டிடி நேஷனலில்.. கேரளா ஸ்டோரி திரைப்படம்! கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம்
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் டிடி நேஷனல் சேனலில் இன்று இரவு ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான கேரள ஸ்டோரி திரைப்படம், கடும் விமர்சனங்களை பெற்றிருந்தது. கேரளாவை சேர்ந்த 32,000 இளம்பெண்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக இந்த திரைப்படம் கூறுகிறது. எனவே, இந்த திரைப்படத்தை திரையிட கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான போலியான கருத்து பிம்பத்தை இந்த திரைப்படம் கட்டமைப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இருப்பினும் வட மாநிலங்களில் திரைப்படத்திற்கு பெரியதாக எதிர்ப்பு எழவில்லை.
இந்நிலையில், தற்போது தேர்தல் நெருங்கும் சூழலில், கேரள ஸ்ரோடரி திரைப்படம் டிடி நேஷனல் சேனலில் இன்றிரவு ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது x சோஷியல் மீடியா தளத்தில்,
“பிரிவினையை தூண்டும் கேரள ஸ்டோரி திரைப்படத்தை திரையிடுவதாக டிடி நேஷனல் எடுத்துள்ள முடிவு கண்டனத்திற்குரியது. ஒளிபரப்புதுறை பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் பிரசார இயந்திரமாக மாறக்கூடாது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், வகுப்புவாத பிரசாரங்களை அதிகரிக்கும் இந்த படத்தை திரையிடக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இம்மாதிரியான திட்டங்களை கேரளா உறுதியாக எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியும், டிடி நேஷனல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அம்மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.டி.சதீசன்,
“மோடி தலைமையிலான இந்த நடவடிக்கை சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்குள் முரண்பாட்டை வளர்க்க மோடி தலைமையிலான அரசாங்கம் திரைப்படத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றது. மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறல்” என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கேரளா ஸ்டோரி என்பது மிகவும் தவறான பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரச்சாரப் படம் என்பதும், இது கேரளா குறித்த தவறான பார்வை உருவாக்க முனையும் படம் என்பது உங்களுக்கு தெரியும். மத அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும். எனவே கேரளா ஸ்டோரியை திரையிடும் முயற்சியை டிடி நேஷனல் கைவிட்டு விலக வேண்டும். இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications