சோசியல் மீடியாவில் சில குரூப் வைத்து நடக்கும் சதி.. அதில் விஜய்யும் இருக்கிறார்! S.A. சந்திரசேகர் பேட்டி மீண்டும் வைரல்
சென்னை: தமிழக அரசியல் சூழல் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய், சட்டசபைத் தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அவரது அரசியல் பயணம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் பேசிய பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

108 இடங்களில் வெற்றி
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் கூட்டணி அமைப்பது, ஆதரவு திரட்டுவது போன்ற அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், அவரது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
வைரலாகும் எஸ்.ஏ. சந்திரசேகர் பழைய வீடியோ
இந்த நேரத்தில், விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் பழைய பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ஆன்லைன் குரூப்புகள் மற்றும் ட்விட்டர் குரூப்புகள் என்று சிலர் தனியாக அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த குரூப்புகளுக்குள் தகவல்கள் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்படுகின்றன. அந்த குழுவில் விஜயும் இருப்பதாகவும், ஆனால் அந்த குரூப்பின் மூலம் அவருக்கு சென்றடையும் தகவல்கள் அனைத்தும் உண்மை அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வெளியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாமல், ஒரு "இரும்புக் கோட்டை" போல ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தகவல் வட்டத்திற்குள் விஜயை வைத்திருக்கிறார்கள், காலை நேரத்தில் அந்த குரூப்பில் ஒரு செய்தியை உருவாக்குகிறார்கள். உதாரணமாக, "அப்பா நேற்று ஒரு இடத்தில் தவறாக பேசி விட்டார், அது விஜய்க்கு டேமேஜ் ஆகிவிட்டது" போன்ற தகவல்களை உருவாக்கி, அதை உண்மை சம்பவமாக காட்ட முயற்சி செய்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி எதுவும் நடந்திருக்காது.
இருந்தும், நடந்ததே இல்லாத விஷயத்தை நடந்தது போல வடிவமைத்து, அந்த குரூப்பில் பதிவிடுகிறார்கள். அதற்குப் பிறகு, அந்த தகவலை ஒரு சிலரிடம் மட்டும் வைக்காமல், திட்டமிட்டு பரப்ப ஆரம்பிக்கிறார்கள். 100 பேர் வரை அந்த தகவலை மீண்டும் மீண்டும் ஷேர் செய்ய வைக்கிறார்கள். ட்விட்டரில் ட்வீட் செய்யச் சொல்கிறார்கள். லைக் செய்ய வைக்கிறார்கள். ஒரே செய்தி பலமுறை பலரால் பகிரப்படும்படி செய்கிறார்கள். இவ்வாறு ஒரு பொய்யான தகவல் தொடர்ந்து பரவும்போது, அது உண்மை போல தோன்ற ஆரம்பிக்கும்.
"ஒரு பொய்யை பத்து தடவை சொன்னால் அது உண்மை போல தோன்றும்" என்ற நிலையை விட, இங்கு 50 முறை, 100 முறை வரை அதே விஷயம் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இப்படி பரவிய தகவல்களை விஜய் பார்த்து நம்பும் சூழ்நிலையும் உருவாகிறது என்று அவர் அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
விஷ வளையம்
இதற்குமுன்பும், விஜய் ஒரு "விஷ வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்" என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூறிய கருத்துகளும் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் எவ்வளவு தகவல்கள் உண்மை, எவ்வளவு பொய் என்ற குழப்பத்தை இந்த விவகாரம் மீண்டும் எழுப்பியுள்ளது.
சினிமா காட்சியுடன் ஒப்பிடும் ரசிகர்கள்
இதற்கிடையில், பூவே உனக்காக படத்தின் ஒரு காட்சி புகைப்படமும் வைரலாகி வருகிறது. அந்த படத்தில், ஒருதலைக்காதலாக இருந்த பெண்ணை அவரது காதலருடன் சேர்த்து வைத்து விட்டு விலகிச் செல்லும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். அதேபோல், தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் "விஜய் பிறரை முன்னிலைப்படுத்தி விட்டு தானே பின்னால் நிற்கிறாரா?" என்ற வகையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், தேர்தல் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் இவை இரண்டும் சேர்ந்து விஜயின் அரசியல் பயணத்தை சவாலான நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.












Click it and Unblock the Notifications