நடிகர் சில்வாவுக்கு 'சிறந்த ஸ்டண்ட் இயக்குநர்' விருது: பின்னணி கலைஞர்களின் வலியை நினைவூட்டிய கௌரவம்!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநரான ஸ்டண்ட் சில்வா, 2025 ஆம் ஆண்டுக்கான 'மனோரமா கேரளா மாநில சிறந்த ஸ்டண்ட் இயக்குநர்' விருதை வென்றுள்ளார். இந்த விருது, அவருடைய கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

ஸ்டண்ட் சில்வாவின் சாதனைகள்
ஸ்டண்ட் சில்வா, தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் ஸ்டண்ட் இயக்குநராக மட்டுமல்லாமல், பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். வில்லன் கதாபாத்திரங்களில் வெற்றிகரமாக நடித்து, தனது பன்முகத்திறமையை நிரூபித்துள்ளார். பொதுவாக சினிமாவில் ஒரு சிலரை பார்த்தால் தான் கோபம் பயமும் ஏற்படும். அதுபோல ஒரு நடிகர்தான் சில்வா இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை இயல்பாக காட்டி வருகிறார்.
பல விருதுகள்
சில்வாவின் சிறந்த பணிகளை பாராட்டி அவருக்கு ஏற்கனவே SIIMA விருது, எடிசன் விருது மற்றும் தமிழ்நாடு அரசு விருதுகள் என பல விருதுகள் கிடைத்துள்ளன. இப்போது இந்த வரிசையில் கேரள அரசின் இந்த முக்கிய விருதையும் அவர் தன்னுடைய சாதனைகளின் பட்டியலில் இணைத்துள்ளார்.
பின்னணி கலைஞர்களின் வலிகள்
சமீபத்தில், ஒரு சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இவரைப் போல பல பின்னணி கலைஞர்கள் தினசரி தங்கள் உயிரைப் பணயம் வைத்துதான் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து வருகிறார்கள்.
கனமான மனசு
பிரபல நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்களின் வலியை பற்றி பலமுறை பேசியிருக்கிறார்கள். "சண்டைக் காட்சிகள் இல்லாத ஒரு படமே இல்லை. படம் முழுவதையும் தாங்குபவர்கள் சண்டைக் கலைஞர்கள்தான். ஒரு சண்டை காட்சியில் ஹீரோ அடிபட்டு விட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவும் கவலைப்படும். ஆனால் ஸ்டண்ட் கலைஞர்கள் அடிபட்டு விட்டால் அடுத்த சீனுக்கு செல்வோம்" என்று ஒருமுறை பிரபல இயக்குனர் ஒருவர் உருக்கத்துடன் பேசியிருந்தார்.
பாதுகாப்பு குறைபாடு
ஸ்டண்ட் காட்சிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதால், பல கலைஞர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் தியாகம் செய்கிறார்கள். சிலருக்கு நிரந்தர காயங்கள் ஏற்படுகின்றன. ஸ்டண்ட் சில்வாவுக்கு கிடைத்த இந்த விருது, இதுபோன்ற கலைஞர்களின் உழைப்பிற்கும், வலிகளுக்கும் கிடைத்த கௌரவம்.
விருதுக்கான படங்கள்
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்த 'எம்புரான் L2' மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'துடரும்' ஆகிய மலையாளப் படங்களுக்காக, ஸ்டண்ட் சில்வாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படங்களில், சில்வாவின் ஸ்டண்ட் காட்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. வித்தியாசமான யோசனைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை இணைத்து சண்டை காட்சிகளை அமைக்கும் அவரது திறமைக்கு இதுவே சிறந்த அங்கீகாரம். அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications