Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் இன்னொரு முகம்! வெளியே தெரியாத விஷயம் இருக்கு! பிஸ்மி பகீர் தகவல்!
சென்னை: சினிமா பின்புலம் எதுவுமில்லாமல், தொகுப்பாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் வெற்றிக்குக் காரணம் அவரது உழைப்பு மட்டுமல்ல, நன்கு திட்டமிடப்பட்ட நகர்வுகளும்தான் என்று மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிப் பயணம்
சிவகார்த்திகேயனின் பயணம் பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம். விஜய் டிவியில், 'அது இது எது', 'ஜோடி நம்பர் 1' போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் எதார்த்தமான பேச்சால், கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றார். இந்த பிரபலமே அவரை வெள்ளித்திரைக்கு அழைத்துச் சென்றது.
2012-ல் 'மெரினா' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'எதிர்நீச்சல்', 'மான் கராத்தே' எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக உருவெடுத்தார். 'டாக்டர்', 'டான்' போன்ற படங்கள், ₹100 கோடி கிளப்பில் இடம்பிடித்து, அவரது மார்க்கெட்டை உச்சத்துக்குக் கொண்டு சென்றன.
திட்டமிட்ட வளர்ச்சி - பிஸ்மியின் பகீர் கருத்து
வலைப்பேச்சு பிஸ்மி, சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்துப் பேசும்போது, சில சுவாரசியமான, ஆனால் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். "சிவகார்த்திகேயனைவிட திறமையானவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைக்காத இந்த உச்சம் இவருக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்குப் பின் சில விஷயங்கள் இருக்கிறது. தன்னை எப்படி மார்க்கெட்டிங் செய்து கொள்ள வேண்டும் என்பதில் பக்கா பிளான் சிவகார்த்திகேயனிடம் இருக்கிறது" என்று பிஸ்மி கூறினார்.
அவரது முன்னாள் மேலாளர் ஆர்.டி. ராஜா தான் இதற்கு முக்கியக் காரணம் என்று பிஸ்மி குறிப்பிட்டார். "சிவகார்த்திகேயன் பற்றி எந்தவொரு எதிர்மறை கருத்தும் பரவாமல் அவர் பார்த்துக் கொள்வார். அதை மீறி யாராவது எழுதினால், 'இவர் எம்ஜிஆர் மாதிரி, கடவுளின் குழந்தை' என்று பேசி அவர்களின் மனதை மாற்றி விடுவார்" என்றார். மேலும், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை மிஞ்ச வேண்டும் என்பதே சிவகார்த்திகேயனின் எண்ணம் என்றும், அதற்காக ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் தனது சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்தியதாகவும் பிஸ்மி கூறினார். "இப்பொழுது நாம் சம்பளத்தை உயர்த்தினால், இரண்டு நடிகர்களைக் கீழே இறக்கி நாம் மேலே சென்றுவிடலாம்" என்ற எண்ணம்தான் இதற்குப் பின்னால் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மதராஸி
பிஸ்மியின் கூற்றுப்படி, 'மதராஸி' திரைப்படம் சிவகார்த்திகேயன் யார் என்பதைத் தீர்மானிக்கும் படமாக அமையும். "அமரன் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். அந்தப் படத்தில் எந்த ஹீரோ நடித்திருந்தாலும் நன்றாக ஓடியிருக்கும். ஆனால், 'மதராஸி' படம் தான் 300 கோடி வசூல் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் சிவகார்த்திகேயன் மீது இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் 'கோட்' படத்தில் இடம்பெற்ற துப்பாக்கி காட்சிக்குப் பிறகு, "அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான்" என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பி வரும் நிலையில், பிஸ்மியின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது
"அடுத்த தளபதி சிவகார்த்திகேயன்" என்று ரசிகர்கள் பலமுறை கூறியபோது, "அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்" என்று சிவகார்த்திகேயன் பதிலளித்தார். இருப்பினும், அவரது நடவடிக்கைகள், விஜய்யின் இடத்தைப் பிடிப்பதற்கான ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு அவரது உழைப்பு, திட்டமிடல், மற்றும் ரசிகர்களுடனான அவருடைய இணைப்பு ஆகியவை காரணமாகக் கூறப்படுகிறது. அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், திரையுலகில் அவர் அடைந்திருக்கும் வெற்றி மறுக்க முடியாதது.












Click it and Unblock the Notifications