Kamal Haasan: கதை பிரச்சனை! தலைவர் 173ல் இருந்து சுந்தர் சி விலகியது பற்றி கமலின் வெளிப்படையான விளக்கம்!
சென்னை : தமிழ் சினிமா ரசிகர்களின் ட்ரீம் COMBO என்று அறிவிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் - சுந்தர். சி கூட்டணியில் திடீரென ஒரு ட்விஸ்ட் விழுந்துள்ளது! கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்தின் 173வது படத்தைச் சுந்தர். சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென விலகியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில், வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் இந்த சர்ச்சை குறித்துப் பேசி, மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளார்.

அறிவிப்பும், எதிர்பார்ப்பும்
ரஜினிகாந்தின் 173வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் என்றும், அப்படத்தைச் சுந்தர். சி இயக்குவார் என்றும், 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் நவம்பர் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் சுந்தர். சி, ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற BLOCKBUSTER படத்தைக் கொடுத்ததால், ரசிகர்கள் இந்தப் புதியக் கூட்டணிக்கு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
சமரசம்
சுந்தர். சி விலகியதற்குப் பிறகு, ரஜினியின் படத்துக்காகச் சுந்தர். சியிடம் அவருடைய மனைவியான குஷ்பு சமரசம் பேச முயன்றதாகவும், அவர் கோபத்தில் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் ஒரு பரபரப்பான வதந்தி பரவியது. ரஜினியை இயக்கப் பல இயக்குநர்கள் தவம் கிடக்கும் நிலையில், சுந்தர். சி விலகியதற்கானக் காரணம் என்னவென்று சோசியல் மீடியாவில் பெரும் பேசுபொருளானது.
சுந்தர். சி அறிக்கை
சுந்தர். சி வெளியிட்ட அறிக்கையில், "தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் 173 படத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். "கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி சாரை இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை" என்றும், "கடந்த சில நாட்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக் கொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம்" என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
கமலின் அதிரடி விளக்கம்
வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனிடம், சுந்தர். சி விலகியது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். "விலகியதற்கானக் காரணத்தைச் சுந்தர். சி அவர்கள் தெளிவாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்" என்று அவர் பேசத் தொடங்கினார். மேலும், "நான் படத்தின் தயாரிப்பாளர். என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்குக் கதை பிடிக்கும் வரை அனைவரிடமும் கதை கேட்டுக் கொண்டே இருப்போம். கதை நன்றாக இருந்தால், புதிய இயக்குநராக இருந்தாலும் அவர்களிடம் கதை கேட்போம். ஆனால், கதை நன்றாக இருக்க வேண்டும்" என்று கூறி, ரஜினியின் எதிர்பார்ப்பே முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்று கமல் பேசி முடித்திருப்பது, அடுத்த இயக்குநர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. சுந்தர். சி விலகியதற்குக் காரணம், அவர் கொடுத்தக் சப்ஜெக்ட் ரஜினிக்குப் பிடிக்கவில்லையா அல்லது பட்ஜெட் போன்றப் பிரச்சினையா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இப்போது, வெங்கட் பிரபு, எச். வினோத் போன்ற சிலருடைய பெயர் மீண்டும் இயக்குநர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே சமீப காலமாகவே ரஜினி தாதாவாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் தமிழில் வெற்றி அடையாததால், ஜாலியாகவும் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பிடித்த மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்று ரஜினி நினைத்ததாகவும் அதற்கு தகுந்த மாதிரி சுந்தர் சி இடம் கதை இல்லாததால் தான் அவர் விலகினார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது கமல்ஹாசன் கதை பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் தொடரும் என்று சொல்லி இருப்பதால், பரவிய வதந்தி உண்மைதானா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications