Tamil Nadu Television Awards: சின்னத்திரை விருதில் ஏற்பட்ட குழப்பம்.. திருத்தப்பட்ட பெயர், இவங்களுக்கு தான் அவார்டு!
சென்னை: (Tamil Nadu Television Awards 2014-2022 ) 2014 முதல் 2022ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. வரும் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்க உள்ளார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசு சார்பில் சின்னத்திரை கலைஞர்களுக்கு கவுரவம் கிடைப்பது பாராட்டுக்குரிய விஷயம் தான். ஆனால், விருது பட்டியல் வெளியான உடனே பல குழப்பங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
ஒன்பது ஆண்டுகளுக்கான விருதுகளை ஒரே நேரத்தில் அறிவித்தது, அதுவும் தேர்தல் சூழலை கருத்தில் கொண்டு அவசரமாக முடிவெடுத்தது போல இருப்பதாக சின்னத்திரை துறையில் உள்ளவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். "அனைத்து ஆண்டுகளையும் சேர்த்து ஒரே பட்டியலில் கொடுத்தால் தவறுகள் வருவது இயல்புதான்" என்றாலும், தேர்வில் தெளிவின்மை இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

பூவே பூச்சூடவா விருது விவகாரம்
சர்ச்சைக்கான ஒரு முக்கிய உதாரணமாக 'பூவே பூச்சூடவா' சீரியல் விவகாரம் பேசப்படுகிறது. இந்த சீரியலுக்கு சிறந்த தொடருக்கான விருதும், அதை இயக்கிய ரத்னம் வாசுதேவனுக்கு சிறந்த இயக்குநர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சீரியல் 1100-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகிய நிலையில், முதல் 700 எபிசோடுகள் வரை இயக்கியவர் மணிகண்டன். நீண்ட காலமாக சீரியலை கட்டியெழுப்பியவருக்கு எந்த அங்கீகாரமும் இல்லாமல், கடைசி கட்டத்தை இயக்கியவருக்கு மட்டும் விருது கொடுத்தது நியாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
"இது சாம்பிளுக்கு ஒரு பிரச்சனை தான். இதே மாதிரி இன்னும் பல விருதுகளில் யார் உண்மையில் அந்த வேலை செய்தார்கள் என்ற குழப்பம் இருக்கிறது" என்று துறையில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.
சுந்தரி சீரியல் விருது மாற்றம்
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விருது பட்டியலில் ஒரு முக்கிய மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான 'சுந்தரி' சீரியலுக்கான சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது முதலில் விஜயலட்சுமி என்பவருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த விருது ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் பிரபல சேனல் ஒன்றில் பேசும்போது, "இது ஒரு சின்ன பிரச்சனை. விஜயலட்சுமி வசனம் எழுதும் பணியில் இருந்தவர். ஆனால், விண்ணப்பத்தில் தவறுதலாக அவருடைய பெயர் திரைக்கதை ஆசிரியர் என்று போயிருக்கிறது. அதிகாரிகள் விண்ணப்பத்தில் இருந்த தகவலையே அடிப்படையாக வைத்து விருது அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் தவறை சுட்டிக்காட்டி ஆதாரங்கள் கொடுத்த பிறகு தான் அரசு தரப்பில் திருத்தம் செய்ய ஒப்புக் கொண்டார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "இந்த தவறை புரிந்து கொண்டு சரி செய்த அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி. அதே நேரத்தில், 'இந்த விருது அவருக்கானது' என்று முதலில் குரல் கொடுத்த விஜயலட்சுமிக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி சொல்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் இந்த விருதுகள் குறித்து இரு விதமான கருத்துகள் நிலவுகின்றன. ஒருபுறம், "பல ஆண்டுகளுக்குப் பிறகு அரசு சின்னத்திரையை கவனிச்சதே பெரிய விஷயம். இதையே வரவேற்கணும்" என்று சிலர் பாராட்டுகிறார்கள். மறுபுறம், "விருதுகள் அரசியல் அவசரத்தில் கொடுக்கப்படுவது போல தெரிகிறது. தேர்வு குழு இன்னும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட குழப்பங்கள் தொடர்ந்து வரும்" என்று விமர்சனமும் எழுகிறது.
அரசின் நிலைப்பாடு
அரசு தரப்பில், விருது பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால், உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கும்போது திருத்தம் செய்யத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 'சுந்தரி' சீரியல் விவகாரத்தில் நடந்த மாற்றமே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் சில அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில், சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டது ஒரு நல்ல முயற்சி தான். ஆனால், விருது பட்டியலில் ஏற்பட்ட குழப்பங்கள், தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இனிமேல் வரும் ஆண்டுகளில், விருதுகள் வருடந்தோறும் முறையாக வழங்கப்பட்டால் தான் இந்த மாதிரியான சர்ச்சைகளையும், கலாய்ப்புகளையும் தவிர்க்க முடியும் என சின்னத்திரை ரசிகர்களும், கலைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications