Vijay: விஜய் மட்டுமல்ல அஜித்தும் அப்பவே இப்படித்தான் சொன்னாரு! இப்போ அதுதானே நடக்குது! நடிகை ஓபன்
சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில், எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு அடுத்து ரஜினி - கமல் எப்படி பல சாதனைகளைப் படைத்து முடி சூடா மன்னர்களாக வலம் வந்தார்களோ, அதேபோலத் தங்களுக்கு அடுத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகைத் தங்கள் கைகளில் வைத்திருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித் மட்டுமே. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே இரட்டையர்களாகவே சினிமாவில் வலம் வரத் தொடங்கினார்கள். இருவரும் ரொமாண்டிக் ஹீரோக்களாக இருந்து, பின்னர் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறினார்கள்.
ஆனால், இந்த இரட்டையர்கள் புகழின் உச்சிக்குச் செல்வதற்கு முன், நடிகர் பிரசாந்த் போன்ற சிலர் டாப் ஹீரோக்களாக இருந்தனர். எனினும், காலப்போக்கில், விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களுக்கு இடையேயான போட்டியை ஆரோக்கியமாக முன்னெடுத்து, அசைக்க முடியாத சக்திகளாக மாறினார்கள். இப்போது, இந்த இருவரின் சமகால நடிகை ஒருவரே, இவர்களின் ஆசைகளைப் பற்றி ஒரு ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

இரண்டு நட்சத்திரம்
நடிகர் விஜய் தன் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்திலேயே பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவருடைய சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்த படம், 'பூவே உனக்காக'. இந்தப் படத்திற்குப் பிறகுதான் விஜய், 'காதல் மன்னன்' என்ற பிம்பத்திற்கு மாறினார். அதேபோல், நடிகர் அஜித்துக்கும் 'ஆசை' காதல் கோட்டை போன்ற திரைப்படம் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. பூவே உனக்காக, காதல் கோட்டை போன்ற படங்களுக்குப் பிறகுதான், இருவரின் மாஸ் ரசிகர் கூட்டம் தெரிய ஆரம்பித்தது.
இப்படித் திரையுலகில் வெற்றிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த இருவரும், இப்போது தங்கள் கனவுப் பாதைகளில் முழுமையாக இறங்கிவிட்டார்கள். விஜய் இப்போது அரசியலில் மும்முரமாக இருக்கிறார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம்தான் அவர் நடிக்கும் கடைசி படமாகும். இன்னொரு பக்கம், அஜித் தன் தீராத ஆர்வமான பைக் ரேஸிலும், கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் ஸ்பெயினில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் ஆசை
விஜய்யை பொறுத்தவரைக்கும், அரசியலுக்கும் தனக்கும் வெகு தூரம் என்று ஒரு பழைய பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், இப்போது அரசியலில் இறங்கி மற்ற கட்சிகளுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறார். இவருடைய அரசியல் வருகை அவரது சுயநலத்திற்காகத்தான் என்றும் பல பேர் கூறி வருகிறார்கள். ஏனென்றால், 'தலைவா' படத்தில் அவர் பட்ட கஷ்டம், 'மாஸ்டர்' திரைப்படத்தின் போது ஐடி ரெய்டில் சிக்கியது என அரசியல் சார்ந்த பிரச்சனைகளில் அவர் மனதளவில் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளானார். அதற்கு பதிலடி கொடுக்கவே அவர் அரசியலுக்கு வந்ததாகவும் பேசப்பட்டது.
ஆனால், விஜய்யின் அரசியல் ஆசை இப்போது முளைத்தது அல்ல என்று, அவருடன் 'செல்வா' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சுவாதி கூறியிருப்பதுதான் புதிய பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
யார் இந்த சுவாதி
சுவாதி, 90களின் இறுதியில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக இருந்த நடிகை. இவர் அஜித்துடன் 'வான்மதி' படத்தில் அவருக்கு ஜோடியாகவும், விஜய்யுடன் 'செல்வா' படத்தில் ஜோடியாகவும் நடித்தவர். இருவருமே தங்கள் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தபோதே, அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அதனால், விஜய் - அஜித் இருவரின் ஆசைகள் பற்றியும், மன ஓட்டம் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. பொதுவாக, மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்கும் சுவாதி, இதுபோன்ற திரைப் பயணத்தின் நினைவுகள் பற்றிப் பேசும்போது, தன் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுவார்.
சுவாதி சொன்ன ரகசியம்
சமீபத்தில் ஒரு பேட்டியில், நடிகை சுவாதி ஒரு ரகசியத்தை உடைத்திருக்கிறார். அந்த சமயத்திலேயே விஜய்யும் அஜித்தும் அவருடன் பேசும்போது தங்கள் ஆசைகளைக் கூறியிருக்கிறார்கள். விஜய்க்கு அரசியல் ஆர்வம் அப்போதே இருந்ததாம். அதே போல், அஜித்துக்கும் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் ஆர்வம் இருந்ததாம்.
அதைத்தான் இருவரும் இப்போது செயல்படுத்தி வருகிறார்கள். அதனால், அவர்களைப் பற்றிய இந்தச் சீக்ரெட் தனக்கு அப்போதே தெரியும் என்று சுவாதி கூறியிருக்கிறார்.
நடிகை சுவாதி அளித்த இந்தத் தகவல், விஜய்யின் அரசியல் வருகை என்பது, தலைவா படத்தின் சிக்கல்களுக்குக் கிடைத்த பதிலடி அல்ல; அது, அவர் தன் இளமைக் காலத்தில் இருந்தே வளர்த்து வந்த ஒரு கனவு என்பதை நிரூபிக்கிறது. அதேபோல், அஜித்தின் ரேஸ் ஆர்வம் என்பது ஒரு தற்காலிகமான விஷயம் அல்ல; அது, அவருடைய ரத்தத்திலேயே ஊறிய ஒரு தீராத ஆர்வம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. காலம் எவ்வளவு மாறினாலும், இந்த இரண்டு நட்சத்திரங்களும் தங்கள் ஆரம்ப கால ஆசைகளை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.












Click it and Unblock the Notifications