Kamal Haasan: விஜய் போல கமல்ஹாசனும் சினிமாவை விட்டு விலகல்? அவரே கொடுத்த விளக்கம்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனும், உலக நாயகன் என்றும் புகழப்படும் நடிகர் கமல் ஹாசன், தன்னுடைய திரைத்துறை பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவதை பற்றி பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 65 ஆண்டுகளுக்கும் குறையாத நீண்ட திரை அனுபவம் கொண்ட அவர், ஒரு பெரிய வெற்றி படத்துடன் விடைபெறும் யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.

கமலின் சினிமா பயணம்
கமல் ஹாசனின் திரைத்துறை பயணம் சாதாரணமானது அல்ல - அது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். தனது 5 வயதில் 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்று பலரது கவனத்தை ஈர்த்தார்.
அதன் பின்னர் மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தேவர் மகன் படத்திற்கு சிறந்த மாநில மொழிப் படத்திற்கான தயாரிப்பாளர் விருதையும் (தேசிய விருது) பெற்றுள்ளார். மொத்தம் 4 தேசிய விருதுகள் உட்படப் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
வாரிசு அறிவிப்பு
ஆரம்ப கால கட்டங்களில் நடன ஆசிரியர், உதவி இயக்குநர் ஆகியவர்களிடம் பணியாற்றிய கமலை, பின்னர் கே. பாலசந்தர், ஐ.வி. சசி, சிங்கிதம் சீனிவாசராவ் போன்ற இயக்குநர்கள் நாயகனாக்கி திரைத்துறையில் வலுவாகக் கால் ஊன்ற செய்தனர். கமலின் சிறப்பான நடிப்பினைக் கண்டு நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தனது கலையுலக வாரிசாக கமலை அறிவித்தார்.
தொழில்நுட்ப புரட்சியாளர்
இதுவரை 236-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கமல், சிறந்த நடிகர் என்பதைக் கடந்து பல தொழில்நுட்பங்களையும் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இந்திய சினிமாவின் மைல்கல்லாக, எப்போதும் சிறந்த படங்களாக நாயகன் மற்றும் தேவர்மகன் திரைப்படங்களே உள்ளன. சிறந்த திரைக்கதைக்கு உதாரணமாக இன்று வரையில் 'தேவர்மகன்' திரைப்படமே கூறப்படுகிறது.
இவர் டால்பி அட்மாஸ் ஒலித் தொழில்நுட்பம் (குருதிப்புனல்), புரோஸ்தெடிக் ஒப்பனை (இந்தியன்) மற்றும் அனிமேஷன் (ஆளவந்தான்) போன்ற பல முன்னோடி தொழில்நுட்பங்களை இந்தியச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஓய்வு பற்றிய கமலின் நிலைப்பாடு
2018-ம் ஆண்டு அரசியலில் குதித்த கமல் ஹாசன், அதிக திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். விக்ரம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் அதிக ஈடுபாட்டுடன் நடித்து வந்தார். சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்றைய தலைமுறையினர் இளைய நடிகர்களை எதிர்பார்ப்பதால் மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா?" என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கமல், மோசமான படங்களில் நடிக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியுள்ளது. ஆனால் அப்போது என் நண்பர்கள், இப்போது ஓய்வு பெற வேண்டாம், ஒரு பெரிய வெற்றிப் படத்தினை கொடுத்து விட்டு ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்
அடுத்தடுத்து ஷங்கர், மணிரத்னம் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படங்களில் கமல் நடித்த படங்கள் சில தோல்விகளையும் சந்தித்தன. இந்நிலையில் கமல் இரட்டை சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஒரு புரட்சிகரமான கலைஞனின் ஓய்வு என்ற அறிவிப்பு, எப்போதுமே ஒரு வெற்றியின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்ற கமலின் நிலைப்பாடு அவரது தீராத கலை தாகத்தை காட்டுகிறது.












Click it and Unblock the Notifications