நாடாளுமன்றத்தில் இளையராஜா “இதை” ஏன் பேசல? 30 செகண்ட் போதுமே! ஜேம்ஸ் வசந்தன் கேள்வி
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா கூலி திரைப்படத்தில் தன்னுடைய பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் நிலையில் இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் அந்த டீசரில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்க மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற, "வா வா பக்கம் வா" என்ற பாடலின் இசையை பயன்படுத்தி இருக்கின்றனர். இதை பார்த்த இளையராஜா தான் இசையமைத்த வா வா பக்கம் வா என்ற பாடலுக்கு அனுமதியை தன்னிடம் வாங்காமலேயே இந்த பாடலை எப்படி பயன்படுத்தலாம்? என்று கூலி திரைப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் இளையராஜா சட்டபூர்வமாக செய்தது சரிதான். ஆனால் என்னை போன்றோர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். காரணம் இசை என்பது தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். ஒரு பாடலை காசு கொடுத்து தயாரிப்பாளர் வாங்கி விடுகிறார்.
அவரிடம் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் எல்லோரும் பணத்தை வாங்கிக் கொண்டு பாடலை தந்து விடுகிறார்கள். அதனால் மொத்த உரிமையும் தயாரிப்பாளருக்கு தான் இருக்கிறது. ரஜினியும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள் தான். நட்புக்குள் விரிசல் வருவது காரணம் பணம், பெண். எவ்வளவு நெருக்கமான நட்பாக இருந்தாலும் பணத்தால் பிரச்சனை வரத்தான் செய்யும். அப்படித்தான் ரஜினி படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
என்னை பொறுத்தவரை தங்க மகன் படத்தின் போது இளையராஜா அந்த பாடலுக்கு பணத்தை வாங்கி பொருளை கொடுத்து விட்டார். பணம் கொடுத்து பொருளை வாங்கிய தயாரிப்பாளருக்கு தான் அந்த பாடல் சொந்தம். வேண்டுமென்றால் தயாரிப்பாளர் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.
அதோடு அவர் பேசுகையில் இந்த பிரச்சனையில் சரியான தீர்வு என்றால் இதில் அமைப்பாக தான் வெற்றி பெற முடியும். அல்லது அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும். பொதுவாக ராயல்டி பிரச்சனை என்று வரும்போது ஒரு பாடலை உருவாக்கிய அனைவருக்கும் பாடல் உரிமை இருக்கிறது. அதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், பாடலை பப்ளிஷ் செய்பவர் என்று ஐந்து பேர் பேர் இருக்கிறார்கள்.
அவர்களில் பாடகர் போக மீதமுள்ள நான்கு பேருக்கும் தான் பாடலின் ராயல்டி பணம் வந்து சேர வேண்டும். எதற்காக பாடகர்களுக்கு இதில் பணம் கொடுக்க தேவை இல்லை என்று நான் சொல்கிறேன் என்றால் ஒரு பாடல் வெற்றி பெற்றால் பல இடங்களுக்கு பாடகர்களை மட்டும் தான் பாடுவதற்காக கூப்பிடுவார்கள். அதனால் அவர்களுக்கு ராயல்டி பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என்னுடைய கருத்தாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த ராயல்டி பிரச்சனையை குறித்து தெளிவு ஏற்பட வேண்டும் என்றால் கலைத்துறை சார்பாக நாடாளுமன்றத்தில் இளையராஜா தான் இதைப் பற்றி பேச வேண்டும். அவர் தானே கலைத்துறை சார்பாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் தான் இதை பேச வேண்டும். கலை துறையினரின் பிரச்சனைகளை அவரே பேசவில்லை என்றால் வேறு யார் பேசுவார்கள்?
இவர் நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதற்கு காரணம் கலைத்துறை பிரச்சனைகளை பேசுவதற்காக தான். நாடாளுமன்றத்தில் இளையராஜா எழுந்து 30 செகண்ட் இதை பற்றி பேசினால் மொத்த பிரச்சனையும் முடிந்து விடும். ஆனால் அவர் ஏன் அதை செய்யாமல் இருக்கிறார். அதை செய்யாமல் வழக்கறிஞர் மூலமாக இவர் வழக்கு போட்டுக் கொண்டே இருந்தால் அதற்கு விடையே தெரியாது என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications