மறைந்த நடிகர் நேத்ரன் கடைசியாக வெளியிட்ட இன்ஸ்டா பதிவு.. மகள் குறித்து பெருமிதம்! கலங்கும் ரசிகர்கள்
சென்னை: சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் நேற்று (டிசம்பர் 3ஆம் தேதி) காலமானார். இவர் இறப்பதற்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இரண்டாவது மகள் குறித்து பெருமையாக பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவிற்கு இணையத்தில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்த நேத்ரன் 25 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்திருந்தார். அதிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி என பல சேனல்களிலும் முக்கிய சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் பொன்னி சீரியல், முத்தழகு சீரியல் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதுபோல விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலிலும் ராதிகாவின் அண்ணனாக நடித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி தீபா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதுபோல தீபாவும் விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேத்ரன் தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் அபிநயா கனா காணும் காலங்கள் சீசன் 2 பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்று நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது தந்தை மகள் காம்போ பெரிய அளவில் பேசப்பட்டது. இருவரும் அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வானார்கள்.
இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு அபிநயா அவருடைய instagram பக்கத்தில் அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டிவ். சர்ஜரி பண்ணிட்டாங்க. கல்லீரல் டேமேஜ் ஆகி இருக்குனு மறுபடியும் வச்சிருக்காங்க. அப்பா சீக்கிரம் சரியாகி வரணும் நீங்க எல்லாரும் ப்ரே பண்ணிக்கோங்க என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் இயற்கை எய்திருக்கிறார்.
நேத்ரனின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கி இருக்கிறது. அவருடைய நண்பர்கள் பலரும் அவருடைய நினைவுகள், அவரை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நேத்ரன் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அதில் தன்னுடைய இரண்டாவது மகள் அஞ்சனா கோதுமை பிஸ்கட் செய்தது பற்றி சந்தோஷமாக பகிர்ந்து இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் எந்த போஸ்ட்டும் பகிரவில்லை. இந்த பதிவிற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே நேத்ரன் மற்றும் அவருடைய மனைவி தீபா மகள்களுடன் பல பேட்டிகளில் குடும்பமாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது தங்களைப் போலவே தங்களுடைய குழந்தைகளும் காதலித்து திருமணம் செய்து கொண்டால் நாங்கள் சப்போர்ட் செய்வோம் என்று கலகலப்பாக பேசியிருப்பார்கள். அதுபோல நேத்ரனின் மகள் அபிநயா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னுடைய அப்பா புற்றுநோயிலிருந்து போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு புற்றுநோய் பாசிட்டிவ் என்றபோது நாங்கள் எல்லோரும் உடைந்து போயிட்டோம். ஆனால் எங்களுக்கு அப்பா தான் ஆறுதல் சொன்னார். அவரை போல பாசிட்டிவான நபரை நான் பார்க்கவே முடியாது. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்று சொல்வார். எங்களுக்கும் அதே தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருப்பார்.
அப்பாவுக்கு ஒன்று என்றால் நாங்கள் உடைந்து போய் விடுவோம். ஆனால் எப்போதும் அப்பா சந்தோஷமாகவே இருப்பார். நாங்களும் அதுபோல இருக்க வேண்டும் என்று நினைப்பார். விரைவில் அவர் முழுமையாக குணமடைந்ததும் உங்களிடம் லைவில் பேசுவார் என்று பேசி இருந்தார். ஆனால் நேற்று எல்லோருடைய நம்பிக்கையும் பொய்யாய் போகும் வகையில் நேத்ரன் காலமான செய்தி வந்து சேர்ந்ததும் ரசிகர்கள் அது குறித்து உருக்கமாக வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications