மனோஜின் சபாஷ்.. முதல் படத்துக்கும் இசைஞானி.. "பாரதி, வார்த்தை வரவில்லை: இளையராஜா: Manoj Bharathiraja
சென்னை: இப்படியொரு சோகம், பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினால், நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று காலம் விதித்திருக்கின்ற காரணத்தினால், மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.. இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றையும் பேசி வெளியிட்டிருக்கிறார்.
ஒரு மாதத்திற்கு முன்பே மனோஜூக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்துள்ளது.. அதனால், வீட்டில் ஓய்விலும் இருந்து வந்துள்ளார்.. ஆனால், கடந்த சில நாட்களாகவே மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று மாராடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

நடிகர் மனோஜ் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல, திரையுலகமும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறது.. இந்நிலையில், மனோஜ் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்..
பாரதிராஜா மகன்
இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டிருக்கும் அஞ்சலி வீடியோவில், "என்னுடைய நண்பன் பாரதிராஜா மகனான மனோஜ்குமார் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன்.. என்ன சொல்வதென்றே வார்த்தை வரவில்லை.
இப்படியொரு சோகம், பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினால், நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது, ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று காலம் விதித்திருக்கின்ற காரணத்தினால், மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று உருக்கமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
நட்பின் ஆழம் அதிகம்
பாரதிராஜாவின் மிக நெருங்கிய நண்பர் இளையராஜா.. சினிமாவில் நுழைவதற்கு முன்பேஇளம் வயதிலேயே பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள். வைகை ஆற்று மண்ணில் இருந்து வந்த இருவரின் நட்பு, அந்த காலத்திலிருந்தே ஆழம் அதிகம்.
பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொதுப்படையாகவே உரிமையுடன் அழைப்பார். அதே நேரத்தில், இவர்களுக்குள் பிரச்சனை வராமல் இல்லை.. வரத்தான் செய்தது.. ஆனால் அதனை இருவருமே மனசார ஒட்டி வைத்து கொள்ளவில்லை. நாடோடி தென்றல் படத்தின்போது இவர்களுக்குள் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதற்குபிறகு நெருக்கம் குறைந்து காணப்பட்டது என்னவோ உண்மைதான்.
ஒருமுறை பிரசாத் ஸ்டுயோவிற்குள் இளையராஜாவை அனுமதிக்க கூடாது என்ற ஒரு விவகாரம் எழுந்தபோது கொதித்து போய்விட்டார் பாரதிராஜா. "பல வருஷமா ஒரு ராஜா மாதிரி அங்க வாழ்த்துட்டு இருக்கிறவன் இளையராஜா.. அவனை ஸ்டுடியோவை விட்டுபோக சொல்ல யாராலும் முடியாது" என்று ஆவேசப்பட்டவர்.
இளையராஜா - பாரதிராஜா
உடனே இளையராஜாவுக்கு போனை போட்டு, "நான் இருக்கிறேன், எவன் வருவான்னு பார்த்துக்கறேன்" என்று கொதித்தெழுந்ததை கண்டு தமிழ் சினிமா உலகமே நடுங்கியது. இருவரின் நட்பையும் ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்தி வியந்தது.. இளையராஜா பாரதிராஜாவை போலவே, இளையராஜா வாரிசுகளுடன் மனோஜூக்கு நட்பு தொடர்ந்து வந்திருக்கிறது..
அதுமட்டுமல்ல, பாரதிராஜாவின் முதல் படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். அதேபோல, மனோஜ் இயக்கிய மார்கழி திங்கள்' படத்துக்கும் இளையராஜாவே இசையமைத்திருந்தார். திரையுலகில் இது ஒரு ஆச்சரிய நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. அதேபோல, தன்னுடைய அப்பாவை வைத்தே மகன் இயக்கியிருந்ததும், கோடம்பாக்கத்து வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது..












Click it and Unblock the Notifications