Gandhi Kannadi Public Review: KPY பாலாவின் 'காந்தி கண்ணாடி' பட கதை இதுதானா? - முதல் நாள் ரசிகர்களின் கருத்து
சென்னை: (Gandhi Kannadi Movie Review) காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் கே.பி.ஒய். பாலாவின் முதல் திரைப்படம் 'காந்தி கண்ணாடி'. இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காமெடி நடிகர் ஒரு ஆக்ஷன்/கதாநாயகன் படத்தில் எப்படி நடித்துள்ளார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
படம் பார்த்த ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை உடனடியாக சமூக வலைத்தளங்களிலும், நேர்காணல்களிலும் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பொதுவான கருத்து என்னவென்றால், கே.பி.ஒய். பாலா ஒரு நல்ல கதையுடன் கதாநாயகன் அவதாரத்தை எடுத்திருக்கிறார் என்பதுதான்.

காமெடி இல்லை, எமோஷனல் தான்
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு, இது ஒரு முழுக்க முழுக்க காமெடி படம் என்பதுதான். ஆனால், படத்தைப் பார்த்த பெரும்பாலானோர், படம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்ததாகத் தெரிவித்தனர்.
ஒரு ரசிகை, "படம் ஜாலியா இருக்கும்னுதான் வந்தேன். ஆனா கிளைமாக்ஸ்ல அழுதுட்டேன். அழாதவங்க கூட படத்தைப் பார்த்தா அழுதுருவாங்க. அவ்வளவு எமோஷனல். பாலாவுக்கு இது முதல் படம் மாதிரியே தெரியலை. அவர் நிச்சயம் கதாநாயகனாக நல்லா வருவார்" என்று கூறினார்.
மற்றொரு ரசிகரும், "படத்தில் எந்த தொய்வும் இல்லை. பாலா படம் காமெடி படம்னுதான் வந்தோம், ஆனா செம எமோஷனலா இருக்கு. குடும்பத்துடன் பார்க்க சிறந்த படம்" என்று தெரிவித்தார்.
கதைதான் இந்த படத்தின் வெற்றி
ரசிகர்கள் பாலாவின் நடிப்பைப் பாராட்டியதுடன், படத்தின் கதை மற்றும் இயக்குநர் ஷெரிஃபின் திரைக்கதையையும் பெரிதும் பாராட்டினர்.
ஒரு ரசிகர், "இந்தப் படம் குடும்பத்துடன் பார்க்க ஒரு பக்காவான படம். ஒரு படம் பார்க்கப் பணம் கொடுக்கும்போது நமக்கு ஒரு திருப்தி இருக்கணும், அப்படி இந்தப் படம் திருப்தியைக் கொடுத்தது. இயக்குநர் ஷெரிஃப் கண்டிப்பாகப் பெரிய இயக்குநராக வருவார்" என்று கூறினார்.

சில ரசிகர்கள், படத்தில் பணமதிப்பிழப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளைச் சிறப்பாகக் கையாண்டிருந்ததாகவும் குறிப்பிட்டனர். படத்தின் ஆரம்பத்தில் முதல் பத்து நிமிடங்கள் சற்று மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் படம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். படத்தின் கதைதான் அதன் பலம், காமெடியை விடவும் கதை சிறப்பாக இருந்ததாகவும் மற்றொரு ரசிகர் கூறினார்.
மொத்தத்தில், கே.பி.ஒய். பாலா ஒரு கதாநாயகனாக எடுத்த முதல் அடியிலேயே வெற்றி பெற்றுள்ளார். ஒரு நகைச்சுவை நடிகர் இப்படி ஒரு உணர்வுபூர்வமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்தது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படக்குழுவினருக்கு இந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications