந்த பெண் தொகுப்பாளினி நடந்து கொண்டது போல ஒரு முதிர்ச்சியற்ற நடத்தையை நான் எப்போதும் யாரிடமும் கண்டதில்லை. எனவே நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். வாழுங்கள் மற்றவர்களையும் வாழ விடுங்கள் கடுமையாக உழையுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த திடீர் அறிவ்ப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மணிமேகலை - ஹுசைன் ஜோடி: சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்பட்டவர் மணிமேகலை. இதை தொடர்ந்து, ஹுசைன் என்பவரை மணிமேகலை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் மற்றும் சகோதரர்களை எதிர்த்து காதலித்தவரையே கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட மணிமேகலை விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு அசத்தினார்.
பின்னர் அடுத்தடுத்து, விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரணகளம் செய்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப்புகளில் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். எப்படிப்பட்ட வேடம் போட்டாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி தனது திறமையை வெளிப்படுத்துவது மணிமேகலையின் தனிச்சிறப்பு.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி கோமாளியாக இருக்க மாட்டேன் என கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கடந்த சீசனில் கூறிய மணிமேகலை, பின்னர் தொகுப்பாளினியாக ஃபைனலில் என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும், ரக்ஷனுடன் சேர்ந்து தொகுப்பாளராக களமிறங்கினார்.
கிராமத்தில் வீடு: மணிமேகலை கொரோனா ஊரடங்கு சமயத்தில் கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், சில காலம் அங்குதான் வசித்து வந்தார். பின்னர் அங்கு யூடியூப் ஒன்றையும் துவங்கி அந்த ஊரில் எடுக்கும் பல வீடியோக்களை பதிவிட்டார். அந்த ஊர் மணிமேகலை - ஹுசைன் இருவருக்குமே மிகவும் பிடித்து விட்டதால், அங்கே நிலம் வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். வீடு கட்டும்போது ஒவ்வொரு அப்டேட்டையும் தங்களது யூ- டியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
கனவு வீடு: அங்கு வீடு கட்டி வந்த நிலையில், வீட்டின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சில மாதங்களுக்கு முன்புதான் மிகவும் எளிமையான முறையில் கிரஹப்பிரவேசம் நடத்தினர். தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் வேலை இல்லாத நாட்களில் மணிமேகலையும் ஹுசைனும் அங்கு சென்று தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மணிமேகலையின் இந்த புதிய பண்ணை வீடு கோவையில் இருந்து சுமார் 1 மணி நேரம் பயண தூரத்தில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications