Vijay: ஜூலியை தொடர்ந்து, விஜய்க்கு அட்வைஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட நடிகை ஊர்வம்பு லட்சுமி!
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சமீபத்தில் வேலூரில் சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த கூட்டத்தில் அவர் கண்கலங்கி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில், அவர் பேசிய "குட்டி ஸ்டோரி" கூட பெரிதாக பேசப்பட்டு பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி, அந்த குட்டி ஸ்டோரி குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அவரது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், விஜய் ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிராக வீடியோக்கள் வெளியிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.

இந்த விவகாரம் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான ஊர்வம்பு லட்சுமியும், விஜய் கண்கலங்கி பேசியது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் லட்சுமி பேசும்போது, "2026 தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனல் பறக்கும் கூட்டங்கள் எல்லா பக்கமும் பறந்துகிட்டு இருக்கு. இந்த நேரத்தில் நான் விஜய், அதாவது திவிக தலைவர் விஜய் கிட்ட ஒரு விஷயத்தை சொல்லி ஆகணும். நான் சமீபத்தில் அவருடைய வேலூர் கூட்டத்தில் பேசிய வீடியோவை பார்த்தேன். அவர் கண் கலங்கிய அந்த நொடி பார்க்கவே ஒரு மாதிரி எமோஷனலாக இருந்தது.
அதேபோல இதை பார்க்கும் சிலருக்கு உங்களுடைய எமோஷனல் புரியும். ஆனால் பலருக்கு இது புரியாது. நாம ஒரு நடிகனாக இருப்பதால், 'இவங்க நடிகன் தானே, அதனால நடிக்கிறாங்க' என்று சொல்லுவாங்க. இங்கே எடுத்த உடனே எந்த பதவியையும் யாராலும் அடைய முடியாது. நிறைய போராடனும், நிறைய வலிகளை தாங்கனும். அதற்குப் பிறகுதான் நமக்கான வெற்றி கிடைக்கும்.
நீங்க எந்த சூழ்நிலையிலும் அழக்கூடாது. உங்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடாது. அதேபோல உங்களுடைய எமோஷனல் எதிரிகளுக்கு பலமாக இருக்கும். அது நம்முடைய பலவீனமாக மட்டும் இருந்துவிடவே கூடாது," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் மற்ற எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் குறித்து பேசும்போது, "அரசியலில் கண்ணியம் மிக மிக முக்கியம். 2026 இல் எத்தனையோ முன்னேற்றம் வந்திருக்கிறது. இனியாவது நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை பர்சனலாக அட்டாக் பண்ணுவது இல்லாமல் நாகரிகமான அரசியலை பேண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல மக்களும் இலவசத்துக்கும் பணத்துக்கும் விலை போகாமல் நமக்கான தலைவரை நாம தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
விஜய் அரசியல் பயணம் குறித்து பார்க்கும்போது, திரைப்பட துறையில் முன்னணி நடிகராக இருந்த அவர், தனது மக்கள் ஆதரவை அரசியலுக்கு மாற்றும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இளைஞர்கள் மற்றும் ரசிகர் மன்ற அமைப்புகளை அரசியல் அமைப்பாக மாற்றிய அவர், மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்பு, மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.
2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி அவர் தனது கட்சி அமைப்பை வலுப்படுத்திக் கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சமூக நீதி, இளைஞர் முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளை முன்வைத்து பேசிவரும் விஜய், தனது உரைகளில் உணர்ச்சிப் பூர்வமான அணுகுமுறையையும் காட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications