நடிகை ஷோபா மறைந்த போது பாலு மகேந்திராவுக்கு ஏற்பட்ட உணர்வுதான் மூன்றாம் பிறையா?
சென்னை: மூன்றாம் பிறை படம் பார்த்திருக்கிறீர்களா. அதில் உள்ள கிளைமாக்ஸ் காட்சியில் கமல், ஸ்ரீதேவியின் நடிப்பு உச்சகட்டமாக இருக்கும். இந்த கதையை பாலுமகேந்திரா எப்படி எடுத்தார் தெரியுமா?
இதுகுறித்து டாக்டர் செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது : உச்சகட்டம்... உச்சகட்டம் அதாவது க்ளைமாக்ஸ் படத்தின் முடிவாக இருக்கலாம் சில படங்களில். ஆனால் அது நம் மனதில் தொடக்கமாக இருக்க வேண்டும். அது தான் Climax the best என அழைக்கப்படுகிறது.

அப்படி படம் பார்த்து வெளியேறுபவர்கள் மன அழுத்தத்தோடு, கலங்கி வெளியேறும் க்ளைமேக்ஸ் தான் 'மூன்றாம் பிறை' க்ளைமேக்ஸ்.
சீனு அடிப்படையில் கோழை. அதாவது நல்லவன். தன் நண்பன் விபச்சார விடுதிக்கு அழைக்கும் போது தவறென தெரிந்தும் போகிறான். அங்கு தான் சீனு நட்பை மதிக்கிறான். அங்கு அவன் முன் ஒரு குழந்தையை பார்க்கிறான்.
யாருக்கு தான் ஒரு குழந்தையை தவிக்க விட மனசு வரும். ஆனால் குழந்தையிடம் சீனு காதல் கொள்வது வயசுக்கோளாறென்றால் தன் முன் சில்க் பச்சையாக கேட்டும் ஒதுங்கிப் போகிறான் எனில் அது வயசுக்கோளாறில்லை. அது ஒரு பந்தம்.
என்னவென சொல்ல முடியாத பந்தம். Uncle...uncle என அழைத்துக் கொண்டிருந்த ஷோபாவை தாலி கட்டி மனைவியாக்கியது பாலு தெரிந்தே செய்தது தான். சீனு விஜியிடம் அந்த பந்தத்தில் ஆட்பட்டு பைத்தியமாகிறான்.
'மூன்றாம் பிறை' படத்தின் இந்த க்ளைமேக்ஸில் சீனு தன் விஜி போய்விட்டது அறிந்து ரயில் கிளம்பும் முன் ஓடி வருகிறான். ஓடி வந்த அந்த சேறு சட்டை முழுவதும் ஒட்டிக் கொள்வதோடு கை காலிலும் பலத்த அடி. அதோடு அவன் கூப்பிடும் குரல் கூட கேட்காதபடி 'சீனா தானா' அரசியல்வாதியின் சப்தம்.
அப்போதும் விஜிக்கு சீனுவை தெரியாததால் சைகை மூலம் அடையாளப்படுத்த முயல்கிறான். விஜியோ யாரோ பைத்தியக்காரன் போல என நினைத்து உணவுப் பொட்டலத்தை வீசி எறிய அது கீழே விழுகிறது. அங்கு கீழே விழுவது பார்வையாளனின் இதயமும் தான்.
குரங்கு போல செய்த சேஷ்டைகளை செய்து காண்பிக்க சீனுவின் முயற்சியும் அதனால் குடத்தை தலையில் வைத்து 'ஆடுறா ராமா' செய்து காண்பித்தாலும் விஜிக்கு தெரியாதது படம் பார்ப்பவனை கலங்கச்செய்து விடும். விளக்கு கம்பம் கூட தெரியாது மோதியதும் கீழே விழும் சீனு எழுவதற்குள் விஜியோடு ரயில் உயிரை எடுத்துக் கொண்டு போய்விடும்.
சீனுவின் அழுகையை அன்று அருகில் வந்து பார்த்து அந்த கேத்தி சிறுவன் என்ன என கேட்கிறான். ஆனால் சீனுவின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. கையை மட்டும் நீட்டி ரயிலை காண்பிக்கிறான். பின் நிதானமாக எழுந்து நொண்டி நொண்டி நடந்து வரும் சீனு மட்டுமே அங்கு தனியனாகிறான். உலகத்தில் தனிமை எவ்வளவு கொடுமை. எல்லா ஆண்களுக்கும் ஒரு பெண் தான் சாகும் வரை துணை.
அதுவே போனபோது.....தூரத்தில் இரண்டு, மூன்று ஆடுகள் மட்டும் சுதந்திரமாக புல் மேய்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்ணதாசனின் வரிகளோடு சீனு சிமெண்ட் சேரில் சாய 'கேத்தி' என்கிற போர்டு தெரிய A film by Balu mahendra என டைட்டிலோடு படம் முடிகிறது. நம் மனத்தீ தொடங்குகிறது.
இந்த க்ளைமேக்ஸ் ஏன் நம்மை கலங்க வைத்தது?. எப்போதுமே பிரிவு வாழ்வில் கடவுள் நமக்கு தரும் கசப்பு. அது நம்மை ஆட்டி வைத்துவிடும். நிலை குலைய செய்து விடும். சீனுவுக்கு விஜியின் பிரிவு தாங்கவொண்ணாததை விட படம் பார்ப்பவனுக்கு தாங்கவே முடியவில்லை. அது தான் அந்த இயக்குனரின் உழைப்பு. கூடவே இருந்து விட்டு திடீரென மறைந்து விட்டால் யாருக்கு தாங்கும்?. பார்க்கும் ரசிகனும் கண்ணீர் விடுகிறான்.
பாலு மகேந்திராவுக்கு ஷோபா மறைந்த போது ஏற்பட்ட உணர்வின் அனுபவமே மூன்றாம் பிறை. இது பாலுவே சொன்னது தான். ஷோபா பாலுவை மட்டுமா பிரிந்தார்?. ஒரே முரண் தான். படத்தில் சீனு, விஜி மீது காட்டும் காதலை ஒரு சதவீதமாவது ஷோபாவிடம் காட்டியிருந்தால் ஷோபா தற்கொலை செய்திருப்பாரா?.
ஷோபா இறந்து சில வருடங்களில் அவர் தாயும் தற்கொலை செய்து கொண்டார். பாலுவின் முறையற்ற காதல் என்பதை விட முறையற்றது என சமூகத்துக்கு பாலு காட்டியதால் தானே ஷோபா இறந்தார்.
விஜியாக நடிக்க முதலில் ஸ்ரீப்ரியாவையே அழைத்திருக்கிறார் பாலு.
ஆனால் கால்ஷீட் இல்லாததால் ஸ்ரீதேவி வர அது அந்த படத்தையே வேறொரு லெவலுக்கு கொண்டு போனது. கமலா, ஸ்ரீதேவியா என்கிற மௌனப் போட்டியை கண்ட பாலு இதையே ஹிந்திக்கு கொண்டு போன போது டிம்பிள் கபாடியாவிடமே சென்றார். டிம்பிள் அப்போது சாகர் படத்தில் ரீ என்ட்ரி.
ஒரு தென்னிந்திய படத்தின் ரீமேக்கை விட சாகர் தான் சிறந்ததாக அவருக்கு தோன்றியது. மற்றொரு பாபியாகுமென அவர் சத்மாவை உதறினார். இம்முறையும் லக் ஸ்ரீதேவிக்கே போனது. இம்முறை விஜி மூக்கு ஆபரேஷன் செய்து அழகான வளைந்த மூக்குடன் ரெஷ்மியானார். சீனு சோமுவாகி படம் வந்தது. ஆனால் ஏனோ விஜியின் இன்னசன்ஸ் ரெஷ்மியிடம் இல்லை. ஷோபா தென்னிந்தியப்பெண் தானே...விஜி மாதிரி....பாலுவின் கண்களில் ஷோபா தானே. பாலுவின் மிகப்பெரிய வெற்றி தன் மனைவி ஷோபாவை இழந்த போது ஏற்பட்ட வலியின் அளவை நம்மிடம் கடத்தி விட்டது தான். எத்தனை பிரில்லியண்ட்....
ஊட்டியிலுள்ள கேத்தி ரயில் நிலையத்தில் தான் அந்த மனதை உருக்கும் 'உச்சகட்டம்' நிகழ்ந்தது. சில நாட்களுக்கு முன் அதே ரயில் நிலைய தண்டவாளங்களில் காதை வைத்து விஜியோடு ரயில் சப்தம் கேட்ட காலம் காலமாகி விட்டது தான் இந்த உச்சகட்டத்தில் நினைவுக்கு வருகிறது.
கேத்தி ரயில் நிலையம் அற்புத இயற்கையின் கொடையில் அமைந்திருக்கிறது. சங்கர் லால் படத்தில் கமல் இதே கேத்தி போர்டின் மீது ஊட்டி என எழுதி ரயிலில் வருபவரை கடத்திக் கொண்டு போவார். ஜென்டில்மேனில் கவுண்டமணி முதல் காட்சியில் அர்ஜுன் கொளையடிக்க போலீசை நிறுத்துவது இங்கு தான். 'பூந்தளிராட' பன்னீர் புஷ்பங்கள் மலர்ந்தது இங்கு தான்.
கண்ணதாசன் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி. அதனால் அவர் மனைவி அவரோடு பேசுவதையே நிறுத்தி விட்டார். தன் பிள்ளைகள் சொல்லியும் அவர் பேசவில்லையாம். கண்ணதாசனுக்கு அப்போது பெரிதாக தோன்றவில்லை. ஆனால் தான் நோய்வாய் பட்டு அமெரிக்கா சிகிச்சைக்கு போகிறோம் என்கிற போது தன் மனைவியை நினைத்து அவர் எழுதியது தான் 'கண்ணே கலைமானே...'. இந்த க்ளைமேக்சில் நம்மை உருகி அழ வைப்பது கண்ணதாசனின் அந்த ஏக்க வரிகள் தாம்.
அதோடு கவிஞரும் மறைந்தும் போனார் இந்த விஜி மாதிரி. சீனுவாக கமல் வாழ்ந்த க்ளைமேக்ஸ் படத்துக்கு தான் முடிவு. நமக்கு ஒரு உணர்வின் தொடக்கம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications