பராசக்தி டைட்டில் விட்டு கொடுக்க காரணமே இதுதான்! ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி.. பெரிய மனது தான்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதர்வா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பே அந்த பெயருக்கான உரிமத்தை விஜய் ஆண்டனி பெற்றிருந்தார். ஆனால் பராசக்தி என்று சிவகார்த்திகேயன் படத்திற்கு பெயர் வைத்திருந்த போது தான் வாங்கிய உரிமையை விஜய் ஆண்டனி விட்டுக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் எதற்காக தான் இந்த டைட்டில் உரிமையை விட்டுக் கொடுத்தேன் என்று விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்திருக்கிறார். அவரின் பெருந்தன்மையை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கராவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டு அதற்கான டீசர் வெளியிடப்பட்டது. இதற்கிடையே விஜய் ஆண்டனி பராசக்தி டைட்டிலை கடந்த ஆண்டு தான் பதிவு செய்ததாக, அதற்கான தேதியை வட்டமிட்டு காண்பித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இது அதன் நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

விஜய் ஆண்டனி விளக்கம்
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் மார்கன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி பதில் கொடுத்திருந்தார். அப்போது அவர் பேசும் போது, டைட்டில் பிரச்சனை என்னுடைய சினிமா கேரியரில் ஒருமுறைதான் நடந்திருக்கிறது. அது அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படத்துடன் நடந்ததுதான். அது தெரியாமல் நடந்த ஒரு விஷயம் தான்.
பராசக்தி பட டைட்டில் பிரச்சனை
அவர்களுக்கு அந்த டைட்டில் என்னிடம் தான் இருக்கிறது என்பது தெரியாது. திரைத்துறையில் பதிவு செய்வதற்கு என்று இரண்டு மூன்று யூனியன்கள் இருக்கின்றன. இது இங்கு எதேர்ச்சியாக நடந்த விஷயம் தான். அவர்கள் அந்த டைட்டிலை அறிவித்து விட்டார்கள். அது மக்கள் மனதில் பதிந்து விட்டது என்பதால் நானே அந்த டைட்டிலை அவர்களுக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன். நட்பு ரீதியாக இதனை நான் செய்தேன்.

டைட்டில் விட்டு கொடுக்க காரணம்
காரணம் எனக்கு ஒரு தயாரிப்பாளரின் வலியும் வேதனையும் நன்றாகவே தெரியும். தெரியாமல் இதுபோன்று டைட்டில் பிரச்சனை வருவது இயல்புதான். நாம் ரோட்டில் வாகனத்தை ஓட்டி செல்கிறோம் என்றால் விபத்து என்பது எதிர்பாராத விதமாக நிகழுமே தவிர அதை வேண்டுமென்று யாரும் செய்ய மாட்டார்கள். அப்படித்தான் நானும் இந்த சம்பவத்தை பார்க்கிறேன். சினிமாவில் இதுபோன்று சில பிரச்சனைகள் எப்போதாவது நிகழும். இதில் நான் மாட்டியிருந்தேன் அதற்கு வேறு யாரும் காரணம் இல்லை.
பெரிய மனது
அன்புக்காக தான் நான் விட்டுக்கொடுத்தேன் என்று பராசக்தி டைட்டில் பஞ்சாயத்துக்கு விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி முருகன் திரைப்படம் அவருடைய 25ஆவது திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் ஆக்ஷன், பேமிலி கலந்த என்டர்டைன்மென்டாக இருக்கும் என்று பட குழு தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பகத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications