ஒரு பெண்ணை பொதுவெளியில் கேவலப்படுத்துவது அழகா? விஜய் சேதுபதியை திட்டி பதிவு போட்ட ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: இசையமைப்பாளரும், பிக் பாஸ் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒருதலைப்பட்சமாக தொகுத்து வழங்கி வருகிறார் என்றும் அதுவும் மஞ்சரி விஷயத்தில் விஜய் சேதுபதி நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று கூறியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அருணுக்கும் மஞ்சரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அது பற்றி கடந்த சனிக்கிழமை விஜய் சேதுபதி விசாரிக்கும் போது அவர் மஞ்சரியை டார்கெட் செய்து பேசியது பற்றி பிரபல இசை அமைப்பாளரும் பிக் பாஸ் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் நடத்துனர் கமல்ஹாசன், இப்போது விஜய் சேதுபதி இருவரும் அவரவர் பாணியில் நடத்துவதும் அதற்கு ஆதரவு விமர்சனங்களும் எழுவது இயல்பு தானே. கமல்ஹாசன் மேலிருந்து குற்றச்சாட்டு எல்லாரிடமும் ரொம்பவும் மென்மையாக கொஞ்சம் கூட கடித்துக் கொள்ளாமல், கண்டிப்பு இல்லாமல் இருக்கிறார் என்பதுதான்.
இதையெல்லாம் கேட்டறிந்து தானே விஜய் சேதுபதி வந்திருப்பார். தொடக்கத்தில் விஜய் சேதுபதி இயல்பான அதிரடியான பாணியை கண்டு வியந்தவரும் பாராட்டியவரும் இன்று வெறுப்படையும் நிலைக்கு சென்று இருக்கின்றனர். போட்டியாளர்களிடம் உரையாடும் போதும் பிரச்சனைகளை ஆராய்ந்த போதும் கமலஹாசனிடம் பண்பு இருந்தது, முதிர்ச்சி இருந்தது, ஞானம் இருந்தது.
மதி நுட்பம் இருந்தது, சமூகப் பொறுப்பு இருந்தது, ஒவ்வொருவரையும் ஆளுமைகளாகவே பார்த்தார், கையாண்டார். அவர்களை நேரடியாக குற்றப்படுத்தியது இல்லை. சொற்கள் காயப்படுத்தியதில்லை, மட்டுப்படுத்தியது இல்லை. தனிப்பட்ட விதத்தில் தாக்கியது இல்லை. அவர்கள் உணர்வுகளை சீண்டியதில்லை.
தனக்குறிந்த உயர் பொறுப்பை கொண்டு அவர்களை சிறுமைப்படுத்தியது இல்லை. இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும். இது ஆணாதிக்க உலகம். நம் தமிழ் சமூகம் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதன் நிரூபணத்தை இந்த வீட்டில் 55 நாட்களாக கண்கூடாக கண்டு வருகிறோம்.
தன்னை கேள்வி கேட்கிற விமர்சிக்கிற பெண்ணை எப்படி ஆண்கள் எல்லாம் ஒன்று சேர்த்து கடுமையாக, கொடுமைக்காக தாக்கி நிலைகுலைய செய்து மகிழ்கிறார்களோ அதையே நிகழ்ச்சி நடத்துனரும் நேற்று செய்தது நம்மை அச்சப்பட வைத்திருந்தது. இவர் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறார் என்பது ஒருபுறம், ஆனால் பொது நல கேடு ஒன்றும் இல்லை.
இது அவர் இயல்பு நமக்கு பிரச்சனை இல்லை ஆனால் அத்தகைய குற்றங்கள் செய்த ஆண்களை விசாரிக்காமல் ஏற்கனவே அவர்களால் உணர்வு பந்தம் செய்யப்பட்ட பெண்ணை இருவரும் சேர்ந்து குற்ற படுத்தி சிறுமைப்படுத்தி தான் செய்ததுதான் தவறு என்று சொல்ல வைத்து நொறுங்க வைத்து மகிழ்ந்ததையும் ஏற்றுக்கொண்ட போது தமிழ் சமூகத்தில் பெண்களின் எதிர்காலத்தை குறித்து அச்சம் மேலோங்கியது.
அதோடு நிற்கவில்லை வெறிபிடித்த விலங்குகள் போல சுற்றி நின்று அந்த பெண்ணை உணர்வளவில் சின்னாபின்னாமாக்கிய அந்த ஆண்களை பாராட்டி பிக் பாஸ் வரலாற்றிலேயே சிறந்த பங்கேற்பாளர் என்கிற பட்டத்தையும் வழங்கியது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
போட்டியாளர்களும் உங்களையும் என்னையும் போல மனிதர்கள் தானே? அவரவருக்கு ஒரு பேசும் சிந்திக்கும் செயல்பாடும் விதம் இருப்பதும் இயற்கை தானே? அதை கிண்டல் அடிப்பதும் கடுமையாக சாடுவதும் இவர் நினைப்பதையே அவர்கள் சொல்ல வேண்டும், அதை இவர் விரும்பும் வண்ணமே சொல்ல வேண்டும் என்பதும்.. சொல்லாவிட்டால் சினம் அடைவதும், சலித்துக் கொள்வதும் எதிரில் நிற்பவரை பொதுவெளியில் கேவலப்படுத்துவதும் வேண்டா வெறுப்போடு அவர்களிடம் உரையாடுவதும் ஒரு தொகுப்பாளருக்கு அழகா?
பணத்துக்காக நிகழ்ச்சி நடத்த வருபவர் குறைந்தபட்ச பொறுப்போடு, கண்ணியத்தோடு.. ஈடுபாட்டோடு நடத்த வேண்டும். தமிழ் சமூகமே விழித்துக் கொள்! வல்லவரெல்லாம் நல்லவர் என்பதில்லை என்பதை விளங்கிக் கொள்! புகழின் உச்சியில் இருப்பவருக்கு சமூக பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவூட்டு.. என அந்தப் பதிவில் தன்னுடைய ஆதங்கத்தை ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications