16 வயதில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து! 31 வயதிலேயே மரணமடைந்த முன்னணி நடிகை! யார் இவர்?
சென்னை: சினிமா வாழ்வில் உச்சம் பெற்ற நடிகைகள் அப்படியே காணாமல் போயுள்ளார்கள். இவர்களில் முக்கிய உதாரணங்கள் என்றால் ஷோபா, படாஃபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி உள்ளிட்டோரை சொல்லலாம். இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்த நிலையில் திடீரென தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.
இளம்வயதிலேயே நடிக்க வந்து, தங்களது அபாரமான நடிப்புத் திறமையால் ஜொலித்த இவர்கள் பெரும்பாலும் காதல் தோல்வியால் வாழ்க்கையை முடித்துக் கொண்டு வானில் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மேலும் ஒரு நடிகை குறித்து பார்க்கலாம்.

16 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தார். தனது நடிப்பு மற்றும் அழகால் வெள்ளித் திரையில் புதிய முத்திரை பதித்தார். சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் அவருக்கு நிகழ்ந்த சோகம் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாகியது. அந்த நடிகைதான் ஆர்த்தி அகர்வால்.
குஜராத்தைச் சேர்ந்தவர் இவர். பாலிவுட் நடிகரும் தர்பார் பட வில்லனுமான சுனில் ஷெட்டியால் இந்தி படத்தில் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தெலுங்கு படத்திலும் அதே ஆண்டில் நடித்தார். அந்த படத்தில் வெங்கடேஷுடன் இணைந்து நடித்தார்.

இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து ஆர்த்தி அகர்வாலுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இதனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருக்கு கிளாமர், குடும்ப ரோல், ஆணவம் பிடித்த ரோல் என எதுவாக இருந்தாலும் செட் ஆகிவிட்டது. இவர் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலய்யா (பாலகிருஷ்ணா), மகேஷ்பாபு, ரவி தேஜா, பாகுபலி புகழ் பிரபாஸ் போன்றோருடன் நடித்திருந்தார்.
கவர்ச்சி வேடங்கள் மட்டும் இல்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். வில்லத்தனத்தை தன் கண்களிலேயே காட்டும் திறமை இவருக்கு உண்டு. தமிழில் கூட "வின்னர்" படத்திலும் "பம்பர கண்ணாலே" படத்திலும் நடித்திருந்தாராம்.
அத்தனை கொடி கட்டி பறந்த நிலையில் இவரும் பலமுறை பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆர்த்தி குறித்த பல வதந்திகள் பரவின. அந்த நேரத்தில் அவருக்கு ஒரு டோலிவுட் ஹீரோவுடன் காதல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு கடுமையான மன அழுத்தம் காரணமாக ஆர்த்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை.

அந்த ஆண்டே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ஆனால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படவே இல்லை. 2007ஆம் ஆண்டு நியூ ஜெர்சியை சேர்ந்த ஐடி ஊழியரான உஜ்வால் நிகாமை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கையும் அவருக்கு நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைந்தன. விவாகரத்துக்கு பிறகு அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வரவில்லை, இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின்னர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். உடல் எடை அதிகரிப்பு காரணமாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் மேலும் மனம் உடைந்த ஆர்த்தி அகர்வால், உடல் எடையை குறைக்க லிபோசக்ஷன் எனும் அறுவை சிகிச்சை செய்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அட்லாண்டிக் நகரில் ஒரு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
எனினும் அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெறவே இல்லை. அறுவை சிகிச்சை செய்த சிறிது நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. ஆர்த்தியின் இந்த திடீர் மரணம் அப்போது திரைத் துறையை சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications