எல்லாமே கடன் தான்.. மாதம் வட்டி கட்டுறேன்.. ஆனாலும், விஜய் ஆண்டனி எமோஷனல் பேச்சு
சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிக்கும் மார்கன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது அதில் பேசிய விஜய் ஆண்டனி தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்கள் குறித்து பேசி இருந்தார். தொடர்ந்து கடன் வாங்கி தான் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறேன், அந்த பணத்திற்கு வட்டிகட்டி கொண்டு இருக்கிறேன், ஆனாலும் புதிய படங்களை தயாரிக்க என்ன காரணம் என்று பேசியிருக்கிறார்.
இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி இசை அமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அவருடைய பாடல்கள் எல்லாமே கேட்பவர்களை டான்ஸ் ஆட வைக்கும் அளவிற்கு துள்ளல் இசையோடு இருக்கும். ஆனால் அவர் நடிகராக அறிமுகமான பிறகு படிப்படியாக தான் இசை அமைப்பதை குறைத்து இருந்தார். இப்போது மீண்டும் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் நடிக்கும் பனிரெண்டாவது படத்திற்கு மார்கன் என்று பெயர் வைத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் மார்கன்
இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாக தயாரித்து இசையமைத்திருக்கிறார். அதுபோல அட்டகத்தி, இன்று நாளை காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் எடிட்டரான லியோ ஜான் பால் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதோடு விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் தான் வில்லனாக நடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி விளக்கம்
இந்த திரைப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை பட குழு நேற்று வெளியிட்டது. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி பேசும் போது நான் தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதை பார்த்து என்னிடம் நிறைய பணம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. எல்லாமே கடன் தான். அதற்கு மாதாமாதம் வட்டியும் கட்டி வருகிறேன்.
பிச்சைக்காரன் திரைப்படம்
டிஷ்யூம் படத்தின் மூலம் இயக்குனர் சசி சார் என்னை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்தார். அதே இயக்குனர் சசி 15 ஆண்டுகள் கழித்து பிச்சைக்காரன் படத்தின் மூலம் என்னை ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இப்போது நாங்கள் மீண்டும் இணைகிறோம். நான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு பிச்சைக்காரன் திரைப்படம் தான் பெரிய திருப்பத்தை கொடுத்தது.
முடிவில் மாற்றம்
இதுவரை நான் நடித்த படங்களை மட்டுமே தயாரித்திருந்தேன். இனிவரும் வருடங்களில் என்னுடைய பொருளாதார நிலைமையை பார்த்து மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பேன் என்று நினைக்கிறேன். அதுபோல இப்பொழுது என்னுடைய படங்களுக்கு இசையமைப்பது நான் தான். இனி மற்ற மொழி படங்களுக்கும் நான் இசையமைக்க உள்ளேன் என்று விஜய் ஆண்டனி பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications