தமிழ் சினிமா பான் இந்திய வெற்றிகளை அடைய முடியாததற்கு காரணம் என்ன?
இன்றைய இந்திய திரைப்பட உலகில், "பான் இந்தியா" என்ற சொல் பெருமைமிக்க ஒரு நிலையை அடைந்துள்ளது. இந்தத் தலைப்பின் கீழ் வெளிவரும் படங்கள், ஒரு மொழியில் மட்டுமல்லாது அனைத்துப் பகுதிகளிலும் ரசிகர்களை கவரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படுகின்றன.
ஆனால், பான் இந்திய திரைப்படங்களின் வெற்றி, கதாநாயகர்களின் புகழால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் திரை உலகத்தில், ரஜினிகாந்த் என்ற பெயரே பான் இந்திய திரைப்படங்களை அடையாளமாக மாற்றியது. ரஜினியின் தனித்துவமான நடிப்பு, மக்களிடையே உள்ள அன்பு, மற்றும் அவரது "சூப்பர் ஸ்டார்" பெயருக்கு உள்ள பிராண்டு மதிப்பு இதற்கு அடிப்படையாக இருந்தது.

இன்று வரை, ஒரு நடிகரின் பிரபலத்தால் மட்டும் படம் வெற்றி பெறும் ஒரே மனிதர் ரஜினி தான்.
ஒரு படம் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணம் அதன் கதை என்பது தெளிவாக இருக்கிறது. உதாரணமாக, "பாகுபலி" படத்தின் வெற்றி அதன் மாபெரும் கதை, இயக்குனர் ராஜமௌலியின் திறமை மற்றும் சினிமாவின் மொத்தமான சிறப்பம்சங்கள் காரணமாகவே அமைந்தது. அதற்கு பின் ப்ரபாஸ் நடித்து வந்த சாஹோ, "ராதேஷ்யாம்" வெற்றியை பெற முடியவில்லை. இதுவே, ஒரு கதைக்காக படம் வெற்றி பெறுகிறது என்பதற்கான சான்றாகும்.
"ஆர்.ஆர்.ஆர்" திரைப்படம் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் கேரியரில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற காரணம், இயக்குனர் ராஜமௌலியின் ஆளுமை, கதையின் வலிமை, மற்றும் தொழில்நுட்ப கலை நயங்கள் என்பவை தான்.
இரண்டு முன்னணி நடிகர்களின் நடிப்பு, கதையின் மையத்துடன் அழகாக இணைந்தது. ஆனால், இதன்பின் ராம் சரண் அல்லது ஜூனியர் என்டிஆர் நடித்த பிற படங்களுக்கு "ஆர்.ஆர்.ஆர்" அளவிற்கு வெற்றியை பெற முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணம், அந்த படங்களின் கதைக்களம் மற்றும் இயக்கத்தின் தரத்தில் உள்ள மாறுபாடு ஆகும்.
"ஆர்.ஆர்.ஆர்" வெற்றி கூட்டணி மற்றும் சரியான கதைக்களத்தின் மூலமே உருவானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதிலிருந்து, கதையே ஒரு படத்தின் மையம் என்பதை மீண்டும் உணர முடிகிறது, எனவே நடிகர்களின் பெயர் மட்டும் வெற்றிக்கு போதாது.
அதேபோல, "கே.ஜி.எப்" இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியை கண்டன. யாஷ் நடித்த இந்தப் படம், அதன் ஸ்டைலிஷ் கதைச் சொல்லல் மற்றும் மாஸ் அம்சங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் "புஷ்பா" இரு பாகங்களும் அல்லு அர்ஜுனின் நடிப்பும் கதையின் தனித்துவமும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களின் மற்ற படங்களுக்கு இந்த அளவுக்கு வெற்றிகள் வருவது என்பது கேள்விக்குறியாகும்.
இதற்கு முக்கியமான காரணம், அந்த படங்களின் கதைகளின் தளமட்டம் மற்றும் அதன் கொண்டாட்டத்திலான மாறுபாடுகள் தான். இதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியது, ஒரு படம் வெற்றியை காண காரணம் நடிகரின் பிரபலம் மட்டும் அல்ல, கதையின் வலிமையும் இயக்குனரின் கலைநயமும் முக்கியம்.
இவ்வாறாக, தமிழ் சினிமா இன்னும் "பான் இந்தியா" வெற்றிகளை அடைய முடியாததற்கு முக்கிய காரணம் சரியான கதைகள் திரைப்படத்தில் அடிப்படையாக அமையாதது. விஜய், அஜித் போன்ற நடிகர்கள் சரியான கதைக்களத்துடன் வந்தால், அவர்களது படங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications