“கருப்பு நிறம்” ஊனமா? மாரி செல்வராஜ் அப்படி சொன்னது சரியா? கென் கருணாஸும் இப்படி! காஜல் பசுபதி ஆதங்கம்
சென்னை: தமிழ் திரையுலகில் தற்போது மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கிறது நடிகை காஜல் பசுபதி பேச்சு. இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து அவர் முன்வைத்துள்ள கருத்துகள் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைவாக கிடைப்பது குறித்து அவர் வெளிப்படையாகக் கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாரி செல்வராஜ் பேட்டி
மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது படங்களில் ஏன் பிற மாநில நடிகைகள் அதிகமாக நடிக்கின்றனர் என்ற கேள்விக்கு தனக்கான விளக்கத்தை அளித்திருந்தார். கதாபாத்திரத்தின் தேவையை பொருத்தே நடிகர்களை தேர்வு செய்கிறேன், அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும், ஊனமுற்றோர் கேரக்டரில் ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்றால் ஒரு ஊனமுற்றவரை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று இல்லை என்ற அவரது கருத்து அப்போது பேசுபொருளாக மாறியது. ஆனால் அதையே தற்போது காஜல் பசுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஜல் பசுபதி ஆதங்கம்
அவர் பேசும்போது, "தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு தராததற்கு இப்படி ஒரு ஒப்பீட்டை கூறுவது சரியா? கருப்பு நிறத்தை ஊனம் என்பது போல எடுத்துக்காட்டாக சொல்லுவது என்ன அர்த்தம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "தமிழில் திறமையான நடிகைகள் குறைவா? இல்லை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததா?" என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
இதோடு நின்றுவிடாமல், கென் கருணாஸ் கூறிய கருத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். "நான் எனக்கு ஹீரோயினாக நடிக்க தமிழ் நடிகைகளிடம் கேட்டேன், அவர்கள் நடிக்க முடியாது என்றார்கள்" என்று கூறியிருந்ததை குறிப்பிடும் அவர், "எத்தனை பேரிடம் கேட்டீர்கள்? சில பேரிடம் மட்டும் கேட்டுவிட்டு அதையே பொதுவாக சொல்ல முடியாது" என்று விமர்சித்தார்.
மேலும், "மற்ற மொழி திரைப்படங்களில் அந்த மாநில நடிகைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழில் மட்டும் ஏன் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைவு?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இது தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சினையை மீண்டும் முன்வைத்துள்ளது.
மாரி செல்வராஜ் படங்கள்
மாரி செல்வராஜ் குறித்து சொல்லப்போனால், அவர் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநராக அறியப்படுகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் மூலம் சமூக அக்கறை கொண்ட இயக்குநராக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது படங்கள் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.
மறுபுறம், காஜல் பசுபதி தொலைக்காட்சி மற்றும் சினிமா இரண்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், நேர்மையான கருத்துகளை வெளிப்படையாக பேசுவதால்ஹ அடிக்கடி கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஒரு தரப்பு காஜல் பசுபதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து "தமிழ் நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும்" என்று கூறுகின்றனர். மற்றொரு தரப்பு, "இயக்குநரின் கலைச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்" என்று மாரி செல்வராஜ் பக்கம் நிற்கின்றனர்.
மொத்தத்தில், இந்த விவாதம் ஒரு தனிப்பட்ட விமர்சனத்தை தாண்டி, தமிழ் சினிமாவில் நடிகைகள் தேர்வு செய்யப்படும் விதம் குறித்த பெரிய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இது எதிர்காலத்தில் எந்த மாற்றத்தை உருவாக்கும் என்பது தற்போது அனைவரும் கவனித்து வரும் விஷயமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications