மறைந்தாலும் மறையாத விஜயகாந்தின் புகழ்.. 1 வயதிலே அம்மாவை இழந்து பட்ட வேதனை.. தந்தைக்காக உருவாக்கிய பாடல்
சென்னை: நடிகர் விஜயகாந்த் இன்று உடல் நல குறைவினால் காலமாகி விட்டார். இந்த செய்தி ரசிகர்களையும் பொது மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் விஜயகாந்த் பற்றி பல நினைவுகளை ரசிகர்கள் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர். அதில் விஜயகாந்த் குறித்து அவருடைய மனைவி தங்களுக்கு திருமணம் எந்த மாதிரி சூழ்நிலையில் நடைபெற்றது என்பதை குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சாதாரண ஒரு குடிமகனாகவே பலருக்கும் பல உதவிகளை செய்து பல தரப்பினருக்கும் பிடித்த நபராக இருந்தார். அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறிய போதிலும் எந்த இடத்திலும் எதற்கும் பயப்படாமல் துணிச்சலாக செயல்பட்டு வந்த விதமும் பலரையும் கவர்ந்தது.
அதுபோல விஜயகாந்த் பிரேமலதாவை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி அவரை எப்படி தான் திருமணம் செய்து கொண்டேன் என்பது பற்றியும் அவருடைய மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நான் முதல் முதலாக விஜயகாந்தை பார்த்தது அவர் என்னை பெண் பார்க்க வந்த போது தான். அவர் என்னை பெண் பார்க்க வருகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் எனக்கு வேலூர் அவருக்கு மதுரை. எங்கள் குடும்பத்திற்கும் அவருக்கும் எந்த நெருக்கமும் கிடையாது. நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது உழவன் மகன் திரைப்படம் பார்த்து அவருடைய ரசிகையாக மாறி இருந்தேன். ஆனால் அவரே என்னை பெண் பார்க்க வருகிறார் என்றதும் என்னுடைய குடும்பத்தினர் அவரை எப்படி வரவேற்பது என்று ஆவலோடு காத்திருந்தனர்.
எல்லோருக்குமே தெரியும் விஜயகாந்த் சபரிமலைக்கு மாலை அணிந்து போவார் என்பது. அந்த மாதிரி தான் அவர் என்னைப் பெண் பார்க்க வரும்போது காவி வேஷ்டி சட்டை அணிந்து ஒரு சாமியார் போல காலில் செருப்பு கூட போடாமல் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் என் அம்மாவுக்கு ரொம்பவே பிடித்து போனது.

அவர் நடந்து வரும்போது அமைதியாக சாந்தமாக இருந்ததை பார்த்ததும் என்னுடைய அம்மா எனக்கு இவரை பார்க்கும்போது ஒரு நடிகர் என்றோ, என்னுடைய பெண்ணை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கிறார் என்பது போன்று கூட தோன்றவில்லை என்னுடைய தம்பி போல இருக்கிறார் என்று எங்க அம்மா சொல்லிவிட்டார்.
என்னை விடவும் என்னை எங்களுக்கு திருமணம் நடந்துவதில் என்னுடைய அம்மா ஆர்வமாக இருந்தார். அப்போது எல்லார் வீட்டில் நடப்பது போன்று பெண் பார்க்கும் படலம் நடந்தது. நான் காபி கொடுத்ததும் காஃபியை குடித்துவிட்டு "காபி சூப்பர்" என்று கேப்டன் சொன்னார். எங்களுக்கு புரிந்து விட்டது. அவர் என்னை பிடித்திருக்கிறது என்று சொல்கிறார் என்று, பிறகு தொலைபேசியில் தான் என்னிடம் முதல் முதலில் பேசினார். அவருடைய குரலை போனில் கேட்ட போது என்னுடைய கை கால் எல்லாம் எனக்கு வெடவெடத்து போனது.
அவருடைய கட்டையான குரலில் ஹலோ என்றார். பிறகு பேசிப் பார்த்த பிறகு தான் எனக்கு அவர் வெள்ளந்தியான மனிதர் என்பது தெரிந்தது. அவர் எனக்கு கணவராக கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு விஜயகாந்த் 1 வயதில் இருக்கும்போதே அவருடைய அம்மா இறந்து போய்விட்டார். அதற்கு பிறகு அவருடைய அப்பா தான் வளர்த்து வந்திருக்கிறார்.
அதனால் தான் விஜயகாந்த்க்கு லேட்டாக திருமணம் நடந்திருக்கிறது. அவருடைய அப்பாவின் பாசத்தை வைத்து தான் "வானத்தைப்போல திரைப்படத்தில் கூட சேவல் ஒன்று அடைகாக்கிறது" என்பது போல பாடல் வரும் என்றும் அந்த பேட்டியில் பல ரகசியங்களையும் பிரேமலதா விஜயகாந்த் பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல இத்தனை நாட்களாக கம்பீரமான ஒரு தலைவராகவும், ஒரு சகோதரனை போலவும் பலருக்கும் இருந்து வந்த விஜயகாந்த் இன்று இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து போய் இருக்கிறார். அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் நாட்டு மக்களையே உலுக்கி இருக்கிறது. பல ரசிகர்கள் கண்ணீரோடு கதறி அழுது கொண்டிருக்கின்றனர். விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய நம்முடைய சார்பாகவும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.












Click it and Unblock the Notifications