Parthiban: பார்த்திபனா இப்படி? விஜயம் Vs ஜெயம் - வார்த்தை விளையாட்டுக்கு விழுந்த அடி.. விஷயம் இதுதானாம்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு தனி பாணி, ஒரு வித்தியாசமான வார்த்தை விளையாட்டுனு தனக்குன்னு ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறவர் பார்த்திபன். ஒத்த செருப்பு படத்துல இவருடைய திறமை, இரவின் நிழல்ல சிங்கிள் ஷாட்ல உலக சாதனைன்னு, வேர்ட்ஸ் ஆஃப் விஸ்பர்ஸ்க்குப் பிறகு லெட்டர்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ்ன்னு அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தனித்துவமானது.

சினிமான்னா நடிப்பு, இயக்கம்னு பல பரிமாணங்கள்ல கலக்குறவர். ஆனா, இந்த வார ஆரம்பத்துல இட்லி கடை பட டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்குப் போன பார்த்திபன் பேசின ஒரு சின்ன வார்த்தை, இன்னைக்குப் பெரிய புயலையே கிளப்பியிருக்கு. அதுவும் விஜயம்ங்கிற வார்த்தைக்காக!
இட்லி கடை மேடையில் பார்த்திபன்
தனுஷ் இயக்கி, நடிச்ச இட்லி கடை பட டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு பார்த்திபன் உட்பட படக்குழுவினர் பலர் வந்திருந்தாங்க. மேடையில அவரோட வழக்கமான ஸ்டைல்ல பேசிக்கிட்டிருந்த பார்த்திபன், அரசியல் பத்தி ஒரு கேள்வி கேட்கப்பட்டதும், "விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயம் உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால், நான் தான் சி.எம். 26ஆன் வேர்ட்ஸ் (இது அவருடைய புதுப் பட தலைப்பு)"னு சொல்லியிருந்தார்.
அவர் வழக்கம் போல, வார்த்தை விளையாட்டு செஞ்சதுதான் இந்தப் பேச்சு. ஆனா, சில ஊடகங்கள் இதைப் பெருசு பண்ணி, நடிகர் விஜய் அரசியலுக்கு வர்றதை பார்த்திபன் தாக்கிப் பேசினார்னு செய்தி போட்டுட்டாங்க. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்கள்ல காட்டுத் தீ போல பரவி, பார்த்திபனுக்குச் சில எதிர்மறை விமர்சனங்கள் வர ஆரம்பிச்சது.
பார்த்திபனின் ஆக்ஸ்போர்டு விளக்கம்
வழக்கமா, இதுபோன்ற விஷயங்களுக்குப் பார்த்திபன் நேரடியாகப் பதில் சொல்ல மாட்டார். ஆனா, இந்த முறை அவர் எக்ஸ் (ட்விட்டர்) தளத்துல விரிவான ஒரு பதிவை வெளியிட்டு, மொத்த விவாதத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வெச்சார். அந்தப் பதிவில், "சாதனை புரிவதை விட, சாதாரண வார்த்தைகளை புரிய வைப்பது சிரமமாக உள்ளது"ன்னு ஆரம்பிச்சு, தன்னோட கோபத்தை வெளிப்படுத்தினார்.
அவர் சொன்ன விளக்கம் ரொம்பவே சுவாரஸ்யமானது. "மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டிக்கு விஜயம் புரிகிறார் என்றால் வருகை புரிகிறார் என்று பொருள். அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் விஜயம் (வருகை) புரியலாம். ஆனால், வெற்றி (ஜெயம்) பெறுவது என்பது மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது"ன்னு தெளிவா சொன்னார்.
"இதைவிட நடுநிலையான, பொதுவான, ஆக்சுவலி மொக்கையான கருத்து வேறிருக்க முடியாது"ன்னு அவர் சொல்லியிருந்தது, அந்த விவகாரத்தை ஒரு காமெடி போல மாத்தியிருந்தது.
அரசியல் பார்வை மற்றும் எதிர்காலம்
பார்த்திபன் எப்பவுமே தனக்குன்னு ஒரு தனி அரசியல் பார்வை வச்சிருக்கிறவர். அவருக்கு எல்லா கட்சி நண்பர்களும் உண்டு. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கூட அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. "கலைஞர் காலத்தில்தான் நான் ஒரு கலைஞனாக கௌரவிக்கப்பட்டேன்"ன்னு அவர் சொல்லியிருக்கார். அதனாலதான் பார்த்திபனால எந்தப் பக்கமும் சாயாம நடுநிலையா இருக்க முடியுது.
"யாரையும் தாக்கியோ தூக்கியோ பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படி செய்றதா இருந்தா நெஞ்சை நிமிர்த்தியபடி நேரடியாகவே அரசியலுக்கு வந்துவிடுவேன்"னு அவர் சொல்லியிருந்தது, அவரோட நேர்மையைக் காட்டுது. கடைசியில, "நான் இப்போதைக்கு இட்லி பானை சின்னத்தில் நிற்கும் நண்பர் தனுஷ் அவர்களுக்கு பெருகும் ஆதரவில் பங்கு பெற்று மகிழ்கிறேன்"னு தன் நண்பன் தனுஷுக்கும் ஆதரவு தெரிவிச்சிருக்கார்.
இந்த விவகாரம், வார்த்தை விளையாட்டுல கைதேர்ந்த ஒரு கலைஞன், சில சமயங்கள்ல எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்படுறான்னு நிரூபிச்சிருக்கு. ஆனாலும், தன்னோட தனித்துவமான பாணியை அவர் கைவிடப்போறது இல்லை. "விரைவில் என் படம் துவங்க ஆயத்தமாகிறேன். வேறு எந்த அஜெண்டாவும் அர்ஜெண்ட் இல்லை என்வசம்"னு சொல்லி, தனது வேலையைப் பார்க்கப் போயிட்டார்.












Click it and Unblock the Notifications