70 வது வயதில்.. மஞ்சள் தாலி கட்டி ஞானசம்பந்தம் பீமரத சாந்தி.. பாண்டியராஜன், பிரபலங்கள் வாழ்த்து
சென்னை: பட்டிமன்ற பேச்சாளராகவும் நடுவராகவும் நடிகராகவும் இருக்கும் கு.ஞானசம்பந்தம் தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது பீமரதசாந்தி என்ற முறையில் திருமணமும் நடைபெற்றிருக்கிறது. அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் துறை பேராசிரியர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ்பெற்று இருக்கும் ஞானசம்பந்தம் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகவும் பங்கேற்று சிறப்பித்து வருகிறார். தீபாவளியாக இருந்தாலும் சரி, பொங்கலாக இருந்தாலும் சரி எந்த ஒரு நல்ல நாளாக இருந்தாலும் டிவிகளில் இவருடைய பட்டிமன்றம் இல்லாமல் இருக்காது என்று சொல்லும் அளவிற்கு பல பட்டிமன்றங்களில் இவர் கலந்து கொள்கிறார்.

ஆரம்பத்தில் இவர் பேச்சாளராக இருந்த நிலையில் இப்போது இரண்டு தரப்புக்கும் சரியாக தீர்ப்புகளை சொல்லும் நடுவராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். அதோடு இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்ட படங்களில் ஞானசம்பந்தம் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் கோவை சரளா நடித்த செம்பி படத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் நீதிபதி கேரக்டரில் நடித்திருப்பார்.
இவருக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் தான். இந்த ஊரில் பிறந்த இவர் மதுரையில் தான் வசித்து வருகிறார். மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி இப்போது தலைமைபேராசிரியராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் 25 ஆண்டு காலமாக இயங்கி வரும் மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மையங்களையும் நிறுவி அதை கவனித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பல்வேறு நூல்களையும் எழுதி இருக்கும் ஞானசம்பந்தத்திற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு 70 வது பிறந்தநாள் வந்திருக்கிறது. அவருடைய பிறந்த நாளை அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் விமரிசையாக கொண்டாடி இருக்கிறார்கள். 70வது பிறந்த நாள் என்பதால் இந்துமுறைப்படி பீமரதசாந்தி-யாக இது கொண்டாடப்பட்டது. அப்போது அவர் அவருடைய மனைவிக்கு மஞ்சள் தாலி கட்டினார். பார்ப்பதற்கு திருமண வைபோகம் போலவே இருந்தது. இந்த திருமண பங்க்ஷனில் நடிகர் பாண்டியராஜன் உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பொதுவாக சினிமா உலகில் பல பிரபலங்கள் ஒரு சில ஆண்டுகளில் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடும் நிலையில் ஞானசம்பந்தம் போன்ற ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய சினிமா வாழ்க்கையோடு குடும்ப வாழ்க்கையையும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலும் இருந்தால் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இனிக்கும் என்று இவர்கள் பலருக்கு எடுத்துச் சொல்கிறார்கள். ஞானசம்பந்தம் வீட்டில் பங்க்ஷனில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications